எமது முன்னோர்களின் காலம் தொட்டு, தமிழராகிய எங்கள் வாழ்வியலோடு இணைந்து நிற்பவை பழமொழிகள். ஒன்றல்ல... இரண்டல்ல... எண்ணிலடங்காதவை.
வேதாந்தம் சொல்பவை, யதார்த்தம் சொல்பவை, தத்துவம் சொல்பவை, அறிவுரை சொல்பவை என, இன்னும் இன்னும் பல்வேறு பரிமாணங்களில் உள்ள பல பழமொழிகள். இவற்றுள் பல பழமொழிகள் கால ஓட்டத்தில் மருவி, திரிபடைந்து அவற்றின் உண்மையான அர்த்தங்களை இழந்து புதுப்புது வடிவங்களோடும் அர்த்தத்தோடும் சமகாலப் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. இது, சற்றே விசனம் தரக் கூடிய ஒரு மாற்றம்.
உலகின் முதல் மொழி, வேறெந்த மொழிக்கும் இல்லாத பெருமைகள் கொண்ட தமிழ் மொழி, ஒரு வார்த்தையின் ஒரு எழுத்து மாறிவிட்டால் கூட, அந்த வார்த்தையின் பொருளை அடியோடு மாற்றிவிடும் இயல்பு கொண்டது என்பதைப் பலரும் அறிவோம்.
அர்த்தம் நிறைந்த எமது பழமொழிகள் பல, திரிபடைந்து, அவற்றின் இயல்பான வடிவங்களைத் தொலைத்துச் சமகாலப் பயன்பாட்டில் உள்ளதையும், தொடர்ந்து வரும் சந்ததிகள், இவைதான் அந்தப் பழமொழிகளின் உண்மையான வடிவங்கள் என்று கருதிவிடக் கூடிய அபாயம் உள்ளதையும் உணரும் போது, பல்வேறுபட்ட பழமொழிகளின் உண்மை வடிவங்களையும் அவற்றின் ஆழமான அர்த்தங்களையும் வெளிக்கொணர வேண்டிய வரலாற்றுக் கடமை எமக்குண்டு.
அந்த வகையில், ஊற்றுக்கண் வழியே தெறித்து விழுகின்றன சில பழமொழித் துளிகள்!
இதோ... இரண்டு கழுதைப் பழமொழிகள்!
‘கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை’
இது பெரும்பாலும் நம் எல்லோருக்கும் தெரிந்த ஒரு பழமொழி. தகுதியற்ற ஒருவருக்கு ஒரு நல்ல பொருளின் அருமை தெரியாது என்பதை இந்தப் பழமொழியின் நேரடிப் பொருளாகக் கொள்வதை நாம் வழமையாக்கிக் கொண்டிருக்கிறோம்.
வசதி வாய்க்கும் போது, மற்றவர்களை மட்டம் தட்டுவதற்கும் இந்தப் பழமொழியைப் பயன்படுத்துகிறோம். கழுதைக்கும் கற்பூர வாசனைக்கும் போடப்பட்ட இந்த முடிச்சு எதனால் என்று யோசித்துப் பார்க்கும் போது எதுவும் மூளைக்கு எட்டுவதில்லை, ஆனாலும் பயன்படுத்துகிறோம்.
இந்தப் பழமொழியின் உண்மை வடிவம், காலப் போக்கில் மருவி, வேறு வடிவமும் அர்த்தமும் பெற்றுவிட்டது என்பதே உண்மை.
அந்தப் பழமொழியின் உண்மை வடிவம் இதோ:
‘கழு தைக்க தெரியுமாம் கற்பூர வாசனை,'
அதாவது, 'கழு' என்று ஒரு வகைப் புல் உண்டு. இந்தப் புல்லினால் நாம் பயன்படுத்தக் கூடிய பாய் தைக்கலாம். அப்படி இந்தப் புல்லினால் பாயை இழைக்கும் போது, கற்பூர வாசனை போன்ற ஒரு வாசனை வருமாம். அந்த வாசனைக்கு எந்தவிதமான விஷப்பூச்சிகளும் கிட்ட வராது என்பது மேலதிக தகவல்.
'தைக்க' என்ற சொல்லின் கடைசி எழுத்தாகிய 'க' - 'கு' ஆக மாறி, தெரியுமாம் என்ற சொல்லின் கடைசி எழுத்து 'ம்' காணாமல் போய் விட,
'கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை' என்ற புதிய வடிவம் பெற்று, பாவனையில் இருந்து வருகிறது என்பதை அறிந்து கொள்வோமா?
‘வர வர மாமியார் கழுதை போல் ஆனார்;'
இது, திரிபடைந்து மருவி நிற்கும் மற்றொரு கழுதைப் பழமொழி இது.
ஊர் நடப்புகள் பலதையும் பத்தையும் அலசி வம்பளப்பவர்கள் மத்தியில் பேரும்பாலும் இடம்பெறுவது மாமியார்-மருமகள் பிரச்சனை ஆகும். தமிழர்களிடையே இது ஒரு சமூகப் பிரச்சனையாக ஆகி உள்ளது என்றும் சொல்லலாம்.
ஆரம்பத்தில் மருமகளுடன் அன்பு காட்டி நடக்கின்ற, அல்லது அப்படிக் காட்டிக் கொள்கின்ற மாமியார் ஒருவர், காலம் செல்லச் செல்ல, குணம் மாறி, தன் சுயரூபத்தை வெளிப்படுத்துவதான நேரடிப் பொருளைத் தருகின்ற இந்தப் பழமொழியில் 'கழுதை' ஏன் ஒப்பிடப்படுகிறது என்பது புரியவில்லை! கழுதையின் தோற்றமா அல்லது குண இயல்பா எது பற்றி இந்த ஒப்பீடு என்று யோசித்துப் பார்த்தால் மூளைக்கு எதுவும் எட்டவில்லை.
ஆரம்பத்தில் நல்ல விதமாக இருந்து, போகப் போகப் பின்னடைவைக் காட்டுகின்ற எந்த ஒரு விடயத்துக்கும் இந்தப் பழமொழி (நேரடிப் பொருளில்) பொருந்தும். உதாரணமாக, வகுப்பில் நன்றாகப் படித்துக் கூடுதல் புள்ளிகள் பெறுகின்ற ஒரு மாணவன், காலப் போக்கில் அத்தகைய திறமையை இழந்துவிட்டால், 'வர வர மாமியார் கழுதை போல் ஆனார்' என்று கூறி ஆசிரியர் அவனைக் கடிந்து கொள்வதுண்டு.
இப்படியாகப் பரவலாகப் பயன்பாட்டில் இருந்து வருகின்ற இந்தப் பழமொழியின் உண்மை வடிவம் எது என்று பார்த்தோமானால், ஒரேயொரு எழுத்து செய்த மாயம் என்பது புரியவரும்.
அதன் உண்மை வடிவம் இதோ:
‘வர வர மாமியார் கயிதை போல் ஆனார்’
'கயிதை' என்ற வார்த்தையில் 'யி' உட்கார வேண்டிய இடத்தில், 'ழு' போய் உட்கார்ந்துவிட்டதில் ஏற்பட்ட மாற்றம் தான் இது.
'கயிதை' என்பது ஊமத்தங்காயைக் குறிப்பது. ஊமத்தம் பூ மலரும் போது மிகவும் அழகாகவும் மென்மை பொருந்தியதாகவும் இருக்கும். காலப் போக்கில் அதே பூ காயாக மாற்றம் அடைகின்றபோது, அந்தக்காயின் வெளிப் புறத்தில் முட்களும் உள்ளே விஷமும் உருவாகிவிடும் - இதனால் ஆபத்து மிகுந்த ஒரு பொருளாக அது (கயிதை) மாறிவிடுகிறது.
எனவே தான், 'வர வர மாமியார் கயிதை போல் ஆனார்' - 'கழுதை' அல்ல... 'கயிதை' என்பதே சரியான சொற்பதம்.
முடிந்தவரை அனைவருடனும் பகிர்ந்து கொள்வோமா?
- இன்னும் வரும்…
- ஊற்றுக்கண்.
