அண்மையில் நான் கேட்க நேர்ந்த சில மேடைப்பேச்சுகளில், தமிழின் முக்கியத்துவம் பற்றியும், இனி வரும் சந்ததிக்கு - குறிப்பாக, புலம்பெயர் தேசங்களின் பிள்ளைகளுக்குத் தமிழைப் புகட்ட வேண்டிய அவசியம் பற்றியும் சில பேச்சாளர்கள் ஆதங்கம் வெளியிட்டதை அவதானிக்க முடிந்தது. இந்த ஆதங்கம், போற்றப்பட வேண்டிய ஒன்று தான். இது காலத்தின் தேவையும் கூட.

பலதரப்பட்ட விடயங்களை மேற்கோள் காட்டிய அவர்கள், பாரதிக் கவிஞன் கூறியதாகச் சொன்ன ஒரு வார்த்தைப் பிரயோகம் நெஞ்சுக்குள் நெருப்பள்ளிக் கொட்டியது!

'மெல்லத் தமிழ் இனிச் சாகும்' என்ற கூற்றை அந்த மகாகவியின் கூற்றாக அவர்கள் எடுத்து இயம்பிய போது - அதற்குரிய விளக்கத்தினை நம்மவர்கள் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டியதன் அவசியம் புரிந்தது. அதன் காரணமாகவே இந்தப் பதிவு இங்கே இடம் பெறுகிறது.

முண்டாசுக் கவிஞன் சொன்னது இதைத் தான்:

மெல்லத் தமிழ் இனிச் சாகும் என்று, மடையர்கள், அறிவற்றோர், கூறித் திரிவர். அந்தச் சொல்லத் தகாத சொல்லைப் பொய்ப்பித்து, எட்டுத் திசையெங்கும் சென்று கலை வளத்தை இங்கு கொண்டு வாருங்கள். கடவுள் ஆசியாலும் புலவர் முயற்சியாலும் இந்தப் பெரும் பழி தீரும்.

தமிழன்னை உலகத்தில் என்றும் கோலோச்சி இருப்பாள்!

அந்தக் கவிதையின் முழு வடிவம் கீழே:

கன்னிப் பருவத்திலே அந்நாள் - என்றன்

காதில் விழுந்த திசை மொழி எல்லாம்

என்னென்னவோ பெயருண்டு - பின்னர்

யாவும் அழிவுற்று இறந்தன கண்டீர்!

தந்தை அருள் வலியாலும் - முன்பு

சான்ற புலவர் தவ வலியாலும்

இந்தக் கணமட்டும் காலன் - என்னை

ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சி இருந்தான்.

இன்றொரு சொல்லினைக் கேட்டேன் - இனி

ஏது செய்வேன் எனதாருயிர் மக்காள்!

கொன்றிடல் போலொரு வார்த்தை - இங்கு

கூறத் தகாதவன் கூறினன் கண்டீர்!

"புத்தம் புதிய கலைகள் - பஞ்ச

பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்

மெத்த வளருது மேற்கே - அந்த

மேன்மைக்கலைகள் தமிழினில் இல்லை.

சொல்லவுங் கூடுவ தில்லை - அவை

சொல்லும் திறமை தமிழ் மொழிக்கில்லை

மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த

மேற்கு மொழிகள் புவிமிசையோங்கும்"

என்றந்தப் பேதையுரைத்தான் - ஆ

இந்த வசை எனக்கெய்திடலாமோ?

சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச்

செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!

தந்தை அருள் வலியாலும் - இன்று

சார்ந்த புலவர் தவ வலியாலும்

இந்தப் பெரும் பழி தீரும் - புகழ்

ஏறிப் புவிமிசை என்றும் இருப்பேன்!

பாரதி சொன்னது இதைத் தான்:

மடையர்கள் அறிவற்றோர் கூறித் திரிவது ‘மெல்லத் தமிழ் இனிச் சாகும்’ என்று, அந்தச் சொல்லத் தகாத சொல்லைப் பொய்ப்பித்து எட்டுத் திசையெங்கும் சென்று கலை வளத்தைத் இங்கு கொண்டு வாருங்கள். கடவுள் ஆசியாலும் புலவர் முயற்சியாலும் இந்தப் பெரும் பழி தீரும்..

தமிழன்னை உலகத்தில் என்றும் கோலோச்சி இருப்பாள்!