பாரதி, தமிழின் கனவாகவும் இருக்கிறார்; நினைவாகவும் இருக்கிறார். பாரதி என்றால் கனவும் உண்டு. நினைவும் உண்டு.
"தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்"
என்ற பாரதியின் வரிகள் அனைவர் உதடுகளும் உச்சரித்தவை. இந்த வரிகளை அவர் எழுதக் காரணமாகவிருந்த ஒரு வலி மிகுந்த சோக வரலாறு.
இந்தப் பாடலை பாரதியார் எழுதக் காரணமாகவிருந்தவர்
நீலகண்ட பிரம்மச்சாரி என்னும் விடுதலைப் போராட்ட வீரன்.
உலகுக்கே சோறு போடும் தஞ்சை மண்ணில் பிறந்த நீலகண்ட பிரம்மச்சாரி, சிறை சென்று விடுதலையாகி வெளியே வந்த பின், உண்ண உணவின்றிச் சென்னை கடற்கரையில் அலைந்தார்.
பகல் முழுவதும் பாரதத் தாயின் விடுதலைப் பிரசாரம்..
இரவுகளில், தனது முகத்தில் கரியைப் பூசி, அடையாளம் தெரியாதபடி தன்னை மறைத்துக் கொண்டு,
"அம்மா! தாயே! ராப்பிச்சையம்மா!" என்று பிச்சை எடுத்தார்.
பகல் வேளைகளில் நெஞ்சில் விடுதலைக் கனல். இரவில் வயிற்றில் பசிக் கனல்! இரவில் இவர் பிச்சை எடுக்கும் போது அடையாளம் கண்டு கொண்ட ஒருவன், இவரை ஏளனமாகப் பார்த்து,
"இதற்கு நீ சிறையிலேயே இருந்திருக்கலாமே.? வேளா வேளைக்குச் சாப்பாடு போடுவார்களே.." என்று கேட்டான்.
இவருக்குக் கோபம் வந்துவிட்டது.
"அடேய்! அற்பப் பதரே! அந்நியன் கையால் உணவுண்டு வாழ்வதை விட, என் தேசத்து அன்னபூரணிகளின் கையால் பிச்சை பெற்று வாழ்வது எனக்குப் பெருமை. அவர்கள் ஒவ்வொருவரும் பாரத மாதாவே தான்"
என்று பதிலளித்தார்.
இந்த நிலையில், ஒரு நாள் இரவு,
நீலகண்ட பிரம்மச்சாரி பாரதியாரைச் சந்தித்தார். நீலகண்ட பிரம்மச்சாரியின் சிறை வேதனைகளையெல்லாம் கேட்ட பாரதி, "நீ சாப்பிட்டாயா?" என்று அவரிடம் கேட்டார்.
"இல்லை பாரதி. ஒரு நாலணா இருந்தா குடு. சாப்பிட்டு நாலு நாள் ஆச்சு" என்றார் சோகமாக.
நீலகண்ட பிரம்மச்சாரியின் இந்த வார்த்தைகள் பாரதியாரின் இதயத்தை இடியாகத் தாக்கியது, உடனே, அவரைப் பாரதி சாப்பிட வைத்தார்.
அவரது வறுமை நிலை கண்டு வேதனைப்பட்டார்.
"என்ன சமூகமடா இது? தேச விடுதலைக்காக அல்லும் பகலும் பாடுபடுகின்ற தேச பக்தர்களைப் பட்டினி போட்டு, பசியால் வாட விடும் சமூகம்... சொந்த தேசத்திலேயே பராரிகளாய் அலைய விடும் சமூகம்.." என்று பாரதியார் வேதனையை வெளிப்படுத்தினார். அந்த வேதனையில், பாரதி சிம்மமாய் கர்ஜித்த வார்த்தைகள்தான்,
"தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்" என்பது.
சுதந்திரத்துக்காகப் பசியோடும் பட்டினியோடும் போராடிய எண்ணற்ற தியாக வீரர்களில் ஒருவர் தான் 'நீலகண்ட பிரம்மச்சாரி.'

கருத்துகள்
இன்னும் கருத்து இல்லை.