"அப்பா! ஒரிகாமி எண்டா என்னப்பா?"

"இதென்ன இண்டைக்குப் புதுசா ஒரு கேள்வி.. ஒரிகாமியைப்பற்றி? எங்கை பார்த்தனி?"

"விதம் விதமா உருவங்கள் செய்யலாமாம்..அதுகும் பேப்பரிலை..எல்லாம் வடிவா இருக்கு..உங்களுக்குச் செய்யத் தெரியுமாப்பா?"

"ம்.. என்ன கேட்டனி? எனக்குச் செய்யத் தெரியுமா எண்டா? ம்.. செய்யலாம்.." அப்பா மழுப்பினார்.

"நீங்கள் சும்மா சொல்லுறியள். உங்களுக்குத் தெரியாது.

பேப்பரிலை செய்ய வேணும்.ஆனா பேப்பரை வெட்டவோ ஒட்டவோ கூடாது.அது ஒரு கலை அப்பா."

"சரி ஒத்துக்கொள்ளுறன். அந்தக் கலை எனக்குத் தெரியாது தான் ஆனா, அதோடை தொடர்பான ஒரு உண்மைக் கதை இருக்கு. அது எனக்குத் தெரியும்"

கதை என்றதுமே ரேகா ஆர்வமானாள்.

"என்ன கதை அப்பா? இப்பவே சொல்லுங்கோ உடனேயே சொல்லுங்கோ ப்ளீஸ் ப்ளீஸ்"

"சரி. சொல்லுறன் அதுக்கு முதல் நீ ஒரு வேலை செய்"

"என்னப்பா ? சொல்லுங்கோ."

"கூகுளிலை சடாகோ சசாகி (Satako Sazaaki) எண்ட பேரைப் போட்டுப் பார்."

"இதோ.. உடனேயே பாக்கிறன்"

அவசரம் அவசரமாக, அப்பா சொன்ன பெயரைப் பதிவுசெய்து தகவல் தேடுகிறாள்.

"கண்டிட்டன் அப்பா"

"என்ன இருக்கு?"

"A Japanese girl who became a victim of atomic bombs of Hiroshima when she was two years old and died on 25th October 1955 at the age of twelve"

இப்படித்தானப்பா போட்டிருக்கு. இதுக்கும் ஒரிகாமிக்கும் என்னப்பா சம்பந்தம்?"

"இருக்கு. அதைத்தான் இப்ப சொல்லப் போறன்.."

"சரி. சொல்லுங்கோ"

ஆர்வம் மேலிட அப்பாவுக்கு முன்னால் அமர்ந்து கொண்டாள் ரேகா.

கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாத பேரதிர்வொன்றின் சுழற்சியில் முற்றிலும் பொடிப் பொடியாகி போனது போன்ற ஒரு பரிதவிப்பில் ஹிரோஷிமா நகரம் தத்தளித்துக்கொண்டு இருக்கிறது.

"ஐயோ! என்ன நடக்கிறது?.. என் அம்மா எங்கே"

"எங்கே என் கணவர்?" "எங்கே என் குழந்தை?"

"எங்கே என் குடும்பம்?. எல்லோரும் எங்கே? என்ன நடந்துவிட்டது?"

முடிந்தவர்கள் மட்டும் இப்படிப்பட்ட அவலக் கூக்குரல்களை எழுப்பியபடி அங்குமிங்கும் கலைந்து ஓடிக்கொண்டிருக்க –

மடிந்து போனவர்கள் ஆயிரங்களில் சிதறுண்டு கிடக்கிறார்கள்.

ஏறத்தாழ எண்பதினாயிரத்துக்கும் அதிகமான குடிமக்கள்.

"எண்பதினாயிரம் சனங்களா? என்னப்பா சொல்லுறியள்? அப்படி என்னதான் நடந்தது?"

"ஜப்பானுக்கு மேலை அமெரிக்கா போட்ட அணுகுண்டு"

"அது ரெண்டாம் உலகப் போரிலை தானே?"

"ம்.. அப்போ நடந்த கதைதான் இது"

எங்கும் புகை மண்டலம் நாலா புறமும் மரண ஓலங்கள்…

அன்று – 1945 ஒகஸ்ட் 06.

"ஐயோ! எனது குழந்தை எங்கே?" பதட்டத்தில் கத்திக்கொண்டு வீட்டுக்கு வெளியே ஓடுகிறாள் ப்யூஜிகோ. சற்றுத் தூரத்தில் வெளியே வீசப்பட்டுக்க் கிடக்கிறது அவளுடைய இரண்டு வயதுக் குழந்தை!

"கடவுளே! என் குழந்தை என்னை விட்டுப் போய்விட்டதே!" கதறியபடி குழந்தையை வாரி எடுக்கிறாள்.

சாதாரணமாய்த் தூங்குவது போல அமைதியாய்க் கிடக்கிறாள் குழந்தை சடாகோ. அம்மாவின் அரவணைப்பில் மெது மெதுவாய்க் கண்களைத் திறந்து பார்த்த குழந்தையைக் கடவுள் தந்த வரமாய் நினைக்கிறாள் ப்யூஜிகோ.

"கடவுளே! உனக்கு நன்றி. என் குழந்தைக்கு எதுவுமே நடக்கவில்லை"

ஆனந்தக் கூச்சலிட்டபடி குழந்தையுடன் உள்ளே ஓடுகிறாள்.

அவளுடைய தாயாரைக் காணவில்லை.

யோசிக்க நேரமில்லை.. பயத்தில் உறைந்து போய் நின்ற மகனையும் கூட்டிக்கொண்டு வெளியே ஓடுகிறாள் ப்யூஜிகோ.

எங்கும் புகை மழை!

ஓடிக்களைத்து, ஆற்றங்கரையை அடைந்தபின், சற்று ஓய்வாக நிற்க முடிந்தது.

‘என் குழந்தைக்கு ஒன்றும் ஆகவில்லை’

மறுபடியும் மறுபடியும் மனசுக்குள் சொல்லிச் சொல்லி ஆறுதல்படுகிறாள்.

உண்மையில் அந்தக் குழந்தைக்கு எதுவுமே ஆகவில்லையா?

சடாகோ வளர்கிறாள். படிப்பிலும் கெட்டிக்காரி. விளையாட்டிலும் வீராங்கனை.

தொடர்ந்து வந்த ஆண்டுகளில் அணுகுண்டின் கதிர்வீச்சுக்கு ஆளாகிய சிறுவர்களும் பெரியவர்களும் பல்லாயிரக்கணக்கில் நோய்வாய்ப்படுவதும் இறந்து போவதும் நிகழ்ந்து கொண்டிருந்த போதெல்லாம் சடாகோ உடல் நலத்துடன் இருப்பதை எண்ணி ப்யூஜிகோவின் மனம் அவ்வப்போது நிம்மதியடையும்.

அப்போதுதான் அது நடந்தது."

------------------------------------------------

"என்னப்பா நடந்தது?" ரேகாவின் குரலில் பதட்டம்.

"சொல்லுறன்.."

"ஒரு நாள் மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்தபோது சடாகோ மயக்கமடைந்து கீழே விழுந்துவிடுகிறாள். மருத்துவமனையில் அவளைப் பரிசோதித்த டாக்டர்கள் அவளுக்குப் புற்றுநோய் என்பதையும், அது உடலில் வேகமாகப் பரவிக்கொண்டிருப்பதையும் உறுதிப்படுத்தினார்கள்."

பத்து வருடங்கள் தாண்டியும் அணுகுண்டின் கதிர்வீச்சு தன் வேலையைக் காட்டத்தவறவில்லை!

'ம்.. ம்..' அப்பா கவலையுடன் பெருமூச்சு விடுகிறார்.

"இப்படி எத்தனை ஆயிரம் பேர் யப்பானிலை பாதிக்கப்பட்டிருக்கினம்"

அப்பா இப்படிச் சொன்னதைக் கேட்டு ரேகாவின் முகத்திலும் கவலையின் ரேகைகள்.

"ஒருநாள் சடாகோவின் பள்ளிக்கூட நண்பன் சிசுகோ (Chizuko) அவளைப் பார்க்க மருத்துவ மனைக்கு வருகிறான்.

சடாகோ உயிர் பிழைக்க முடியாது என்று அவனுக்குத் தெரியும். அவளுக்கும் அது தெரியும்.

உயிராய்ப் பழகிய நண்பியை நிரந்தரமாகப் பிரியப்போகிறோமே என்ற கவலை அவன் கண்களில் தெரிந்தது.

"என்ன சிசுகோ என்னை அப்படிப் பார்க்கிறாய்?"

"ஒன்றுமில்லை.. நீண்ட நாளாக உன்னைக் காணவில்லை.. அதுதான்"

சடாகோ எதுவும் பேசவில்லை. கவலையுடன் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

"வகுப்பறையிலும் விளையாட்டு மைதானத்திலும் நீயில்லாமல் உனக்காக என் மனம் ஏங்குகிறது சடாகோ"

இப்படிச் சொன்னவன், தன் பையினுள் கைவிட்டு ஒரு காகிதக் கொக்கை வெளியே எடுக்கிறான்.

"இந்தா..இதை வைத்திரு"

"என்ன இது? கொக்கு?" சடாகோவின் குரலில் ஆச்சரியம்.

"இது உனக்காக எனது பரிசு. நோயுற்றிருப்பவர்கள் இது போல ஆயிரம் கொக்குகளைச் செய்து கடவுளிடம் சமர்ப்பித்து வேண்டுதல் செய்தால் நோய் குணமாகும் என்று அறிந்தேன்"

சடாகோவின் கண்கள் மகிழ்ச்சியில் விரிந்து நண்பனுக்கு நன்றி சொன்னபோது ஓரங்களில் திரண்ட இரண்டு நீர்த்துளிகள் கீழே விழுந்து தெறித்தன.

அவளுடைய வேண்டுதல் பயணம் அடுத்த நிமிடமே ஆரம்பமாயிற்று. வீசப்படுகின்ற மருந்துச் சிட்டைகள், அன்பளிப்புகளைச் சுற்றி வரும் கடதாசிகள், முடிந்துபோன மருந்துப் போத்தல்களின் லேபல்கள்… எல்லாமே சடாகோவின் கை வண்ணத்தில் கொக்குகளாய்ப் பிறப்பெடுத்தன.

பல சமயங்களில் நோயின் தாக்கம், எதையும் செய்ய விடாமல் களைப்புக்குள் தள்ளும். களைப்பைத் தூக்கி வீசி, கைகள் கொக்குகளைச் செய்தபடியே இருக்கும்.

'கடவுளே! நான் வாழும் இந்த உலகத்தை மக்கள் வாழக்கூடிய ஒரு இடமாக நான் வாழும்போதே மாற்றவேண்டும்'

தனக்காக மட்டுமல்ல.. கதிர்வீச்சின் பாதிப்புக்கு உள்ளாகிய ஆயிரக்கணக்கான தன்போன்றவர்களுக்காகவும் இந்த வேண்டுதலை அந்தச் சிறுமி இறைவனிடம் சமர்ப்பித்தாள்.

"ஆயிரம் கொக்குகளைச் சடாகோ செய்து முடிச்சாளா?

வருத்தம் சுகமாயிட்டுதா அப்பா?"

"இல்லை ராசா..." அப்பாவின் குரலில் தெரிந்த சோகம் ரேகாவை என்னமோ செய்தது.

தொடர்ந்து என்ன சொல்லப் போகிறார் என்று அப்பாவையே பார்த்தபடி எதுவும் பேசாமல் இருந்தாள்.

" 'சமாதானம்' என்ற பிஞ்சு இதயமொன்றின் வேண்டுதலைச் சுமந்தபடி, 647 கடதாசிக் கொக்குகள் அருகில் காத்து நிற்க.

சடாகோ நிரந்தரமாய் உறங்கிப் போனாள்!"

விம்மியழுத்துவங்கிய ரேகாவை அணைத்துக் கொண்ட அப்பாவின் கண்களிலும் நீர்.

ஹிரோஷிமா ஞாபகார்த்தப் பூங்காவில், கைகளில் ஒரு கொக்கை ஏந்தியபடி, சிலை வடிவில் நிற்கிறாள்

சடோகா சசாகி.

“இதுவே எங்கள் அழுகை”

“இதுவே எங்கள் பிரார்த்தனை"

"உலகில் சமாதானம் நிலவ வேண்டும்"

சிலையின் கீழ் மேற்படி வாசகங்கள் பொறிக்கப்பட்டிருக்கின்றன.

பின் குறிப்பு:- ஆகஸ்ட் 6 ஜப்பானின் வருடாந்த சமாதான நாள் சடாகோ சசாகிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

‘உலக சமாதான கொக்குத்திட்டம்’ (peace crane project). உலகச் சிறுவர்களை ஒன்றிணைத்து ஒரிகாமி மூலம் செயல்படுத்துவது 2013 இலிருந்து சித்திரக் கலைஞர் சூடிருசிகோவினால் மேற்கொள்ளப்படுகிறது.

சடாகோ கண்மூடிய ஒக்டோபர் 25 ஜப்பானின் பாடசாலைகள் ஒவ்வொன்றிலும் 1000 ஒரிகாமி கொக்குகள் சிறுவர்களால் செய்யப்பட்டு, பார்வைக்கு வைக்கப்படுகிறன. சமாதானத்துக்கான வேண்டுதல்களைக் குழந்தைகள் இறைவனிடம் சமர்ப்பித்த வண்ணமே இருக்கிறார்கள்.]

(எழுநிலம் மின் இதழில் வெளிவந்தது. )