(ஒரு பெரியவர் சொன்ன உண்மைச் சம்பவம்)

யாழ். திருநெல்வேலி தலங்காவல் பிள்ளையார் கோவிலின் பின் வீதி. எழுபது வயது மதிக்கத்தக்க ஒரு மனிதர் அந்த வீதி வழியே தனது மோட்டார் சைக்கிளில் வந்து, மிகவும் அண்மையிலுள்ள தனது வீட்டுக்குச் செல்வதற்காக, வீதியிலிருந்து வலது புறமாக ஒரு திருப்பத்தில் வண்டியைத் திருப்புகிறார்.

அப்பொழுது, மிதி வண்டியில் வந்த ஒரு இளைஞன், சற்றும் எதிர்பாராத விதத்தில், இவருடைய மோட்டார் சைக்கிளின் பக்க கண்ணாடியோடு உரசும் அளவுக்கு வந்து தடுமாறிச் சமாளிப்பது போல நிற்கிறான்.

அந்த மனிதர் வண்டியை நிறுத்தி, என்னதான் நடந்திருக்கும் என்று யோசிப்பதற்குள் அந்த இளைஞன் சட் என்று கீழே குனிந்து, விழுந்து கிடந்த தன் கைபேசியை எடுக்கிறான்.

"இது உடைந்து விட்டது.. எல்லாம் உங்களால் தான்" என்று முதியவர் மீது குற்றம் சாட்டி இருக்கிறான்.

அவருக்கோ எதுவும் புரியவில்லை.

'நான் சரியாகத்தானே வந்தேன்.. இவன் வந்து என் வண்டியின் கண்ணாடி மீது உரசிவிட்டு, இப்போ என்னையே குற்றம் சாட்டுகிறானே..' என்று நினைத்தார்.

ஆனாலும் ஒரு பண்பு கருதி, அந்த இளைஞனிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டு, வண்டியை எடுத்துக் கொண்டு புறப்பட்டார். கொஞ்ச தூரம் தான் சென்றிருப்பார்.

எங்கிருந்து வந்தது என்று தெரியாமல் ஒரு பெரிய மோட்டார் சைக்கிளில் ஒருவன், குறிப்பிட்ட அந்த இளைஞனையும் பின்னால் ஏற்றிக்கொண்டு முதியவரின் வண்டிக்கு முன்பாக வந்து நிறுத்தி, அவரை மேலே செல்ல விடாமல் தடுக்கிறார்கள்.

கைபேசி உடைந்ததற்கு அவரே காரணம் என்று சொல்லிக் காசு தரும்படி கேட்கிறார்கள்.

"அது என் பிழை இல்லை.. நான் காசு தரமாட்டேன்" என்று இவர் மறுத்துக் கூறிய போது,

அவன் சத்தம் போட்டு, பொலிசைக் கூப்பிடுவேன்.. அப்படி இப்படி என்று குரல் உயர்த்திப் பேசத் தொடங்கினான்.

இது, தனக்கான ஒரு அவமானம் எனக் கருதிய பெரியவர், வேறு வழியில்லாமல் ஒரு ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொடுத்தபோது,

அவர்கள் அவரிடமிருந்த 5000 ரூபாயையும் பறித்து எடுத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பியோடிச் சென்று விட்டார்கள்.

அதிர்ச்சியில் நின்ற பெரியவருக்கு மீண்டும் சுய நினைவு வர, நீண்ட நேரம் ஆயிற்று.

பெரியவரின் கூற்றுப்படி, முதலில் மிதி வண்டியில் வந்தவன் போதையில் இருந்தானாம். பின்னால் கூட வந்த இரண்டாமவன் கொஞ்சம் திடகாத்திரமான ஆசாமியாகவும் இருந்ததாக அறியப்படுகிறது. திட்டமிட்டே இருவரும் செயற்பட்டதாக தெரிகிறது.

அவர்கள் போட்ட கணக்கு:

1.வயதானவர் மெதுவாக நிதானமாக வண்டியை ஓட்டி வரும் போது இப்படி அவரை நிலைகுலைய வைக்கலாம் .

2.அயற் சூழலில் இப்படி சத்தமாக குரல் உயர்த்திக் கொண்டு இருவர் முன்னால் நிற்பது அவமானம் என்று கருதுவார் . மனம் தடுமாறி நிற்கும் போது பணம் பறிக்கலாம் என்பது.

மக்களே அவதானமாக இருங்கள்!