தஞ்சைப் பெருவுடையார் கோவில்

தமிழ் நாட்டின் தஞ்சாவூரில் காவேரி ஆற்றின் தெற்கில் கம்பீரமாய் நிமிர்ந்து நிற்கும் ஒரு அதிசய அழகு. கட்டடக் கலையிலும் சரி, சிற்பக் கலையிலும் சரி தமிழன் கொண்டிருந்த வியத்தகு நுண்ணறிவைத் தனக்குள் பொதிந்து வைத்திருக்கும் ஒரு வரலாற்று ஆச்சரியம்.

தமிழருடைய பாரம்பரிய மேன்மைகளைப் பறைசாற்றிக் கொண்டிருக்கும் ஒரு கலாசாரப் பொக்கிஷம்.

ஏறத்தாழ 1010 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்தப் புராதன கோவிலை உருவாக்கியவன், ராஜராஜ சோழன் எனப் பலராலும் போற்றப்படுகின்ற அருண்மொழித்தேவன் எனும் சோழ மன்னன் என்பது தமிழினத்தின் தனிப்பெருமை.

இப்படி ஒரு கோவிலைக் கட்டவேண்டும் என்ற எண்ணம் தோன்றிய வினாடியிலிருந்து அதற்குரிய ஒரு பொருத்தமான இடத்தைத் தேடுவதிலே ராஜராஜ சோழனுடைய முழுக்கவனமும் இருந்தது. எனினும், அவர் எதிர்பார்ப்புக்கமைய எந்த இடமும் சரியாக அமையவில்லை. ஒரு நாள் மன்னன் வேட்டைக்குப் போகிறான். எதிரில் ஒரு பன்றி மன்னனை எதிர்த்து நின்றது. வேட்டையாடும் நோக்கில் ராஜராஜன் அந்தப் பன்றியைத் துரத்திச் செல்கிறான். அந்தச் சிறிய பன்றி அவனிடம் பிடிபடவில்லை. மாறாகப் போக்குக் காட்டியபடியே பல இடமும் போய், கடைசியில் ஒரு பெரிய திடலில் போய் படுத்து விட்டது. மன்னனுக்கோ ஆச்சரியம். பன்றியைத் துரத்திக் கொண்டு பின்னே போனபோது அடுத்த ஆச்சரியம்!

பன்றி எழுந்து நின்று தனது கால்களால் அந்த பூமியைத் தோண்டியது. அதில் ஏதோ ஒரு சூட்சுமம் இருப்பதை உணர்ந்த சோழ மன்னன் உடனே அரண்மனை சோதிடரைக் கூப்பிட்டு, விபரம் சொல்லி, அதற்கான காரணம் என்னவாக இருக்கும் எனக் கேட்டார்.

கோவில் கட்டுவதற்கு மன்னன் தேடிக்கொண்டிருந்த இடத்தை வராகி தேவியே தேர்ந்தெடுத்துக் கொடுத்திருக்கிறாள் என்ற செய்தியை சோதிடர் மூலம் அறிந்த போது , ராஜராஜ சோழன் உடலும் உள்ளமும் சிலிர்க்க இரு கை கூப்பி அன்னையை வணங்கினான். [வராகம் - பன்றி]

பெரிய கோவிலைக் கட்டும் பணிகளைத் தொடங்குவதற்கு முன், தேவி வராகிக்கென சிறிய கோவில் ஒன்றை அமைத்து வழிபட்டு அதன் பிற்பாடுதான் ஆவுடையார் கோவிலின் கட்டுமானப் பணிகள் ஆரம்பமாகின. அன்னையவளின் அபூர்வ அருளால் உலகப் புகழ் வாய்ந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தஞ்சைப் பெரிய கோவில் நிமிர்ந்து எழுந்தது.

வெற்றியின் சின்னமாக விளங்கிய வராகி அன்னையை சோழமன்னர்கள் வெற்றித் தெய்வமாகக் கொண்டாடி சிறப்பு வழிபாடுகள் செய்தார்கள். ராஜராஜ சோழன் அன்னையை வழிப்பட்ட பிறகு தான் எந்தக் கருமத்தையும் செய்து வந்தார். குறிப்பாக போருக்குப் புறப்படுமுன், அன்னையிடம் ஆசி பெற்றுச் சென்று அவர் பெற்ற வெற்றிகள் அனைத்தும் சாதனைகள் படைத்தன.

தஞ்சைப் பெரிய கோவிலில், பெருவுடையார் ஆலயத்தின் அக்னி திசையில், அம்பாள் சன்னிதிக்கு எதிரில் வராகி அம்மனுடைய கோவில் இருக்கிறது.

மகா விஷ்ணு வராக அவதாரம் எடுத்தபோது அவனுடைய அவதார சக்தியாக உருவானவர் வராகித் தாயார். பிராமி, வைஷ்ணவி, மகேஸ்வரி, கவுமாரி, வராகி, இந்திராணி, சாமுண்டி ஆகிய சப்த கன்னியர் முறையே.

பிரம்மா , விஷ்ணு, சிவன், குமரன், இந்திரன், யமன், திருமால் ஆகிய கடவுள்களின் சக்திகளாக உருப்பெற்றவர்கள்.

சக்தி வழிபாட்டு முறையில், ராஜராஜேஸ்வரி என்ற ஸ்ரீ வித்யா வழிபாடு சிறப்பானது. இவருக்கு நான்கு கைகள் - முன் கைகளில் கரும்புவில், புஷ்ப பாணங்களையும், மேல் கைகளில் அங்குச பாசாங்குசங்களாகிய ஆயுதங்களையும் கொண்டிருப்பவள்.

கரும்பு வில் சியாமளாவாகவும், புஷ்ப பாணங்கள் வராகி ஆகவும், அங்குசம் சப்த கன்னிகளாகவும், பாசம் அஸ்வாரூடாவாகவும் உருப்பெற்றன.

ஆனி அமாவாசை கழிந்த பஞ்சமி திதியில் ஸ்ரீ வித்யா தேவியின் கையிலிருந்த புஷ்ப பாணங்கள் வராகியாக உருப்பெற்றன. தேவி மகாத்மியத்தில் வரக்கூடிய மதுகைடப வதம், சும்பரிசம்ப வதம், சண்ட முண்ட வதம், மகிஷாசுர வதம் எனப்படும் அசுரர்களுடனான யுத்தங்களில் வராகித்தாயார் படைத்தலைவியாக முக்கிய பங்கு வகித்து வெற்றியைத் தேடித் தருகிறார்.

பன்றி முகமும் பெண்ணின் உடலமைப்பும் கொண்ட வராகி நான்கு கரங்களை உடையவள். பின் இரண்டு கரங்களில் தண்டமும் கலப்பையும் கொண்டு, கறுப்பு நிற ஆடை அணிந்து சிம்ம வாகனத்தில் வீற்றிருக்கும் வராகித் தாயவள் வேண்டி நிற்கும் அன்பர்க்கெல்லாம் அருள் வழங்கும் கருணை மிகுந்தவள்.

விவசாயம், வீடு, நிலம் தொடர்பான வெற்றியை அருள்பவளும் வராகி அன்னையே.

சக்தி வழிபாடு சங்க காலத்திலிருந்தே சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வரும் ஒன்று. இந்த சக்தி வழிபாட்டுக்கும் நவராத்திரிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.

புரட்டாசி மாத அமாவாசையை அடுத்து சாரதா நவராத்திரி, தை அமாவாசையை அடுத்து சியாமளா நவராத்திரி, பங்குனி அமாவாசையை அடுத்து ஆஷாட நவராத்திரி என்பன அமைகின்றன. இந்த ஆஷாட நவராத்திரி வராகி தேவியைப் போற்றி வழிபடும் காலமாக கொண்டாடப்படுகிறது.

தஞ்சைப் பெரிய கோவிலின் ஆஷாட நவராத்திரி வைபவத்தின் இந்தப் பத்து நாள்களும் ஊரே திரண்டு நிற்கும் ஒரு உற்சாகத் திருவிழா! வராகித் தாயாருக்கு ஹோமம், அபிஷேகம் எல்லாம் பக்தி பூர்வமாக நடக்கும். அன்னையின் பேரருளால் பூமியில் அமோக விளைச்சலைக் கொடுக்கும் பொருட்களில், ஒவ்வொரு நாளைக்கும் குறிப்பிட்ட ஒரு விளைபொருளால் அன்னையின் திருவுருவத்தை முழுவதுமாக அலங்கரித்து விடுதல் இந்த விழாவின் தனிச்சிறப்பு.

விளைச்சலைப் பெருக்கி, விவசாயத்தில் தன்னிறைவு பெறும் வரமருளும் வராகி அன்னைக்கு அடியார்களின் நன்றிக் காணிக்கையாகவே இந்த விளைபொருள் அலங்கார வழிபாடு என்றால் அது மிகையல்ல.

வராகி என்றாலே வரம் என்று பொருள். இவள் அதர்வண வேதத்தின் தலைவி, பராசக்தியின் முக்கிய மந்திரியாகத் திகழ்பவள். அன்னையானவள் சிவபெருமான், திருமால், பராசக்தி ஆகிய மூவரின் அம்சமாகவும் பார்க்கப்படுகிறாள். ஈசனைப் போல மூன்று கண்கள் உடையவள். பூலோகம், புவர் லோகம், சுவர்க்க லோகம், தபோலோகம் உள்ளிட்ட ஏழு லோகங்களினதும் காவல் படைத் தலைவி, சப்த கன்னியருள் மிகவும் வேறுபட்டவள். மிருக பலமும் தேவ குணமும் கொண்ட வராகித் தாயாரை நம்பி வணங்கும் பக்தர்களுக்குத் தீவினை எதுவும் அண்டாது, காத்து நிற்கும் கருணை வடிவம் அவள்.

" ஓம் சியாமளாயை வித்மஹே

ஹல ஹஸ்தாய தீமஹி தந்நோ வராஹி ப்ரசோதயாத் "

இது வராகி காயத்ரி மந்திரம்.

செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் வராகிக்கு செவ்வரளி மாலை சாத்தி, எலுமிச்சை சாதம் அல்லது சர்க்கரை சாதம் நைவேத்யம் செய்து, மேற்படி காயத்ரி மந்திரத்தைப் பதினொரு முறை ஜெபம் செய்து வேண்டுதல் செய்பவருக்கு அன்னை வேண்டிய வரம் அருள்வாள். இந்த மந்திரத்தை தினமும் 108 முறை உச்சரித்து வந்தால் ஒவ்வொருவருடைய வாழ்விலும் இடைவிடாது துரத்துகிற துன்பங்கள் கூட விலகி ஓடி விடும்.

கீழே உருவது சக்தி வாய்ந்த வராகி மூலமந்திரம்:

" ஓம் க்லீம் வராஹ முகி ஹரீம் ஸித்தி ஸ்வருபிணி ஶ்ரீம் தன வசங்கரி தனம் வர்ஷய ஸ்வாஹா "

உலகிலேயே வராகி அம்மனுக்கு அமைக்கப்பட்ட முதல் கோயிலாகக் கருதப்படும் அஷ்ட வராஹி கோயில், தமிழ்நாடு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சாலா மேடு என்னும் ஊரில் அமைந்திருக்கிறது. இதை விட, திருப்பூர், நாகப்பட்டினம், கடலூர், தூத்துக்குடி, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் வராகி அம்மன் கோயில்கள் உள்ளன. சென்னையில், அம்பத்தூர், மைலாப்பூர் ஆகிய இரண்டு இடங்களிலும் வராகி கோயில்கள் காணப்படுகின்றன.

வேண்டி நிற்கும் பக்தர்களை என்றும் கைவிடாமல் காக்கும் அன்பே வடிவான அன்னை வராகியை வணங்கி, வாழ்வின் அனைத்து நலன்களையும் பெறுவோமாக.

" ஓம் சியாமளாயை வித்மஹே ஹல ஹஸ்தாய தீமஹி தந்நோ வராஹி ப்ரசோதயாத் "