சைவ சமயம் சார்ந்த அருளாளர்கள் பலர் பல்வேறு தலங்களில் சென்று, முழுமுதற் கடவுளாகிய சிவனைப் பாடிய அருட்பாடல்களின் தொகுப்பே சைவத் திருமுறைகள் எனப்படுகின்றன.

வெவ்வேறு பெயர்களிலுள்ள தனிப்பாடல்களும், சிறு நூல்களும் அடங்கிய ஒரு பொதுக்குறியீடாக, திருமுறை என்ற சொற்றொடர் வழங்கப்படுகிறது. திரு என்றால் தெய்வம், முறை என்பது நூல் என்ற பொருள் கொள்ளும். எனவே, திருமுறை என்பது, தெய்வத்தன்மை பொருந்திய ஒரு நூல் என்று பொருள்படும்.

திருமுறை கண்ட சோழன் எனப்படும் முதலாம் இராசராசன் காலத்தில் வாழ்ந்த நம்பியாண்டார் நம்பி என்னும் சிவ வேதியர், கல்வெட்டுகள், பழுதடைந்தும் பழுதடையாததுமான ஏட்டுச் சுவடிகள் போன்றவற்றில் சிவனடியார்களால் பதியப்பட்ட பதினொரு திருமுறைகளை ஏறத்தாழ ஏழாம் நூற்றாண்டளவில் தொகுத்தார். இதன் பின்னர், பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சேக்கிழாரின் பெரிய புராணம் பன்னிரண்டாவது திருமுறையாக இணைக்கப்பட்டது. கி.பி. 700 களில் வாழ்ந்த, தேவாரங்களை அருளிய நாயன்மார்களைப் பற்றியதே பெரிய புராணம்.

சுந்தரமூர்த்தி சுவாமிகளைக் காப்பியத் தலைவராகக் கொண்டு, அவர் போற்றிய சைவ அடியார்களின் வாழ்க்கை வரலாற்றை இந்நூல் சொல்கிறது.

தமிழ் மொழியில் 27 அற்புதமான சிவனடியார்கள் புனைந்த பன்னிரண்டு புனித நூல்களின் தொகுப்பில் உள்ள பாடல்களே 12 திருமுறைகளாகப் போற்றிப் பாடப்பட்டு வருகின்றன.

தேவாரம் என்பது தே+வாரம். தே என்றால் கடவுள். வாரம் என்றால் மாலை.‌கடவுளின் மீது சூடப்பட்ட பாமாலைகள் தேவாரம் எனப் பெயர் பெற்றன. திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் அருளிய தேவாரங்கள் முதல் மூன்று திருமுறைகள் ஆகவும், அடுத்த மூன்று திருமுறைகள் திருநாவுக்கரசரால் பாடப்பட்ட தேவாரங்களாகவும், ஏழாம் திருமுறை சுந்தரமூர்த்தி நாயனார் தேவாரங்களைக் கொண்டதாகவும் இருக்கின்றன.

மாணிக்க வாசகரின் திருவாசகமும் திருக்கோவையாரும் எட்டாம் திருமுறையாகக் கொள்ளப்படுகின்றன.

திருவாசகத்துக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு.

"திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்" என்ற வாசகம் நாம் எல்லாரும் அறிந்ததே. இதைவிட சிவப்பிரகாச அடிகள் கூறுகிறார்:

"திருவாசகம் இங்கு ஒருக்கால் ஓதிடங்கால் கருங்கல் மனமும் கரைந்துருகும்" என்று.

அடுத்து வருவது 9 ம் திருமுறை.

திருமாளிகைத் தேவர் உள்ளிட்ட ஒன்பது பேர் பாடிய திருவிசைப்பா, திருப்பல்லாண்டு என்பவற்றைக் குறிப்பது.

'அன்பே சிவம்' என்ற அருமையான வாசகத்தின் பிதாமகராகிய திருமூலரின் 'திருமந்திரம்' 3000 பாடல்களை உள்ளடக்கிய பத்தாவது திருமுறையாகப் பக்தர்களை ஈடேற்றுகின்ற ஒரு மாமருந்தாக அமைகிறது. திருமந்திரம் - தமிழ் மூவாயிரம் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது.

வேதாந்தம், சித்தாந்தம், சித்தி, முக்தி, யாகம், யோகம் ஆகியவற்றுக்கான அழகிய விளக்கம் திருமந்திரத்தின் தனி அடையாளம்.

இதனையடுத்து, காரைக்கால் அம்மையார் உள்ளிட்ட 12 பேர்களின் 40 நூல்களின் தொகுப்பு, பதினோராம் திருமுறையாகப் போற்றப்படுகிறது.

ஏழாம் நூற்றாண்டில் நம்பியாண்டார் நம்பி எனும் சிவ வேதியரால் தொகுக்கப்பட்ட மேற்படி 11 திருமுறைகளுக்குப் பின், 12 ம் நூற்றாண்டில் வாழ்ந்த சேக்கிழார் சுவாமிகளின் பெரிய புராணம் பன்னிரண்டாவது திருமுறையாக இணைக்கப்பட்டது.

சிவாலயங்களில் சிவனுக்கு ஆராதனைகள் நடக்கும் போது பன்னிரு திருமுறைகள் பாடப் படுவது வழக்கம். அவ்வாறு 12 திருமுறைகளைப் பாட இயலாத நேரத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து பாடல்களைப் பஞ்ச புராணம் என்று ஓதுதல் நடைமுறை.

சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோர்களின் தேவாரத்தின் ஏழு திருமுறைகளிலிருந்து ஒரு தேவாரமும், திருவாசகத்திலிருந்து ஒரு பாடலும், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரிய புராணம் என்பவற்றின் மூன்று பாடல்களும் முறையே பாடப்படும்.

இவற்றுடன் ஒரு திருப்புகழையும் இணைத்துப் பாடும் வழக்கம் பிற்பாடு ஏற்பட்டது.

தன்னுடைய அடியார்களுக்கு வேண்டியன எவையோ, அவற்றை அந்த எம்பிரானே நிறைவேற்றி வைப்பான் என்பதைத் திருமுறைகள் சொல்கின்றன.

மனமும் உயிரும் உருகிய ஒரு நிலையில் இறைவனை நோக்கி இந்தத் திருமுறைகளை நாம் பாடும்போது, நம் வேண்டுதல்களை நிச்சயம் அந்தப் பெருமான் நிறைவேற்றுவார். இதையும் தாண்டி, திருமுறைகளில் பல, கொடிய நோய்களையும் வல்வினைகளையும் தீர்க்கும் அருமருந்தாகவும் அமைந்திருந்ததை வரலாற்றினூடு நாம் அறிய முடியும். உதாரணமாக,

"கூற்றாயின வாறு விலக்ககலீர்" என்ற பாடலை நாமனைவரும் அறிவோம். இது நாவுக்கரசரின் நான்காம் திருமுறையில் அமைந்துள்ள பாடல்.

கூற்றாயின வாறு விலக்ககலீர்

கொடுமை பல செய்தன நானறியேன்

ஏற்றாய் அடிக்கே இரவும் பகலும்

பிரியாது வணங்குவன் எப்பொழுதும்

தோற்றாது என் வயிற்றின் அகம்படியே

குடரோடு தொடக்கி முடக்கியிட

ஆற்றேன் அடியேன் அதிகைக் கெடில

வீரட்டானத் துறை அம்மானே.

சூலை நோயானது என் வயிற்றினுள்ளே குடலோடு ஏனைய உறுப்புகளையும் கட்டிச் செயல்படாமல் முடக்குதலால், அடியேன் அவ்வலியைப் பொறுக்க இயலாதேனாக உள்ளேன். அந்நோய் கூற்றுவன் போல என்னைத் துரத்துகிறது. அதை நீக்கும் ஆற்றல் உமக்கே உள்ளது இறைவா! அதை நீர் நீக்கி விட்டால், காளை மீது உலா வரும் உமது அடிக் கண் நீங்காமல், மனதால் துணிவும், தலையில் தணிவும், மொழியில் பணிவும் தோன்ற உம்மை வணங்குவேன்; என்னை உன் அடியில் ஏற்றுக்கொள் இறைவா!

இதே நான்காம் திருமுறையின் 62 வது திருப்பதிகத்தின் மூன்றாவது பாடலை இப்போது பார்ப்போம்.

ஒரு மருந்தாகி உள்ளாய் உம்பரோடு

உலகுக்கு எல்லாம் பெரு மருந்தாகி நின்றாய்

பேர முதின் சுவையாய்க் கருமருந்தாகி உள்ளாய்

ஆளும் வல்வினைகள் தீர்க்கும் அருமருந்து

ஆலவாயில் அப்பனே! அருள் செய்வாயே!

ஒப்பற்ற தேவாமிர்தமாய் உள்ளவனே! தேவர்களுக்கும் மக்களுக்கும் தலையாய மருந்தாய் உள்ளவனே!

சிறந்த அமுதின் சுவையாய்ப் பிறவிப் பிணி தீர்க்கும் மருந்தாகி உள்ளவனே! எங்கள் வலிய வினைகளைப் போக்கி எங்களை அடிமை கொள்ளும் அருமருந்தாய் ஆலவாயில் உறையும் தலைவனே! அருள் செய்வாயாக!

எம்பிரான் சிவனை நோக்கிய அழகிய, நெஞ்சுருகும் விண்ணப்பம் இது அல்லவா?

கருணை வள்ளலாகிய சிவபெருமான், தன்னுடைய பத்தர்களின் வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி வைப்பான். தன்னுடைய அடியார்களுக்கு வேண்டியவை எவையோ, அவற்றை அந்த எம்பிரானே நிறைவேற்றி வைப்பான் என்பதை எட்டாம் திருமுறையில் வரும் மணிவாசகரின் அழகிய திருவாசகம் இப்படிச் சொல்கிறது.

வேண்டத்தக்கது அறிவோய் நீ..

வேண்ட முழுதும் தருவோய் நீ..

வேண்டும் அயன்மார்க்கு அரியாய் நீ

வேண்டி என்னைப் பணி கொண்டாய்..

வேண்டி நீயா தருள் செய்தாய்

யானும் அதுவே வேண்டின் அல்லால்

வேண்டும் பரிசு ஒன்று உண்டெனில்

அதுவும் உன்றன் விருப்பன்றோ.

இந்தத் திருவாசகம் கூறுவதைப் பாருங்கள்..

எனக்கு வேண்டிய எல்லாவற்றையும் நீயே அறிவாய்.. நான் எதைக் கேட்டாலும் அருளும் கருணை வள்ளல் நீ, உன்னிடம் பல பொருள்களை வேண்டும் திருமாலுக்கும் பிரம்மாவுக்கும் அரியவன் நீ. எனக்கு வேண்டியவற்றைக் கொடுத்து, நீயே என்னை ஏற்று அருள் செய்தாய்.

நானும் அதைத்தான் விரும்பினேன். இப்போது நான் வேண்டுவது ஏதும் இருக்குமேயானால் அதுவும் உன்னுடைய விருப்பமே!

காதலாகி, கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார்க்கு நன்னெறி காட்டும் திருமுறைகள் சைவ சமயத்தவர்களின் வாழ்வியலோடு ஒன்றிக் கலந்து நிற்கும் அருமருந்துகள் என்றால் அது மிகையாகாது.

"வேண்ட முழுதும் தருவோய் நீ" என்று மாணிக்கவாசகர் பாடியுள்ளபடி, வேண்டுவன எல்லாம் தந்தருளுகின்ற கருணை வள்ளலாகிய சிவபெருமானைப் போற்றி வணங்கித் துதி செய்து எங்கள் வல் வினைகள் தீர்ப்போமாக!

தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!