கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா!

மேற்படி சொற்றொடர் நம்மில் பலருக்கும் தெரிந்த ஒன்று. நம்மைக் குறைத்து மதிப்பிடும் ஒருவரிடமோ, அல்லது மட்டம் தட்டியும் பேசும் ஒருவரிடமோ கோபம் ஏற்படும்போது - நாம் திருப்பி அடிக்கும் ஒரு கேள்வியாக இச்சொற்றொடரை எப்போதாவது பயன்படுவதுண்டு.

இங்கே கொக்கும் கொங்கணவரும் ஏன் இடம்பெற்றுள்ளன?

இதற்குப் பின்னால் ஒரு கதை அல்லது சம்பவம் நிச்சயமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் தொடங்கிய என் தேடலுக்கு விடை கிடைத்தது. கிடைத்த விடயம் சும்மா சொல்லக்கூடாது.. சுவாரஸ்யம் நிறைந்தது தான். அதை உங்கள் எல்லோருடனும் இதோ பகிர்ந்து கொள்கிறேன்.

காடொன்றில் கடுந்தவத்தில் ஆழ்ந்திருக்கிறார் கொங்கணவர் சித்தர். புற உலகம் பற்றிய பிரக்ஞையே இல்லாத ஒரு நிஷ்டை அது. அப்பொழுது வானில் பறந்த ஒரு கொக்கு போட்ட எச்சம் அவரது உடல் மீது விழுந்தது. பல ஆண்டுகளாய்த் - தொடர்ந்த அந்தத் தவம் அந்த விநாடியில் கலைந்து போக - கொங்கணவர் கண் விழித்தார், கடுங்கோபம் முகத்தில் தெரிந்தது. பல்லாண்டு செய்த தவத்தின் பலனாய் விளைந்திருந்த யோகாக்கினி அவர் விழிகளில் ஏறியது! அந்தப் பார்வை பட்டதுமே கொக்கு அந்தக் கடுந்தீயில் வெந்து சாம்பலாகிப் போனது. வார்த்தைகளின் சாபம் இல்லாமல், பார்வையிலேயே கொக்கு அழிந்து போய் விட்டது.

தவத்தின் நெருப்பு உடலில் தணிந்த போது, சித்தருக்குப் பசி ஏற்பட்டது. அருகில் இருந்த ஒரு வீடு கண்களில் தென்பட்டது. வாசலில் போய் நின்று பிச்சை கேட்டார்.

வீட்டுக்குள் இருந்த பெண், தனது கணவனுக்கு உணவு பரிமாறி, இன்னோரன்ன பணிவிடைகளையும் செய்து கொண்டிருந்தாள். அவளைப் பொறுத்தவரை இல்லறமே தலையாய அறம். சித்தரின் வருகை அறிந்திருந்தும் தனது பணிகளை முடிக்கும் வரை அவள் வெளியே வரவில்லை.

சித்தரோ... வாசலில் நீண்ட நேரமாய்க் காத்திருக்கிறார். தாமதம் ஏற்படுத்திய கோபம் மீண்டும் அவரிடத்தில்!

கொக்கைப் பார்த்த அதே பார்வையால் அந்தப் பெண்ணையும் பார்த்தார். ஏனோ இப்போது நெருப்பும் வரவில்லை, அந்தப் பெண்ணும் தீயில் பற்றி எரியவில்லை. அவள் அப்படியே அசையாமல் நின்றாள். பயப்படவும் இல்லை. பதிலுக்கு ஒரு புன்னகை மட்டுமே வெளிப்பட, ஒரேயொரு கேள்வி கேட்டாள்.

" கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா? "

என்ன இது? காட்டுக்குள் நடந்ததை யாரும் பார்க்கவில்லை.. யாருக்கும் எவரிடத்தும் போய்ச் சொல்லியிருக்கவும் வாய்ப்பில்லை. ஆனால்.. இந்தப் பெண் வீட்டுக்குள் இருந்தபடியே அதை எப்படி அறிந்தாள்?

சித்தர் அப்படியே சிலையாகி நின்றுவிட்டார்.

அந்தப் பெண்ணுடைய உள்ளுணர்வும் ஆற்றலும், அவள் கடைப்பிடித்த உயர்வான இல்லற தர்மத்தால் உண்டானவை. அதனால்தான் சித்தரின் பார்வை அவளை எதுவும் செய்யவில்லை.

வலிமை பெரிதென்று நினைக்கிறோம். கடமையை ஆத்மார்த்தமாகச் செய்யும் ஒவ்வொருவரின் வலிமையும் தவவலிமையை விடப் பெரியது!

கொங்கணவர் தன் வழியை மாற்றினார். அந்தப் பெண்ணின் வழியில் உண்மை ஞானம் தேடி, பயணம் தொடர்ந்தார்- என்பது கதை.

தவம் ஒரு வழி. இல்லறம் மற்றொரு வழி.இரண்டாவதும் சிறியதல்ல!இரண்டுமே வலிமை கொண்டவை தான்.