இந்தப் பெண்ணுக்கு எப்போதும் கடலோடு ஒரு காதல் இருந்திருக்கிறது. கரையில் நின்று கடலைப் பார்ப்பவர்கள் அதன் அழகை ரசிக்கிறார்கள். ஆனால் டயானா நயாட் அதன் நடுவே இறங்கி, ஐம்பத்து மூன்று மணி நேரம் அதனோடு உரையாடியவர்.
நயாட் 1949-ஆம் ஆண்டு நியூயார்க்கில் பிறந்தவர். இளமையிலேயே நீண்டதூர நீச்சலில் புகழ் பெற்றார். 1975-ல் மன்ஹாட்டன் தீவைச் சுற்றி நீந்தி சாதனை படைத்தார்.
1978-ல், தனது 28-ஆம் வயதில் கியூபாவிலிருந்து ஃப்ளோரிடாவுக்கு நீந்த முதல் முறை முயன்றார். ஆனால் கடுமையான காற்றும் நீரோட்டமும் அவரைத் தோற்கடித்தன. அடுத்த ஆண்டே பஹாமாஸிலிருந்து ஃப்ளோரிடாவுக்கு நீந்தி வென்றார். பிறகு நீச்சலிலிருந்து விலகி எழுத்து, ஊடகம் எனத் தன் பாதையை மாற்றிக்கொண்டார்.
ஆனால் அந்த முதல் தோல்வியில் முடிந்த சாதனை முயற்சியின் வெற்றித் தாகம் அவருக்குள் அடங்கவே இல்லை. அவர் அறுபது வயதை எட்டியபோது, "இப்போது இல்லையென்றால் எப்போதும் இல்லை" என்று மீண்டும் கடலுக்குத் திரும்பினார். 2011 ஆம் ஆண்டு ஒருதரம் , 2012 ஆம் ஆண்டு இரண்டாம் தரம் என அடுத்தடுத்து இரண்டு தரம் முயன்றார்.
ஒவ்வொரு முறையும் ஆஸ்துமா, ஜெல்லிமீன் கொட்டுகள், புயல் போன்றவை அவரைத் தடுத்தன. நான்கு முறை தோற்ற ஒருவர் ஐந்தாவது முறை இறங்குவதற்குத் தேவைப்பட்டது உடல்வலிமையை விட மனவலிமையே. அந்த மனவலிமையே இன்று நான் நயாட்டின் பற்றி எழுதுவதற்கு உண்மையான காரணமாயிற்று.
விடாமுயற்சி
2013-ல் இரவும் பகலும் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டார்.அவருக்கு அப்போது வயது 64. அந்த நீச்சல் பயிற்சியின் போது, கடலின் உப்பு நீரால் அவரது நாக்கு வீங்கியது, ஜெல்லிமீன்கள் அவரைத் தாக்கின, தூக்கமின்மை அவரைப் பிரமைகளுக்குள் தள்ளியது. அப்போதும் அவர் நிற்கவில்லை.
சாதனை செய்யும் அந்த நாளும் வந்தது. 2013 செப்டம்பரில் கியூபாவின் ஹவானாவிலிருந்து அமெரிக்காவின் ஃப்ளோரிடா வரை, சுமார் 177 கிலோமீட்டர் தூரத்தை அவர் நீந்திக் கடந்தார். எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
அந்தச் சாதனை நாளில், ஃப்ளோரிடாவின் கடற்கரையில் தள்ளாடியபடி அவர் வந்து நின்று, உலகுக்குச் சொன்ன செய்தி இதுதான்: கனவைத் துரத்த வயது முக்கியமில்லை. ஆணா பெண்ணா என்பதும் முக்கியமில்லை.
தோல்விக்குப் பிறகும் முப்பத்தைந்து ஆண்டுகள் ஒரு கனவைச் சுமந்து செல்ல முடிந்த மனஉறுதி பாராட்டுக்குரியது.
நயாட்டின் கதை நமக்குச் சொல்வது, தோல்வி என்பது முடிவல்ல, அது ஒரு இடைவேளை. கடலை விட மனத் தைரியம் பெரியது. முயன்றால் சாதிக்க முடியும்.

கருத்துகள்
இன்னும் கருத்து இல்லை.