பேச்சுத் தமிழில் நாம் உச்சரிக்கும் தமிழ்ச் சொற்கள் பலவற்றை நாம் எழுதும் போதும் அதே போலவே எழுத முற்படுகிறோம். பேச்சு வழக்கில் சில சொற்கள் உச்சரிக்கப்படுகின்ற போது அவை தவிர்க்க முடியாதவை என்பதை ஏற்றுக் கொள்ள முடியும். ஆனால், அதே சொற்களை எழுத்து வடிவில் கொண்டு வரும்போது அதே மாதிரி எழுதுவதைத் தவிர்க்க வேண்டும். மிகவும் அவதானமாக, தமிழின் தன்மை மாறாமல் அல்லது குறையாமல் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுதல் அவசியமானது. இப்போதெல்லாம் பல தமிழ்ச் சொற்கள் (வட மொழிச் சொற்கள் உட்பட) தவறான முறையிலேயே எழுதப்பட்டு வருகின்றன. காலப்போக்கில் அதுவே சரி என்று ஆகிவிடும் ஒரு மனப்போக்கு உருவாகினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

எனவே தான், தமிழின் தனித்துவம் குன்றாமல் அதனைப் பேணிப் பாதுகாக்க வேண்டியது நம் ஒவ்வொருவரினதும் கடமை என்பதால் -

அவ்வாறாக இடம் பெறுகின்ற சில சொற்களின் பிரயோகத்தை நாம் பார்க்கலாம்.

கலாசாரம் என்ற சொல், பேச்சு வழக்கில் 'கலாச்சாரம்' என்று உச்சரிக்கப்பட்டு, எழுதும் போதும் கலாச்சாரம் என்றே எழுதுகின்ற நடைமுறை.

கலை + ஆசாரம் = கலாசாரம். - இதுவே சரியானது.

இதே போன்றே பிரசாரம் - பிரச்சாரம் என்று உச்சரிக்கப்பட்டு, அப்படியே எழுத்து நடையிலும் வந்துவிட்டது.

நாகரிகம் என்ற சரியான வடிவம் நாகரீகம் என்று எழுதப்படுகிறது.

சமுகம் என்ற சொல் வருகை தருவது என்ற அர்த்தத்தில் வரும் - சமூகம் என்பது சமுதாயம் - Society.

அழைப்பிதழ்கள் பலவற்றில் இப்போதெல்லாம் -

'சமூகமளிக்கும் படி வேண்டுகிறோம்' என்று காணப்படுகிறது.

சமுகம் என்ற சொல்லை சமூகம் ஆக்கி - அர்த்தத்தையே மாற்றிவிடும் இந்த நடைமுறை பற்றி நாம் யோசிக்க வேண்டாமா?

'இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!'

'இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!'

இப்படியாக, வாழ்த்திலிருந்து பெறப்படுகின்ற இந்த ‘க்கள்' இன் பாவனை அதிகமாகிக் கொண்டே செல்கிறது!!

வாழ்த்து என்பது, பன்மையாக மாறும் போது வாழ்த்து+கள் - வாழ்த்துகள் என்றே வரும்.

இதே போலவே, 'பாராட்டுகள்' என்ற சொல், 'பாராட்டுக்கள்' ஆக மாறியுள்ளது! இந்த வரிசையில் இன்னும் பல 'க்கள்' - இன்றைய பயன்பாட்டில் உலவி வருகின்றன.

பரிச்சயம் என்ற சரியான வடிவம் பரிட்சயம் என்று எழுதப்படுகிறது. நிச்சயம் - நிட்சயம் என்று எழுதப்படுகிறது.

சுய இச்சையில் செய்யப்படுவது சுயேச்சை.

சுயம் + இச்சை = சுயேச்சை.

இந்தச் சொல் இன்று பரவலாக 'சுயேட்சை' என்றே எழுத்தில் பயன்படுத்தப்பட்டு வருவதைக் காணலாம்.

  • இன்னும் தொடரும்...