இசையரசி திருமதி எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களின் கணீர்க் குரலில் "குறை ஒன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா..." என்ற அற்புதமான ராகமாலிகை கீர்த்தனையைக் கேட்டு மனம் உருகாதவர்கள் யாரும் இருக்க முடியாது.

வேங்கடவப் பெருமானை நோக்கி, சிவரஞ்சனி - காபி - சிந்துபைரவி ஆகிய மூன்று ராகங்களும் சேர்ந்து குழைந்து வெளிப்படுகின்ற இந்தப் பாடலுக்குப் பின்னால் ஆச்சரியமூட்டும் ஒரு வரலாறு புதைந்து கிடக்கிறது என்ற உண்மையை ஒரு சிலர் மட்டுமே அறிந்திருப்பர்.

இப்பாடலை இயற்றியவர் யார்? என்ன சூழ்நிலையில், எப்போது, ஏன் இயற்றப்பட்டது? யாருக்காக இயற்றப்பட்டது? உலகம் இதை எப்போது அறிந்து கொண்டது? இந்தக் கேள்விகளுக்கான பதில்களை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

அது 1925 காலப் பகுதி. இலங்கையிலும் இந்தியாவிலும் பிரித்தானியர்களின் ஆட்சி கோலோச்சிக் கொண்டிருந்தது. இந்தியாவில் அந்நிய ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் ஒத்துழையாமை இயக்கம் பரிமாணம் பெற்றிருந்தது. மகாத்மா காந்தியின் தலைமையில் வக்கீல்கள் தந்தமது உரிமங்களை (லைசென்ஸ்) பார் கவுன்சிலிடம் ஒப்படைத்துவிட்டு இந்தப் போராட்டத்தில் இணைந்து கொண்டிருந்தார்கள்.

தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கோவில்களுக்குள் செல்லும் அனுமதி மறுக்கப்பட்டது. அதனை மீறி உள்ளே சென்றவர்கள் ஆங்கிலேயர்களால் சிறை பிடிக்கப்பட்டார்கள்.

கைகளில் பூக்கூடைகள், அர்ச்சனைத் தட்டுகள் சகிதம் நாராயணனைத் தரிசிக்க தினமும் மக்கள் கோவிலுக்குள் போவதும் வருவதுமாக இருப்பார்கள்.

"ஏழு மலையானே! திருப்பதியானே! வெங்கடேசா! கோவிந்தா!" என்று மாறிமாறி ஒலிக்கும் கோசங்களின் நடுவே அவன் குரலும் உரத்துக் கேட்கும்.

"கண்ணா! கோவிந்தா! பரம்பொருளே! உன் தரிசனம் எனக்கு வேண்டுமய்யா. ஒரேயொரு முறை உன் முகத்தை எனக்குக் காட்டுவாயா? தாழ்த்தப்பட்டவன் என்று சொல்லி எல்லோரும் என்னை ஒதுக்கி வைக்கிறார்களே! நீ கூடவா கண்ணா?"

கைகள் கூப்பி விழிநீர் சொரிய தினந்தினம் இப்படித்தான் நின்று புலம்புகிறான் அந்த ஏழை பக்தன்.

கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்ட ஒரு பஞ்சமன் அவன். ஒருநாள் இரண்டு நாளல்ல... கடந்த பத்து வருடங்களாகவே அவன் இப்படித்தான் கோவில் வாசலில் நின்று உள்ளம் நொந்து, உயிர் கரைந்து வேங்கடவன் தரிசனத்துக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறான்.

ஒருநாள் இதேபோல அந்த ஏழை பக்தன் கோவில் வாசலில் நின்று மனமுருகி அழுது கொண்டிருக்கிறான். அப்பொழுது, பக்தர்களின் கூட்டமொன்று கண்ணன் நாமம் சொல்லி பஜனை செய்தவாறு கோவிலுக்குள் பிரவேசிக்க, இந்த பக்தனுக்கு உணர்ச்சி மேலிடுகிறது. என்ன செய்கிறோம் என்பதை அறியாதவனாக, "கோவிந்தா கோவிந்தா" என்று உரத்த குரலில் கூறியவாறு அவர்களுடன் சேர்ந்து ஆலயத்தினுள் பிரவேசித்து விடுகிறான்.

கொஞ்ச நேரம்தான்... ஆங்கிலேயப் படைகளால் கைது செய்யப்பட்டு இழுத்துச் செல்லப்படுகிறான். பஞ்சமனாகப் பிறந்தது அவன் செய்த குற்றமா? பக்தி செய்யும் உரிமை அவனுக்கு இல்லையா? பத்து வருடங்களுக்கு மேலாக தன்னை நோக்கி உருகிக் கொண்டிருந்த அந்த ஏழை பக்தனின் குரல் கண்ணன் காதுகளில் கேட்கவில்லையா? அந்த ஏழைக்காக வாதிட யாருமே இல்லையா?

மனிதர் வடிவில் கண்ணன் வந்தான். மனித நேயம் கொண்ட ராஜாஜியே அந்த மனிதர்.

1925 பாரத நாடெங்கும் புத்தெழுச்சி பெற்றிருந்த விடுதலைப் போராட்டத்தின் ஒத்துழையாமை இயக்கத்தின் கீழ், தமது வக்கீல் தொழிலை புறக்கணித்து போராட்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த ராஜகோபாலாச்சாரியார் என்ற ராஜாஜிக்கு, சித்தூர் என்ற இடத்திலிருந்த நண்பர் ஒருவர் மூலமாக ஒரு வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.

ராஜாஜியின் கொள்கை அந்த நண்பருக்குத் தெரிந்ததால் தாழ்த்தப்பட்டவர்களுக்கான ஆலய பிரவேசம் அனுமதிக்கப்பட வேண்டுமென வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.

சிறையில் வாடிக் கொண்டிருந்த அந்த ஏழை பக்தனுக்காக நண்பர் விடுத்த கோரிக்கையை ராஜாஜியால் புறக்கணிக்க முடியவில்லை. அந்த பக்தனுக்காக நீதிமன்றில் அவர் வாதாட வேண்டும். அதேசமயம் ஒத்துழையாமை இயக்கத்தின் விதியை மீறுவதா? கட்சியா?... நியாயமா?

ராஜாஜியின் கொள்கைக்கு முன்னால் காந்தியின் கட்டளை தோற்கிறது. சித்தூர் சென்று அந்த ஏழை பக்தனுக்காக வாதிட முடிவெடுக்கிறார்.

ஆனால், வக்கீல் தொழிலுக்கான உரிமத்தை கைவிட்டு ஏழு ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில் எவ்வாறு ஒரு வக்கீலாக வாதிட முடியும்? வக்கீலாக இல்லாமல், தனி மனிதனாக ஒரு குற்றவாளிக்காக வாதிடுவதற்கு சட்டத்தில் இடமிருப்பதை சுட்டிக்காட்டி, நீதிமன்றின் அனுமதியோடு சிவில் உடையில் அந்த ஏழை பக்தனுக்காக வாதாடுகிறார். அவனுக்கு விடுதலை கிடைக்கிறது.

அன்று - அவனைத் தன்னுடன் திருக்கோவிலுக்கு கூட்டிச் செல்கிறார். தெய்வ தரிசனத்தில் அந்த பக்தன் பரவசமாகி மெய்யுருகி நின்றான். அதுகண்டு ராஜாஜி மகிழ்ந்தார்.

இந்தச் சம்பவம் தந்த உணர்ச்சி மேலீட்டில் ராஜாஜி எழுதிய பாடல்தான், "குறை ஒன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா" கீர்த்தனை.

23 டிசம்பர் 1925 இல் நிகழ்ந்த இந்த வரலாற்றுச் சம்பவம் ஏனோ பலருக்கும் தெரியாமல் போய்விட்டது. தமிழறிஞர் மீ.ப.சோமு அவர்களின் உதவியுடன் எழுதப்பட்ட இந்த பாடல்தான் ராஜாஜி அவர்கள் தமது வாழ்நாளில் எழுதிய ஒரேயொரு பாடல்.

42 வருடங்களின் பின்னர், முதன்முதலாக 1967 இல் கல்கி வார இதழில் இந்தப் பாடல் பிரசுரமாகியது. 1979 களில் கடயநல்லூர் வெங்கட்ராமன் அவர்களால் இசையமைக்கப்பட்டு, எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களால் பாடப்பட்டு இப்பாடல் உலகம் முழுவதும் பிரசித்தமாகியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக ராஜாஜி அவர்கள் தமது மருமகனாகிய (மகளின் கணவர்) காந்தியின் மகன் தேவதாசுக்கு ஒரு கடிதம் எழுதியதாகவும், அக்கடிதம் காந்தியின் பார்வைக்குச் சென்றதாகவும், உன்னதமான ஒரு காரியத்தைச் செய்தமைக்காக காந்திஜி ராஜாஜியை பாராட்டியதாகவும் ஒரு தகவல் உண்டு.

(இணையத்தில் வெளியான தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இக்கட்டுரை எழுதப்பட்டது.)

(கனடா தமிழர் தகவல் இதழின் ஆண்டு மலரில் ஜூலை 2023 வெளியான கட்டுரை)