தத்துவம் சொல்லுகின்ற ஒரு அர்த்தமுள்ள பழமொழி இது. பெரும்பாலும் எல்லோருக்குமே தெரிந்த ஒரு பழமொழி.

பிறப்பு எப்போது என்பதை நாம் அறிவோம். ஆனால் இறப்பு என்பது நியமிக்கப்பட்ட ஒன்று. அது எப்போது நிகழும் என்று யாருக்கும் தெரியாது. யாருக்கு எப்போது வரும் என்றும் சொல்லி விட முடியாது. அது எந்த சமயத்திலும் வரலாம் என்பதையே இந்தப் பழமொழி கூறுகிறது.

வாழ்க்கையில் நிம்மதி இழந்து போனவர்கள், விரக்தி அடைந்து வாழப்பிடிக்காதவர்கள்... இவர்கள் சொல்லுவார்கள்.. "எல்லாமே போச்சு.. இருந்தென்ன சுகம்.. போயிட வேணும்.. எப்ப செத்தால் என்ன? ஆறிலும் சாவு.. நூறிலும் சாவு.." என்று. விரக்தியில் ஒரு தத்துவம்.. தத்துவத்துக்கு ஒரு பழமொழி. இந்த வாழ்க்கைத் தத்துவத்தைச் சொல்கின்ற பழமொழிக்குப் பின்னால் ஒரு கதை இருக்கிறது. மகாபாரதத்தில் வருகின்ற ஒரு சம்பவம் அது. உங்களில் பலருக்கு இது பற்றித் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

மகாபாரதத்தில் கௌரவர்கள் அணியில் 100 பேர், பாண்டவர்கள் அணியில் 5 பேர். இரண்டு அணிக்கும் இடையில் போர் என்பது முடிவாகிவிட்டது. குருக்ஷேத்திரப் போர் என்று வர்ணிக்கப்படுகின்ற அந்தப் 18 நாள் போர்.

பாண்டவர்களின் தாயாகிய குந்தி, தன்னுடைய முதல் பிள்ளை கர்ணன்தான் என்ற உண்மையை அறிய நேர்கிறது.

தலை சிறந்த வீரன், கொடை வள்ளல், மனித நேயன் என்ற புகழ்ச்சிக்கெல்லாம் உரிய கர்ணன் அவளுடைய மகனா? பாண்டவர்களின் எதிரணியில் அங்கம் வகிக்கின்ற பிரதான வீரனாக.

பெற்ற மனம் கலங்கித் தவிக்கிறது.

கிருஷ்ண பரமாத்மாவின் மாய லீலைகள் பற்றி நன்கு அறிந்திருந்த குந்திக்கு, நிகழப் போகும் போரின் இறுதி வெற்றி பாண்டவர் அணிக்கே என்ற உண்மை நன்றாகவே தெரிகிறது.

என் முதல் செல்வனை- கர்ணனை நான் இழந்துவிடப் போகிறேனா? என்ன செய்வேன்? என்று கலங்கித் துடித்த குந்தி கர்ணனைத் தேடிப் போகிறாள்.

பாண்டவர்கள் ஐவருடன் ஆறாவதாக - அவர்களின் உடன் பிறந்தவனாக - பாண்டவர் அணியில் இணைந்து கொள்ளும்படி கர்ணனிடம் மன்றாடிக் கேட்கிறாள் அந்த அன்னை.

அப்பொழுது கர்ணன் சொல்கிறான் :

"தாயே! எனது முடிவு என்றோ எடுக்கப்பட்டுவிட்டது. துரியோதனனை விட்டு விலகி நான் ஐவர் அணியில் என்றும் இணைந்து கொள்ள மாட்டேன்! அவனுடைய உயர்ந்த நட்புக்கான செஞ்சோற்றுக் கடனை நான் தீர்க்க வேண்டும்..

ஐவருடன் ஆறாவதாக நின்றால் என்ன..

நூறுவர் அணியில் ஒருவனாய் நின்றால் என்ன..

எனது சாவு நிச்சயிக்கப்பட்டு விட்ட ஒன்று..”

என்று கூறிக் குந்தியைத் திருப்பி அனுப்பிவிட்டான் என்பது கதை.

அதாவது, ஆறிலும் சாவு.. நூறிலும் சாவு..

இங்கே குறிப்பிடப்படுவது - ஐவர் அணியில் ஆறாவதாக நின்றால் என்ன.. நூறுபேரின் அணியில் ஒருவனாக நின்றால் என்ன என்று கர்ணன் கூறுவது போன்ற பொருள்படவே தவிர, ஆறு வயதையோ அல்லது நூறு வயதையோ குறிப்பிட்டு இந்தப் பழமொழி உருவாகவில்லை என்பதே.

ஆயினும், தத்துவார்த்தமாகப் பார்க்கும் போதும் 'ஆறிலும் சாவு நூறிலும் சாவு' என்ற பழமொழி அர்த்தமுள்ளதாகவே கருதப்படலாம் என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.