2026 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை நவநீதம் பிள்ளை பெற்றுள்ளார். இது தமிழர்களை மட்டுமல்ல பெண்களையும் பெருமையடையச் செய்துள்ளது.

2008-ஆம் ஆண்டு, ஜூலை 24 அன்று , நவநீதம் பிள்ளை (நவி பிள்ளை) ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஆணையராக நியமிக்கப்பட்டார். அந்தக் காலகட்டத்தில் எங்கள் தமிழ் பெண், இந்திய வம்சாவளிப் பெண் ஒருவர் இந்த உயர் பதவியைப் பெற்றமைக்குப் பெருமை கொண்டோம்.

இப்போது, நோபல் பரிசு.

85 வயதான நவநீதம் பிள்ளை 1941-ம் ஆண்டு செப்டம்பர் 23-ந்தேதி தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் உள்ள கிளேர்வுட் பகுதியில் பிறந்தார். இவரது தாத்தா, பாட்டி 19-ம் நூற்றாண்டில் கூலித் தொழிலாளர்களாகத் தென்னாப்பிரிக்காவுக்குக் குடிபெயர்ந்தவர்கள். தந்தையார் பஸ் ஓட்டுநராக பணியாற்றி நவநீதம் பிள்ளையை வளர்த்தார்.

கல்வி

பல்வேறு சவால்களுக்கு இடையிலும் கல்வியில் கவனம் செலுத்திய நவி பிள்ளை, டர்பனில் உள்ள பில்லே நடால் பல்கலைக்கழகத்தில் பயின்று, 1963-ல் இளங்கலைப் பட்டத்தையும் , 1965-ல் சட்ட இளங்கலைப் பட்டத்தையும் பெற்றார். பின்னர், 1982-ல் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் சட்ட முதுகலைப் பட்டத்தையும் , 1988-ல் சட்ட அறிவியல் முனைவர் பட்டத்தையும் பெற்றார்.

சட்டப் போராட்டம்

தென் ஆப்பிரிக்காவில்இனவெறி ஆட்சி நிலவிய காலகட்டத்தில், நிறவெறியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகச் சட்டப் போராட்டங்களை முன்னெடுத்தார்.

1967-ம் ஆண்டு, நடால் மாகாணத்தில் சொந்தமாக சட்ட அலுவலகம் தொடங்கிய முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றார். ஆட்சிக்கு எதிராகப் போராடியவர்கள் மற்றும் அரசியல் கைதிகள் உள்ளிட்டோருக்காக வாதாடினார்.

காவலில் இருப்பவர்களுக்கு இழைக்கப்படும் சித்ரவதைகள், தனிமைச் சிறைவாசம் மற்றும் கைதிகளின் உரிமைகள் தொடர்பான வழக்குகளிலும் அவர் தீவிரமாகச் செயல்பட்டார்.

நீதிபதி

1995-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்க உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். வெள்ளையரல்லாத பெண் ஒருவர் நீதிபதியாக ஆனது இதுவே முதல்முறை.

ருவாண்டாவில் 1994 நடைபெற்ற இனப்படுகொலை தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தின் நீதிபதியாக நவநீதம் பிள்ளையை ஐ.நா. பொதுச்சபை தேர்ந்தெடுத்தது. அவர் எட்டு ஆண்டுகள் தீர்ப்பாயத்தில் பணியாற்றியதுடன், 1999 முதல் 2003 வரை அதன் தலைவராகவும் இருந்தார்

ருவாண்டா இனப்படுகொலை வழக்கில் பாலியல் வன்முறையும், குறிப்பிட்ட ஒரு இனக்குழுவை அழிக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டால், அது இனப்படுகொலையின் ஒரு பகுதியாகக் கருதப்படலாம் என்பதை உறுதிப்படுத்திய வரலாற்றுச் சிறப்புமிக்க ஜீன் பால் அகாயேசு வழக்குதீர்ப்பில் அவர் முக்கியப் பங்காற்றினார்.

இந்த தீர்ப்பு சர்வதேச குற்றவியல் சட்டத்திலும், பாலியல் வன்முறையை ஒரு கொடூர குற்றமாக அங்கீகரிப்பதிலும் முக்கிய முன்னேற்றமாக அமைந்தது.

பின்னர், 2003 முதல் 2008 வரை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் நீதிபதியாகவும் பணியாற்றினார்.

மனித உரிமை

முன்னர் குறிப்பிட்டது போல் நாம் பெருமை கொண்ட பதவியான ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஆணையராக 2008-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை பொறுப்பு வகித்தார்.

இந்தக் காலகட்டத்தில், பெண்களின் உரிமைகள், இனப் பாகுபாடு, ஆயுத மோதல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான பிரச்சினைகளில் சர்வதேச அளவில் தனது கவனத்தைச் செலுத்தினார்.

(2009 இல் இலங்கையில் நடந்த தமிழர் படுகொலைகள், மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும் சர்வதேச அளவில் குரல் கொடுத்தார்.)

பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை நடத்திய ஐ.நா. சுதந்திரமான சர்வதேச விசாரணைக் குழுவின் தலைவராக 2021-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.

மேலும், ரோஹிங்கியா மக்களுக்கு எதிராக மியான்மர் இனப்படுகொலை ஒப்பந்தத்தை மீறியதாக காம்பியா தொடர்ந்த வழக்கில், சர்வதேச நீதிமன்றத்தில் சிறப்பு நீதிபதியாகவும் அவர் செயற்பட்டு வருகிறார்.

வறுமையான குடும்பத்தில் பிறந்து, இனவெறிக்கு எதிராகப் போராடி, சர்வதேச நீதித்துறையில் முக்கியப் பொறுப்புகளை வகித்து, வயது ஒரு பொருட்டல்ல என்று நிரூபித்து தற்போது அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றுள்ள நவநீதம் பிள்ளையின் பயணம் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள், பெண்கள், மற்றும் மனித உரிமைகளுக்காகப் போராடுபவர்களுக்கு ஊக்கசக்தியாக அமைந்துள்ளது.