எங்களுடைய தாய் மண்ணில் வாழ்ந்து மறைந்து போன ஈழத்துச் சித்தர்களில் யோகர் சுவாமிகள் மிக மிக முக்கியமானவர். பிரபலமானவர். யோகர் சுவாமிகள் என்ற உச்சரிப்பைக் கேட்கும் போது, நரைத்த தலைமுடியும் வெண் தாடியும் கொண்டு நிஷ்டையில் அமர்ந்திருக்கும் அந்தக் சித்தரின் மெலிந்த தோற்றம் படமாய் வந்து மனத்திரையில் தெரியும். இதைவிட, பிரசித்தி பெற்ற அவருடைய மகாவாக்கியங்கள் நான்கும் மனதுக்குள் வந்து மோதும்.
'எப்பவோ முடிந்த காரியம்', 'ஒரு பொல்லாப்பும் இல்லை', 'யாம் அறியோம்', 'முழுவதும் உண்மை'.
19ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி தொடக்கம், 20ம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை விரிகின்ற ஒரு வாழ்க்கை வரலாற்றுக்குச் சொந்தமான ஒரு மகா புருஷன்தான் நம்முடைய யோகர் சுவாமிகள்.
சித் என்றால், அறிவு, ஞானம், தெளிவுப் பார்வை, கூர் நோக்கு, குறித்த நோக்கு என்பன போன்ற பொருள்கள் கொள்ளப்படும். சித்தர்களை அறிவாளிகள், ஞானிகள், தெளிந்த பார்வையும் கூர்ந்த நோக்கையும் உடையவர்கள், கடந்து சிந்திப்பவர்கள்.. என்றும் எடுத்துக் கொள்ளலாம். மானுடம் செழிக்க வந்த மகா ஞானிகள் என்றும் இவர்களைக் கூற முடியும்.
ஈழத்துச் சித்தர்கள் எனக் குறிப்பிடப்படுபவர்களில், மற்றைய சித்தர்களை விட வேறுபட்டவராகவும், மாறுபட்டவராகவும் விளங்கும் யோகர் சுவாமிகள், யாழ் மண்ணிலே பிறந்து, எல்லா இடமும் திரிந்து, யாவர்க்கும் சுமை தாங்கியாய் - ஒரு ஆன்மீக வெளிச்சமாய் விளங்கியிருக்கிறார்.
மாவிட்டபுரத்தில் சைவக் குடும்பத்தில் பிறந்து, சதாசிவன் என்ற பெயர் பெற்று, கத்தோலிக்கப் பள்ளியில் 'ஜோன்' என்று பெயர் மாற்றப்பட்டு, நிறைவில் யோகநாதன் ஆகி, பின்னர் யோகர் சுவாமிகள் என்ற சித்தராய்ப் பரிணமிக்கிறார் இந்த ஞானி.
சமணத்துக்குச் சென்ற தம்பியை மீட்ட திலகவதியார் போல - இங்கு - மருமகன் யோகன் கத்தோலிக்கத்தினுள் மூழ்கி விடாமல் இருப்பதற்கு, அவனுடைய மாமியார் முத்துப்பிள்ளை கையாண்ட வழிகள் நல்ல வெளிச்சமாய் அமைந்தன. யாழ்ப்பாணத்துக்கு நல்லதொரு சித்தர் கிடைக்கப் பெற்றார்.
'மற்றவர்கள் தூங்கும் போது ஞானி விழித்திருக்கிறான்' என்று கீதை சொல்கிறது. இவ் வாக்கியம் எங்கள் ஆன்மீக ஜோதி யோகர் சுவாமிக்கு மிகவும் பொருத்தமாய் அமைந்தது.
கிளிநொச்சியில் நீர்ப்பாசனப் பகுதியில் பணி புரிந்து கொண்டிருந்த இளைஞன் யோகநாதன், வேலை முடிந்து எல்லோரும் தூங்கிய பிற்பாடும் நீண்ட நேரம் தூங்காமல் இருப்பானாம்.. அதுவும் தியானத்தில்.
இது பற்றி வைத்திலிங்கம் என்னும் அவனுடைய உறவினர் ஒருவர் குறிப்பிடும் போது, "அவனுக்கு விசர்ப் போக்கு துவங்கிவிட்டது" என்று விமர்சித்தாகத் தகவல் உண்டு.
தேவாரம், திருவாசகம், திருமந்திரம், அருணகிரிநாதர் பாடல்கள், தாயுமானவர் பாடல்கள் போன்ற இன்னும் பலவற்றை அவர் மனனம் செய்திருக்கிறார்.
25 வது வயதில் வேலையை விட்டு யாழ்ப்பாணம் வருகிறார் யோகநாதன். சுவாமி விவேகானந்தரின் சந்திப்பும், மயில்வாகனம் எனப்பட்ட விபுலானந்த அடிகளின் பரிச்சயமும் அவருக்குக் கிடைக்கின்றன.
ஏற்கெனவே எட்டாவது வயதில் தாயை இழந்துவிட்ட யோகநாதன், பின்னர் தந்தையையும் இழக்க நேரிடுகிறது.
அந்தக் காலப்பகுதியில், நல்லூர் வீதியில், வெறித்த பார்வையுடன் சிரித்தபடி திரிந்த செல்லப்பா சுவாமிகளை எல்லோரும் பித்தன் என்றார்கள். யாரும் அவரை நாடிச் சென்றால், அவர்களைப் பார்த்துச் சீறுவார். வீதியில் செல்பவர்களைப் பேசுவார். திருநீறு கூட அணிய மாட்டார். கடையிற் சாமி என்ற சித்தரின் சீடராக இருந்த செல்லப்பா சுவாமிகள் என்ற இந்தச் சித்தர், உலகத்துக்குத் தன்னைக் காட்டிக் கொள்ளாமலேயே மறைந்து போன ஒரு மகான். பைத்தியக்காரன் போலத் தோற்றமளித்த அவரைப் பலரும் 'விசர்ச் செல்லப்பா' என்றே அழைப்பதுண்டு.
இந்தப் பெரு ஞானி, செல்லப்பா தேசிக சுவாமிகளை 1904 ஆம் ஆண்டு நல்லூரடியில் யோகர் காண்கிறார்.
"டேய்! நீ யார்?" என்று செல்லப்பா சுவாமிகள் அவரை ஒரு உலுக்கு உலுக்கி, "ஒரு பொல்லாப்பும் இல்லை" என்று உறுமினார். "நேரடா உள்", "தீரடா பற்று" என்னும் உபதேசங்கள், செல்லப்பா சுவாமியின் உருவம், யாவும் ஏதோ ஒரு காந்த சக்தியின் ஈர்ப்பைப் போல யோகரைக் கட்டிப் போட்டன. அவரையே தனது ஆன்மீகக் குருவாக யோகர் சுவாமி வரித்துக் கொண்டார்.
செல்லப்பா சுவாமிகளுடன் ஏற்பட்ட அந்தச் சந்திப்பை ஒரு பாட்டாக வர்ணிக்கிறார் யோகர் சுவாமி.
"இருவரும் காணா இறைவன் என்மேல் உருத்தாங்கி,
இணங்கி எவரும் செய்யும் நல்லையில்,
இன்னான் இவனென்ன ஒருவருமறியாது
ஓடி உலாவி உவகை பூத்த முகத்தினராய் ஒருநாள்
என்னை உற்று நோக்கி ஒரு பொல்லாப்பும் இல்லை என்று,
அருவமும் காட்டி உருவமும் காட்டி,
அதற்கப்பாலாம் அருள் நிலை காட்டி காட்டி
அந்தம் ஆதியில்லா சொரூபம் காட்டி, சும்மா இருக்கும்
சூட்சுமத்தில் மாட்டி விட்டான்.
துன்பம் இறந்தன இன்பம் இறந்தன சோதி சோதி சிவசோதி "
அந்தச் சந்திப்பு பற்றி இன்னுமோரிடத்தில் இப்படியும் கூறியிருக்கிறார்:
"கருத்தில் நினைந்துருகிக் கை கூப்பி
தொண்டர் வருத்தமெலாந் தீர்க்கும் வடிவேல் திருத்தலத்தில்
தேரடியில் தேசிகனைக் கண்டு தரிசித்தேன்..
ஆரடா நீ என்றான் அவன்"
இவ்வாறு, செல்லப்பா சுவாமிகளைத் தனது குருவாக வரித்துக் கொண்ட யோகர் சுவாமிகள் அவரை விட்டு அகலாமல் இருந்த போதிலும், குருவோ யோகருக்குச் சோதனை மேல் சோதனை கொடுத்தார். ஆயினும் என்ன?
யோகர் சுவாமிகள் தேறினார். செல்லப்பர் ஏறியே விழுந்தார். இறுதியில்,
"இரு யானைகள் ஒரு தறியில் கட்டப்படாது"
என்று கூறிய செல்லப்பா சுவாமிகள் யோகர் சுவாமியைக் கலைத்து விட்டார்.
"பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்று
பற்றுக பற்று விடற்கு" என்ற அய்யன் வள்ளுவனின் வழியில், உலக ஆசைகளை விடுவதற்கு, ஆசையே இல்லாத இறைவன் திருவடியைப் பற்ற வேண்டும் என்பதற்கு இணங்க, யோகர் சுவாமிகள் இருந்த படியால், குருவின் ஏச்சோ பேச்சோ எதையுமே தனக்கான உபதேசமாகவே எடுத்துக் கொண்டார்.
ஒரு தடவை செல்லப்பா சுவாமிகள் உடல் நலமின்றி இருந்தபோது அவரைப் பார்க்கப் போன யோகர் சுவாமியை,
"என்னையா பார்க்கப் போகிறாய்? நில் அங்கே! உன்னைச் சிந்தித்துப் பார்" என்றாராம் குரு.
அந்த வார்த்தைகளுடன் திரும்பிய யோகர் சுவாமி அதன் பிறகு அந்தப் பக்கம் போகவே இல்லையாம்.
ஆயினும் என்ன? குரு போதித்த நான்கு மகா வாக்கியங்களும் அவருடன் கூடவே இருந்தன.
யோகர் சுவாமிகள் என்றதுமே பெரும்பாலான உள்ளங்களில் எதிரொலிப்பவை இந்த மகா வாக்கியங்களே.
தன் ஆன்மாவையே சிவமாகப் பாவிக்கும் ஒரு உன்னத தியான நிலையை யோகர் சுவாமிகள் அனுட்டித்தார். அதுதான் சிவோகம் பாவனை. சிவம் + அகம் - சிவோகம்.
இது, நானே சிவம், அல்லது சிவன் வேறல்ல நான் வேறல்ல என்று, தன் ஆன்மாவையே சிவமாகப் பார்க்கும் ஒரு உன்னத நிலை.
சைவம் மற்றும் அத்வைதத்தில் இந்த சிவோகம் பாவனை முக்தி நிலைக்கான ஒரு தியானமாகவும், பாச நீக்கத்திற்கான ஒரு வழியாகவும் கருதப்படுகிறது.
சிவோகம் பாவனையின் ஒரு நீட்சியாகவே, 'எப்பவோ முடிந்த காரியம்' என்ற மகா வாக்கியத்தை நாம் பார்க்க முடியும். மேலோட்டமான பார்வையில் இந்த வாக்கியத்தின் பொருள் சொல்லும் போது,
எமக்கான விதி என்றோ எழுதப்பட்டு விட்டது.. எனவே, ஒவ்வொன்றும் அது அதற்குரிய நேரத்தில் நடந்து தீரும் என்பதாகும். ஆழமாக நோக்கும் போது, மாணிக்கவாசக சுவாமிகள் அருளிய ஒரு திருவாசகம், சிவோகம் பாவனைக் குரிய ஒரு உத்தம வழிகாட்டியாக உள்ளதுடன், எப்பவோ முடிந்த காரியம் கூறும் அர்த்தத்தையும் தெளிவுபடுத்துகிறது.
"தந்தது உன் தன்னை;
கொண்டது என் தன்னை;
சங்கரா ஆர் கொலோ சதுரர்?
யாது நீ பெற்றது ஒன்று என்னால்..
சிந்தையே கோயில் கொண்ட எம் பிரானே..
திருப் பெருந்துறையுறை சிவனே!
எழுந்தையே ஈசா உடலிடம் கொண்டாய்
யான் இதற்கு இலன் ஓர் கைம்மாறே.."
இறைவன் தன்னையே தந்துவிட்டு அற்புதமான ஆன்மாவை ஆட்கொண்டதை அவனுடைய பேராற்றலாகவும், கருணையாகவும் மாணிக்கவாசகர் போற்றுகிறார். அதாவது, 'என்னை ஆட்கொண்டு என் உடலையே உனக்குக் கோயில் ஆக்கிக் கொண்டாய்...'
இறைவன் எம் உடலில் குடிகொண்டு, உயிருக்கு உயிராகவும், அறிவுக்கு அறிவாகவும் உள்ளான். அது எப்பவோ முடிந்த காரியம். அதனை மறைத்திருக்கும் திரையை நீக்க வேண்டும். எப்பவோ முடிந்த காரியமாக, இறைவன் திருவருளானது எம்மிடம் அமைந்திருக்கும் போது, அதைப் பெறுவதற்குப் புறப்பூசைகள் செய்வது,
வெண்ணெயைக் கையில் வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவதற்கு ஒப்பானது எனத் தெளிந்து, யோகர் சுவாமிகள் இறைவழியைப் பின்பற்றினார்.
அவனே நான் என்று சொல்லித் தினமும் தியானம் செய்..
ஆசை எல்லாம் ஒழியும்.. ஈசனருள் பொழியும்..
என்று உபதேசித்தார்.
1964 ஆம் வருடம் மார்ச் மாதத்தின் ஆயிலிய நட்சத்திர நாளன்று யோகர் சுவாமிகள் மகா சமாதி அடைந்தார்.
யார் யார் சிவம்..
நீ நான் சிவம்..
வாழ்வே தவம் அன்பே சிவம்.

கருத்துகள்
இன்னும் கருத்து இல்லை.