ஒரே வரியில் ஐந்து தெய்வங்களை வர்ணிக்க முடியும்.

அது " சிரமாறு உடையான் "

சிரம் என்பது தலையைக் குறிக்கும்.

  1. சிரம் மாறு உடையான் : தலையது மாறி யானையின் சிரம் அமைந்த விநாயகப் பெருமான்.

  2. சிரம் ஆறு (6) உடையான் : ஆறுமுகம் படைத்த முருகப் பெருமான்.

  3. சிரம் ஆறு உடையான் : சிரத்தில் கங்கையைக் கொண்ட சிவபெருமான்.

  4. சிரம் மாறு உடையான் : சிரமது முன்னும் பின்னும் உள்ள நான்முகனாம் பிரம்மனைக் குறிக்கும்.

  5. சிரம் ஆறு (நதி) உடையான் : காவிரி ஆற்றில் சயனித்திருக்கும் ஸ்ரீ ரங்கநாதரைக் குறிக்கும்.

நம் தமிழ் மொழியில் உள்ள சிறப்பு இது!

இதைச் சொன்னவர் செய்குதம்பி பாவலர் என்னும் ஒப்பற்ற தமிழறிஞர்.

செய்குத்தம்பிப் பாவலர் பற்றிய சிறு குறிப்பு:-

செய்குத்தம்பிப் பாவலர் (1874–1950) தமிழ் இலக்கிய உலகில் "சதாவதானி" என்ற சிறப்புப் பெயரால் போற்றப்படும் புலவர். தமிழ், இசுலாமியப் பண்பாடு, தேசிய உணர்வு ஆகிய மூன்றையும் ஒருங்கே தம் வாழ்வில் இணைத்தவர். தமிழுக்கு மதம் தடையல்ல என்பதற்கு இவரது வாழ்க்கையே சான்று.

இவர் இந்தியாவில் நாகர்கோவிலை அடுத்த இடலாக்குடியில் பிறந்தார். சிறுவயதிலிருந்தே தமிழ் இலக்கணம், இலக்கியம், நிகண்டுகள் ஆகியவற்றில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டு கற்றார். நினைவாற்றலும் கவிதை இயற்றும் திறனும் இவரிடம் இயல்பாக அமைந்திருந்தன.

ஒரே நேரத்தில் நூறு செயல்களைக் கவனித்து, அவற்றுக்குரிய விடைகளையும் செய்யுள்களையும் நினைவிலிருந்து கூறும் கலையே சதாவதானம். இக்கலையில் இவர் தேர்ந்து, சென்னையில் அறிஞர் பெருமக்கள் முன்னிலையில் அதை நிகழ்த்திப் பெரும் புகழ் பெற்றார். அதனாலேயே "சதாவதானி" எனப் போற்றப்பட்டார்.

இவர் தேசிய இயக்கத்தில் ஆர்வம் கொண்டவர்; காந்தியடிகளின் கொள்கைகளைப் போற்றியவர். விடுதலை உணர்வையும் சமய நல்லிணக்கத்தையும் தம் பாடல்கள், சொற்பொழிவுகள் மூலம் பரப்பினார்.

தமிழ்ப் புலமை, நினைவாற்றல், நாட்டுப்பற்று, சமய நல்லிணக்கம் ஆகியவற்றின் அடையாளமாக விளங்கிய செய்குத்தம்பிப் பாவலர், தமிழ் வரலாற்றில் என்றும் நினைவுகூரத்தக்கவர். சிரமாறு உடையான் என்று இந்துக்கள் வணங்கும் 5 தெய்வங்களின் பெயர்களை கூறியிருக்கும் இசுலாமியப் புலவர்.