15 ம் நூற்றாண்டில் வாழ்ந்த காளமேகப் புலவரை ஆசுகவி எனக் குறிப்பிடுவார்கள்.
ஆசுகவி என்றால்- மற்றவர்கள் சொல்லும் பொருள் அல்லது குறிப்புகளைக் கொண்டு, சற்றும் தாமதிக்காமல் உடனுக்குடன் கவிதை இயற்றும் திறன் படைத்த ஒருவரைக் குறிக்கும்.
வரதன் என்ற இயற்பெயர் கொண்ட காளமேகப் புலவர் சிலேடைப் பாடல்கள் இயற்றுவதிலும் வல்லவர்.
ஒரு முறை காளமேகப் புலவரைச் சந்தித்த ஒருவர் அவரிடம் கேட்டார்:
"ஐயா.. காளமேகப் புலவரே! நீங்கள் மழை போலப் பாடல்கள் புனைவீர்கள் என்று அறிந்தேன்.
இப்போது நான் உங்களிடம் கேட்கிறேன்.
‘செருப்பு' என்ற சொல்லில் ஆரம்பித்து, ‘விளக்குமாறு' என்று முடியும் ஒரு பாடலை நீங்கள் இயற்ற வேண்டும்.
‘அது ஒரு புகழ்கூறும் பாடலாக இருக்க வேண்டும் என்பது மேலதிக நிபந்தனை’.
அடுத்த நிமிடம் காளமேகப் புலவரிடம் பாடல் பிறக்கிறது.
"செருப்புக்கு வீரர்களைச் சென்றுழக்கும் வேலன்
பொருப்புக்கு நாயகனைப் புல்ல
மருப்புக்குத் தண்டேன் பொழிந்த திருத்தாமரை மேல்
வீற்றிருக்கும் வண்டே விளக்குமாறே!"
அதாவது, செரு என்றால் போர்க்களம்
செருப்புக்கு - போர்க்களம் புகுந்து வீரர்களைச் சிறைப்பிடித்துப் போர் புரியும் - பொருப்புக்கு நாயகனை, பொருப்பு என்றால் மலை.. குறிஞ்சி மலைத் தலைவனாகிய வேலனை-
புல்ல- நான் கட்டித் தழுவும் வகை பற்றி..
தாமரை மலரில் வீற்றிருக்கும் வண்டே! நீ எனக்கு விளக்குமாறே - விளக்கிக் கூறுவாயாக!
செருப்பு - விளக்குமாறு - இவை இரண்டுமே பொதுவாக நம்மிடையே அபசகுனக் குறியீடுகளாகக் கருதப்படும் பொருள்கள் என்பதை எல்லோரும் அறிவோம்.
அவற்றை வைத்து, ஒரு புகழ் கூறும் பாடலா?
ஆனால் பாருங்கள்.. காளமேகப் புலவர் சற்றும் தயங்காமல் - உடனே இப்பாடலை மழை போலப் பொழிந்து விட்டார்!
ஆசுகவி என்றால் சும்மாவா?
தொடர்ந்தும் உங்கள் அனைவரையும் சந்திக்க அந்த 'ஆசுகவி' வருவார் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத் தருகிறோம்.
- ஊற்றுக்கண் -
