'க' வரிசையில் உள்ள எழுத்துகள் மட்டுமே கொண்டு ஆசுகவி இயற்றிய பாடல்:

காக்கைக் கா கா கூகை கூகைக்கா

காகக் கை

கோக் குக்கூ காக்கைக்குக்

காக்கைக்குக் கைக் கைக் காகா.

(கூகை - ஆந்தை)

பொருள் :-

காக்கையானது பகலில் கூகையை வெல்ல முடியும்.

கூகை இரவில் காக்கையை வெல்ல முடியும்.

கோ என்னும் அரசன், இரவில் ஆந்தையைப் போலவும், பகலில் காக்கையைப் போலவும் தன் நாட்டைப் பகைவரிடமிருந்து காக்க வேண்டும். கொக்கு காத்திருப்பது போல, எதிரியின் பலவீனம் அறிந்து, தக்க நேரம் வரும் வரை காத்திருந்து தாக்க வேண்டும். தகுதியற்ற காலம் எனில், தகுதியான அரசனுக்குக் கூட (கைக்கு ஐக்கு ஆகா) கையாலாகி விடாமல் போகக்கூடும்.

_________________________

'த' வரிசையில் உள்ள எழுத்துகள் மட்டுமே கொண்ட பாடல்

தத்தித்தா தாதூதி தாதூதி தத்துதி

தத்தித் துதைதி துதைத்தா

தாதுதி

தித்தித்த தித்தித்த தாதெது

தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது.

பொருள் :-

தத்தித் தாவி, பூவிலிருக்கும் மகரந்தத் தூளைத் தின்னும் வண்டே! ஒரு பூவில் உள்ள தாதினை உண்ட பின், மீண்டும் ஒரு பூவுக்குள் சென்று தாதெடுத்து உண்ணுகிறாய்.. உனக்கு (எத்தாது) எந்தப் பூவிலுள்ள தேன் தித்தித்தது?