நாவலர் பெருமான் சைவ சமயத்தை வளர்க்கப் பாடுபட்ட பெருந்தகை. 12 வயதிலேயே தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளையும் நன்றாகக் கற்றிருந்தார்.

ஆங்கிலேயர்களின் ஆட்சியில் இலங்கையும் இந்தியாவும் உட்பட்டிருந்த ஒரு காலப்பகுதியில், ஒரு நாள் அதிகாலை நாவலர் பெருமான் கடற்கரையோரம் காலாற நடப்பதற்காகப் போய்க் கொண்டிருந்த போது, வழியில் ஒரு குடிசை தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது.

அந்த வழியால் போய்க் கொண்டிருந்த நாவலரை ஆங்கிலேயப் படைகள் காரணமின்றிக் கைது செய்தன.

நாவலருடைய வழக்கு கோர்ட்டுக்கு வந்தது.

ஆங்கிலேய நீதிபதிக்குத் தமிழ் தெரியாது என்பதால் அன்றைய காலகட்டத்தில் மொழி பெயர்ப்பாளர்களை வைத்து வழக்குகள் வாதாடப்பட்டன.

நாவலர் ஆங்கிலத் திறமை பெற்றிருந்த காரணத்தால் தனது வாதத்தை ஆங்கிலத்தில் சொல்ல ஆரம்பித்தார்.

நீதிபதிக்கு அது பிடிக்கவில்லை.

"யார் இந்தப் பரதேசி? அவன் தமிழிலேயே பேசட்டும்... மொழி பெயர்ப்பாளன் சொல்லட்டும்" என்று சினந்து கூறினார்.

எனவே, நாவலர் தமிழில் சொல்லத் துவங்கினார்:

"எல்லி எழ நானாழிப் போதின் வாய்

ஆழி வரம்பனைத்தே காலேற்று காலோட்டப் புக்குழி..."

மொழி பெயர்ப்பாளருக்கோ தலை சுற்றியது.

இவர் என்ன சொல்ல வருகின்றார்?

மொழி பெயர்ப்புச் சரிவராது என்றுணர்ந்த நீதிபதி ஆங்கிலத்திலேயே சொல்லும்படி பணித்தார்.

நாவலர் சொல்லத் துவங்கியது என்ன என்பதை அறிவோமா?

"எல்லி எழ நானாழிப் போதின் வாய்..."

எல்லி என்றால் சூரியன். சூரியன் தோன்றுவதற்கு நான்கு நாழிகைக்கு முன்...

"ஆழி வரம்பனைத் தே..."

ஆழி என்றால் கடல்... கடற் கரை ஓரமாக...

"காலேற்று" - காற்று வாங்க...

"காலோட்டப் புக்குழி" - காலோட்டம் என்பது சிறுநடை.

புக்குழி - புறப்பட்ட போது…

இப்படிச் சொல்லத் துவங்கிய போதே எதுவும் புரியாமல் நீதிபதியினால் Full stop போடப்பட்டுவிட்டது.

பிறகென்ன?

நாவலர் தனது திறமையான ஆங்கில நடையில் வாதத்தைத் தொடர்ந்தார்.