தை மாதம் என்பது, தமிழர் பாரம்பரிய மரபுத் திங்கள் (மாதம்) என்பதை இன்று உலக நாடுகள் சிலவற்றில் உரத்து ஒலிப்பதைக் கேட்டு, தமிழர்களாகிய நாமனைவரும் மகிழ்ச்சியடைவதில் வியப்பில்லை.

உழவர் திருநாளாகிய தைப்பொங்கல் தினம் தான் தமிழருடைய புத்தாண்டு தினம் என்பதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறையாகிவிட்டது.

பெரும்பாலும் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 14 அல்லது 15 ஆம் திகதியில் தான் தமிழ்புத்தாண்டு வரும். ஏனெனில், அதுவே தைப்பொங்கல் நாள்.

தமிழருக்கு தை 01 (தமிழ்ப்புத்தாண்டு) ஜனவரி 14 அல்லது 15 இல் வரும். இப்படியே போய், ஜனவரி 31 இல் மாதம் முடிவடைய, பெப்ரவரி 01 வரும். எனினும், தமிழரின் தை மாதம் தனது ஒரு மாத காலத்தை நிறைவு செய்து, மாசியில் அடியெடுத்து வைப்பது பெப்ரவரி 13 இல் தான்.

ஒரு வருடத்தில் பன்னிரண்டு மாதங்கள் என வகுக்கப்பட்டபடி மாதங்களின் நகர்வு நிகழ்கிறது.

இங்கே, முக்கியமாக நாம்- கவனிக்க வேண்டிய ஒரு விசயம் உண்டு.

சர்வதேசமும் ஏற்றுக்கொண்ட ஆங்கில நடைமுறையில், மாதங்கள் ஜனவரி, பெப்ரவரி எனத் தொடங்கி டிசம்பரில் ஒரு வருடம் நிறைவு பெறும். இதே போன்று தமிழில்- தை, மாசி எனத் தொடங்கி, மார்கழியுடன் ஒரு வருடம் நிறைவு பெறும்.

இதுவே, ஜனவரியை தை என்றும், பெப்ரவரியை மாசி என்றும், நவம்பரை கார்த்திகை என்றும், எல்லா மாதங்களின் பெயர்களையும் அவ்வாறே சொல்லவும் எழுதவும் நாம் எம்மை ஆக்கிவிட்டது. இப்படிப்- பார்க்கும் போது, தை என்பது ஜனவரியின் தமிழ் மொழி பெயர்ப்பு போலவும், மாசி- பெப்ரவரியின் தமிழ்ப் பெயர் போலவும் எல்லோரும் நினைப்பதாகவே தோன்றுகிறது. உண்மை அப்படி அல்ல!

உதாரணத்துக்கு ஒன்றை குறிப்பிடலாம்.

இது பலரும் அறிந்த ஒரு நாள். இலங்கை சுதந்திரம் அடைந்தது பெப்ரவரி 04-1948. இதை மாசி 04 என்று நாம் சொன்னால் அதுசரியா? இல்லை என்பதுதான் யதார்த்தம்!

தமிழில் புத்தாண்டு பிறந்து நகர்ந்து கொண்டிருக்கும் போது, அதாவது, தை 01, தை 02, என...

தை 22 ம் நாளன்று தான் பெப்ரவரி 04 வருகிறது. அந்த நாளை மாசி 04 என்று சொல்வது பொருத்தமா? தை 22 எப்படி மாசி 04 ஆகமுடியும்?

அன்பானவர்களே!

இது பற்றி ஆழமாக யோசியுங்கள்.

பெப்ரவரி 04 என்றால் அதை அப்படியே பெப்ரவரி 04 என்றே சொல்லுங்கள்... எழுதும்போது பதிவிடுங்கள். அதை விடுத்து, தை 22 ம் நாளை மாசி 04 என்று எழுதி நாமும் குழம்பி, மற்றவர்களையும் குழப்பி...

ஜனவரியை ஜனவரி என்றே சொல்லுங்கள்.

டிசம்பரை டிசம்பர் என்றே சொல்லுங்கள்...

அதை விடுத்து, ஜனவரியை தை என்றும், டிசம்பரை மார்கழி என்றும் இனிமேலும் பேச்சிலோ எழுத்திலோ பிரயோகிக்க வேண்டாம் என்பதை அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

மாசி 04 என்று குறிப்பிடப் படுவது, பெப்ரவரி 16 ஆம் திகதி தான் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள்.

சர்வதேச நியதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட, ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான மாதங்களின் பெயர்களை நாம் பயன்படுத்துவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால், தை முதல் மார்கழி வரையிலான மாதங்களின் தமிழ்ப்பெயர்களை ஜனவரி, பெப்ரவரியுடன் இணைத்துப் பார்ப்பதையும் எழுதுவதையும் இனிமேலாவது தவிர்க்க வேண்டும் என்பதே இன்றைய தேவை.

இது தொடர்பான உங்களுடைய கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. பதிவிடுங்கள்.

நன்றி.