இயற்கையே! நீயுமா?
மனித குலத்தின் பெரு வலி சுமந்து நான்கு மாதங்களைத் தாண்டிவிட்ட 2020 ஆம் ஆண்டு. லட்சம் லட்சமாய் உலகம் முழுவதும் உயிர்களைப் பலி எடுத்துக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் என்ற நச்சுயிர்த்தாக்கம்,
‘ஊழிக்கால அடையாளமா?’
‘மனிதனை வேரோடு பிடுங்கி எறியும் உயிரியல் போரா? (Bio-war)’
கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டவர் 'தீண்டத்தகாதவராய்' ஆகி விடுகின்ற அவலம், தீண்டினால், தீண்டியவருக்கும் தொற்று ஏற்பட்டு மாண்டு விட நேருகின்ற அபாயம்!
தனிமையில் இருத்தல் (Self Isolation)என்பதே 2020 இன் தாரக மந்திரம் ஆகிவிட்டது.
அம்மாவுக்குத் தொற்று — அப்பாவோ பிள்ளைகளோ அருகில் செல்ல முடியாது. அப்பாவுக்குத் தொற்று. அம்மாவோ பிள்ளைகளோ அருகில் வரார். அருகில் வருபவர்களையும் இரக்கமின்றி அமுக்கிப் பிடிக்கும் கொடிய கொரோனாவே! நீ யார்? எங்கிருந்து வந்தாய்? எப்படி வந்தாய்? விடை தெரியாமல் விழிபிதுங்கிக் கிடக்கிறோம்.
‘என்ன கொடுமையடா இது?’
‘இதோ — பிழைப்புக்காகப் புலம்பெயர்ந்து பிரித்தானியாவுக்கு வந்த , வாடகை டாக்ஸி வண்டி ஓட்டுநர் ஒருவரின் விதி வழி நேர்ந்த வலி சொல்லும் கதை.
இந்தியாவின் ஏதோ ஒரு கிராமம் தான் ராஜேஷ் ஜெயசீலனுடைய பிறந்த மண். உழைப்புத் தேடி பத்து ஆண்டுகளுக்கு முன் பிரித்தானியாவுக்கு வந்தவர். டாக்ஸி ஓட்டுநர். வாடகை அறையில் வாசம். மனைவி, குடும்பம், பெங்களூரில்.
நம்மிடையே நடமாடிக்கொண்டிருக்கும் மனிதர்களில் யார் யாருக்கு இந்தக் கொரோனாத் தொற்று இருக்கிறதென்பதை உடனடியாக இனம் காண முடிவதில்லை என்பது தான் இந்த நோய்த்தொற்றின் ஆபத்து மிக்க அம்சம். டாக்ஸி போன்ற வாடகை வண்டியில் பயணிக்கும் வாடிக்கையாளர்களில் யாருக்காவது ஒருவருக்கு அவருக்கே தெரியாமல் இந்தத் தொற்று இருந்தால் போதும்.. அது ஓட்டுநரையும் விட்டுவைக்காது.. இதர வாடிக்கையாளர்கள், அவருடன் பழக்கத்திலிருப்பவர்கள் எவரையும் விட்டுவைக்காமல் பலரிடம் போய் ஒட்டிக்கொள்ளும். மரணம் வரைக்கும் கொண்டு போகும். தப்பிப் பிழைப்போர் ஒரு சிலரே. இதன் காரணமாக — ராஜேஷ் குடியிருந்த வீட்டுக்காரர் — அவருக்கு நோய்த் தொற்று எதுவும் ஏற்படாத நிலையிலும் தமக்கு ராஜேஷ் மூலமாக நோய்த் தொற்று ஏற்பட்டுவிடலாம் என்ற பயத்தினால் அவரை வீட்டை விட்டு வெளியேறும்படி சொல்லிவிட்டார்.
யாருமற்றுத் தனியாக வாழ்ந்துகொண்டிருந்த ராஜேஷ் என்ன செய்வார்? அடுத்து வந்த சில தினங்கள் அந்த வண்டிக்குள்ளேயே காலம் கழித்தார். எப்படி முடியும்? இயற்கைத்தேவைகள் உள்ளனவே… அவருக்கு ஒரு சில நண்பர்கள் இருந்தார்கள். அவர்கள் மூலமாகவோ அன்றி வேறேதும் வகையாகவோ வேறொரு அறையில் மீண்டும் வசிக்கத் தொடங்கினார்.
கொரோனா ரூபத்தில் விதி அவருடைய வாழ்க்கையில் விளையாடியது. தொற்றுக்கான அறிகுறிகள் தனக்கிருப்பதை உணர்ந்து கொண்டார். அறையின் சொந்தக்காரர் அல்லது அயலில் வசிப்பவர்களில் யாருக்கேனும் இது தெரியவந்தால் அந்த இடத்தைவிட்டுத் தான் வெளியேற்றப்படுவது நிச்சயம் என்பது தெரிந்தது. அறையைப் பூட்டிக்கொண்டு சில தினங்கள் வெளியே வராமல் அறைக்குள்ளேயே இருந்தார். நோய் தந்த உபாதை ஒரு பக்கம்.. பசிக்கொடுமையினால் பலமிழந்து கொண்டிருந்த உடல் நிலை மறுபக்கம்..
பெங்களூரில் உள்ள தன் மனைவிக்குத் தொலைபேசி மூலம் தன்னுடைய இந்த அவல நிலையை விளக்கி , வெளியே போனால் வீட்டை விட்டுத் துரத்தப் படுவேன். அதனால் உள்ளேயே இருக்கிறேன் என்று சொல்லி வேதனைப்பட்டிருக்கிறார்.
மூச்சுத்திணறல் ஏற்பட்டு நோய் உச்சம் சென்றபோது வேறு வழியின்றி மருத்துவ மனையில் சேர்ந்திருக்கிறார்.
2020 ஏப்ரல் 11ம் நாள் மருத்துவ மனையில் ராஜேஷ் ஜெயசீலனுடைய உயிர் பிரிந்தது.
அவருடைய நண்பர் சுனில் குமார் என்பவர், ராஜேஷ் இறந்தபின் மேற்படி தகவல்களை இணையத் தளத்தில் பதிவு செய்திருந்தார்.
பாசத்துக்கும் நேசிப்புக்கும் உரிய ஒருவர் இறந்துவிட்டார், அவருடைய உறவுகள் அருகிலிருந்து செய்யக்கூடிய உள்ளக்கனிவு (sentiment) நிறைந்த பாரம்பரிய இறுதிக்கடமைகள் பற்றி எண்ணிப் பார்ப்பதைத் தவிர்க்கமுடியவில்லை.
உறவுகளைப் பிரிந்து, புலம்பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருந்த ராஜேஷ் என்ற இந்த மனிதர், தன் மரணப் படுக்கையில், வாழ்வின் கடைசித் தருணங்களில் எதை எதையெல்லாம் எண்ணிக் கலங்கித் துடித்திருப்பாரா?
பிறந்த மண்ணை, மனைவியை, குடும்பத்தை எல்லாம் பிரிந்து பணம் தேடுவதற்காகப் பல்லாயிரம் மைல்கள் தாண்டி வந்து, யாருமற்ற அநாதையாய்க் கண்மூடப்போகும் தன் பரிதாப நிலைக்காக மனம் நொந்திருப்பாரா?
பசித்திருந்த இறுதி நாட்களில், மனைவி கையால் பரிமாறப்படும் ஒரு கவளச் சோற்றுக்காகத் தன் வயிறு 'ஐயோ!' என்று ஏக்கத்தோடு அழுது புலம்பிய வேதனையின் தருணங்களை நினைத்திருப்பாரா?
உயிர் பிரியும் தறுவாயில் ஒரேயொரு தரம் அன்பு மனைவியின் முகம் காணத் தன் இதயம் தவித்துத் துடித்ததை அதன் அதிகரித்த துடிப்பின் மூலம் உணர்ந்து உருகியிருப்பாரா?
என்னவெல்லாம் நினைத்திருப்பார்.. எப்படியெல்லாம் துடித்திருப்பார்.. ஐயோ! கொரோனாவே! ஏனிந்தக் கொடுமை? இன்னும் என்னவெல்லாம் செய்யப் போகிறாய்?
இயற்கையே! நீயுமா?

கருத்துகள்
இன்னும் கருத்து இல்லை.