திருக்குறளின் 97 வது அத்தியாயம் மானம். இதில் வரும் 969 ஆவது குறள் இப்படிச் சொல்கிறது.
" மயிர்நீப்பின் வாழா கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின் "
அதாவது, தன்மானத்தை உயிரெனப் போற்றுகின்ற மனிதர்கள், அத்தகைய மானத்தை இழக்க நேரிடின், தம் உயிரை விடவும் தயங்கமாட்டார்கள் என்ற பொருளில் வருகின்ற இந்தக் குறளை நம்மில் பலரும் அறிவோம். 'மானம்' என்ற அரிய பண்பை எடுத்துக் கூறுகின்ற இந்தக் குறள், மேடைப் பேச்சுகளிலும், வேறு வேறு பதிவுகளிலும் எடுத்துக்காட்டாகப் பயன்படுத்தப்படுகின்ற ஒரு குறள். 'கவரி மா' எனப்படும் ஒரு பிராணியின் பெயரை எடுத்துக்காட்டாக வள்ளுவப் பெருமான் கையாண்டிருக்கிறார். 'கவரிமா' என்ற சொல், கவரி மான் என்று தவறுதலாகக் கையாளப்பட்டுப் பொருள் கூறப்படும் சந்தர்ப்பங்கள் சில, அல்லது பல சமயங்களில் ஏற்பட்டு விடுவது அவதானிக்கப் பட்டதால், இந்தக் கவரி மா பற்றிய ஒரு விளக்கம் தரப்படுதல் அவசியமானதும் பொருத்தமானதும் என்று தோன்றுகிறது.
கவரி மா என்பது, இமயமலைப் பிரதேசத்தில் வாழ்ந்த/வாழுகின்ற - ஒரு வகை மாடு அல்லது எருது இனத்தைச் சேர்ந்த மிருகம் ஆகும். ஆங்கிலத்தில் இதை Yak எனக் குறிப்பிடுவர். குளிர்மிகுந்த பிரதேசத்தில் வசிப்பதால், கவரிமாவின் உடல் முழுவதும் பாதுகாப்பளிக்கும் ரோமமும் (முடி), வால் பகுதி மிகவும் அடர்த்தியான ரோமங்களுடனும் காணப்படும். இந்த முடியை மனிதர்கள் சேகரித்து, வேறு வேறு தேவைகளுக்குப் பயன்படுத்துவர். இறைவனுக்கு வீசுகின்ற சாமரை இந்த சவுரியினால் செய்யப்படுகிறது. (கவரி என்ற சொல் மருவி சவுரி ஆகிறது )
எனவே, கவரி மா எனப்படும் இந்த விலங்கினம், குளிருக்குப் பாதுகாப்பாக இருக்கின்ற தனது ரோமத்தை இழக்கின்ற அபாயம் மனிதர்களால் ஏற்படுகிறது. மனிதர்கள் மூலமாகவோ, அல்லது நோயுற்று தன் ரோமங்களை இழக்க நேரிடும் போது - குளிர் தாங்க முடியாமலோ கவரி மா இறந்துவிடும்.
இதுவே திருக்குறளில் குறிப்பிடப்பட்டுள்ள கவரி மா.
திருக்குறளுக்கு உரை எழுதியவர்களுள், பரிமேலழகர் மட்டும் கவரி மா வைத் தனது உரையில் சரியாகப் பயன்படுத்தி உள்ளார். அதன் பிற்பாடு உரை எழுதிய புலவர்களில் சிலர், கவரி மான் என்றே பயன்படுத்திய காரணத்தால் ஏற்பட்ட குழப்பமே இது.
எனவே, கவரி மான் என்னும் சொல் குறிப்பிட்ட அந்தக் குறளில் இடம் பெறவில்லை என்பதும், கவரி மா என்பதே சரியானது என்பதும் புலனாகிறது அல்லவா?

கருத்துகள்
இன்னும் கருத்து இல்லை.