திண்டுக்கல்.
18ம் நூற்றாண்டு.
ஹைதர் அலியின் அரண்மனை வாயிலில் மூன்று குதிரை வீரர்கள், வேலு நாச்சியாரிடமிருந்து வந்ததாகச் சொல்லி, உள்ளே செல்ல அனுமதி கேட்கிறார்கள். மூவரும் உள்ளே அழைக்கப்பட – அந்தக் குதிரை வீரர்களில் ஒருவராய் –
வேலு நாச்சியார்!
கொடுமைகள் புரிந்துகொண்டிருக்கும் பிரித்தானியக் கிழக்கிந்தியப் படையை அழிப்பதும், அவர்களுக்குத் துணை போகும் நவாபை வீழ்த்துவதுமே லட்சியம் என்று உருது மொழியில் தன்னிடம் பேசிய வேலு நாச்சியார் ஹைதர் அலிக்கான அப்போதைய ஆச்சரியம்.
"இவர்கள் இருவரும் எனக்குத் துணையாக வந்தவர்கள்"
அருகில் நின்றவர்களைக் காட்டிச் சொல்கிறார் வேலு நாச்சியார்.
"ஓ"
இருவரும் கைகூப்பி வணக்கம் தெரிவித்தார்கள்.
"இவள் எனது மெய்க்காப்பாளினி" வலது புறம் சுட்டிக்காட்டி வேலு நாச்சியார் சொல்ல,
"மெய்க்காப்பாளினி?" – ஆச்சரியம் மேலிட ஹைதர் அலி அந்தப் பக்கம் திரும்பியபோது, தலைப்பாகையைக் கழற்றிக் கையில் வைத்திருந்த இளம் பெண்ணின் கண்களில் பளிச்சிட்ட தீவிரத்தைக் கூர்மையாக அவதானித்தான்.
"பெயர் குயிலி, எனக்கு இவளை முன் பின் தெரியாது... எனது கணவர் முத்துவடுகநாதர் கொல்லப்பட்ட பின், காடுகளில் மறைந்து வாழ்ந்த என்னைத் தேடித்திரிந்த ஆங்கிலேயப் படைகளின் முயற்சி கைகூடவில்லை. இதனால், வெற்றிவேல் என்பவனை உளவு பார்க்க நியமித்திருந்தார்கள்.
வெற்றி வேலுவுடைய சில நடவடிக்கைகளால் சந்தேகம் ஏற்பட, அவனைத் தீவிரமாகக் கண்காணித்த குயிலி, அவன் ஒரு இனத்துரோகிதான் என்பதைக் கண்டு அவனைக் குத்திக் கொன்றுவிட்டாள் என்பதை நான் அறிந்தேன். அதன் பிறகு இவளை எனது மெயப்பாதுகாவலுக்காக அமர்த்திக் கொண்டேன்"
ஆற்காடு நவாபின் பெரும்படை இராமநாதபுரத்தைக் கைப்பற்றிய பின், சிவகங்கைச் சீமையைத் தாக்குவதற்கு ஆங்கிலேயப்படை அவனுக்கு உதவ முன்வந்தது. நவீன ரக ஆயுதங்களை அவனுக்கு வழங்கியது. காளையர் கோவிலை வழிபட வந்த தன் கணவனையும் வீரர்களையும் சுற்றி வளைத்து நவாபின் படை கடும் எதிர்ப்பையும் முறியடித்து அவர்களை வீழ்த்தியது. கணவரின் உடலைப் பார்க்கப் போன தன்னையும் வழிமறித்துத் தாக்கியது, அந்த இடைவெளியைப் பயன்படுத்தி ஆங்கிலேயப் படைகளும் நவாபின் படைகளும் சிவகங்கைச் சீமையைக் கைப்பற்றியது, அதன் பிறகு தலைமறைவாகி தான் வனவாசம் மேற்கொண்டது,
என – எட்டு ஆண்டுக்கால சம்பவங்களை ஹைதர் அலியிடம் உருது மொழியில் சரளமாகப் பேசிப் புரியவைத்த வேலு நாச்சியார், தான் அங்கு வந்த காரணத்தைச் சொன்னார்.
"நவாபையும் அவனது படைகளையும் அழிக்க வேண்டும். ஆங்கிலேயப் படையை வீழ்த்த வேண்டும்.. எமது தாய் நிலம் சிவகங்கை மீண்டும் எங்கள் வசம் ஆதல் வேண்டும்...இவற்றை நான் நிறைவேற்றுவதற்குத் தங்களுடைய உதவியை நாடி வந்திருக்கிறேன்."
"உங்களுடைய குறிக்கோளை அடைய நிச்சயமாய் இந்த ஹைதர் அலி என்றும் உறுதுணையாய் இருப்பான்"
திண்டுக்கல்லிலும் விருப்பாட்சிக் கோட்டையிலுமாய் வேலு நாச்சியாரும் அவரது வீரர்களும் தங்கவைக்கப்பட்டார்கள்.
சின்ன மருது தலைமையில் ஒரு படைப்பிரிவும், வேலு நாச்சியார் தளபதியாகச் செயல்பட்ட மற்றொரு படைப் பிரிவு பெரிய மருது தலைமையிலும் ஏற்படுத்தப்பட்டன.
ஹைதர் அலி கொடுத்த நவீன ரக ஆயுதங்களையும் சேர்த்து மண் மீட்புப் போர் ஆரம்பமாகியது. "சக்கந்தி" வீராங்கனையின் படைகள் (சக்கந்தி – வேலு நாச்சியார் பிறந்த ஊர்) திருப்பத்தூரில் வெள்ளையர் படையை வீழ்த்தின. முத்துவடுக நாதரைச் சுற்றிவளைத்து எங்கே படுகொலை செய்தார்களோ, அதே காளையர் கோயிலும் மீட்கப்பட்டது.
அடுத்த இலக்கு சிவகங்கை. சவால் நிறைந்தது. சிவகங்கை அரண்மனை வளாகத்தினுள்ளே ஆங்கிலேயப் படைகளின் அதி நவீன ஆயுதங்கள் அடங்கிய பெரியதொரு ஆயுதக்கிடங்கு. உள்ளேயும் வெளியேயும் படை வீரர்களின் பலத்த காவல்.
அன்று விஜய தசமி.
அரண்மனைக்குள் இருந்த ராஜ ராஜேஸ்வரி அம்மன் கோவிலின் அம்பாள் விக்கிரகம், பட்டுச் சேலை பொன்னாபரணங்களில் ஒளி வீசிக்கொண்டிருந்தது. பூக்களாலும் பூமாலைகளாலும் செய்யப்பட்டிருந்த வண்ண அலங்காரம் – கண் கொள்ளாக் காட்சி.
ஆங்கிலேயரின் ஆட்சியில் சிவகங்கை அரண்மனைக்குள் நுழைய எவரும் அனுமதிக்கப்பட்டதில்லை. விஜயதசமிப் பண்டிகை நாளில் மட்டும் விதிமுறை சற்றே தளர்த்தப்பட்டு, பெண்கள் மட்டும் உள்ளே வந்து அம்பாளை வணங்கவும், கொலுதரிசனம் செய்து திரும்பவும் அனுமதிக்கப்படுவார்கள்.
அன்றும் பெண்களின் கூட்டம் அம்பாளைத் தரிசிக்கும் ஆவலுடன் பூக்கள், அர்ச்சனைத் திரவியங்கள் போன்றவற்றைக் கைகளில் ஏந்தியபடி முண்டியடித்துக் கொண்டு அரண்மனைக்குள் நுழைந்தது. மாறு வேடத்தில் வேலு நாச்சியார். அவர் தலைமையிலான பெண்கள் அணி எல்லோரும் ஆடைகளுக்குள் மறைத்துவைக்கப்பட்ட ஆயுதங்களுடன், தரிசனத்துக்காக நின்ற பெண்கள் கூட்டத்துடன் கூட்டமாய் அணி வகுத்து நின்றார்கள். அவர்களில் குயிலியும் ஒருத்தியாய்.
கூட்டம் நத்தை வேகத்தில் முன்னே நகர்ந்துகொண்டிருக்க, வெளி வாசலில் காவலுக்கு நின்றவன் கையை நீட்டிக் குயிலியைத் தடுக்கிறான்
"நில்"
நின்றாள்.
"கையில் என்ன வைத்திருக்கிறாய்?" ஆங்கிலத்தில் கேட்டான்
"நெய்"
"நெய் எதற்கு?"
"அம்பாளுக்கு தீபம் ஏற்ற"
"தீபம்?" புரியாதவனாய் அவன் கேட்டான்.
"ம்..தீபம்.." சைகையால் விளக்குப் போலக்காட்டிப் புரியவைத்தாள்.
"அவ்வளவு நெய் ஏன்?"
குயிலி வைத்திருந்தது ஏறத்தாழ 5 லீற்றர் கொள்ளக்கூடிய கலன்.
"விஜயதசமிக்கு நூற்றெட்டு தீபம் ஏற்றவேண்டும். இது எங்களுடைய குல வழக்கம்..ம்...உனக்கு இது எங்கே தெரியப்போகிறது?" – அவளுடைய குரலில் ஏளனமும் சற்றே கோபமும் கலந்திருந்தது.
"சரி..சரி..போ.."
அம்பாளுடைய வாசலில் போய் நின்றாள்.
"சிவகங்கையின் தாயே! எல்லாம் நல்லபடி நிறைவேற வேண்டும்.. எங்களோடு கூட நில் அம்மா.."
சிறிது நேரம் அப்படியே நின்றவள், மூடியிருந்த விழிகள் திறந்து அன்னையைப் பார்த்தாள்.
உதடுகளின் மென் சிரிப்பு.. முகத்தில் வியாபித்துக்கிடந்த கருணை..
‘என்றும் உங்களுடன் கூட நிற்பேன்’என்று இவளிடம் சொல்லாமல் சொல்லிற்றா?
நம்பிக்கையோடு பிரகாரத்தை வலம் வந்த குயிலியின் கண்கள் நாலாபுறமும் நோட்டம் விட்டபடியே இருந்தன.
கோவிலைச் சுற்றி வண்ண விளக்குகள்.
அதைத் தாண்டிய இடங்களில் சற்றே மங்கலான வெளிச்சம் மட்டும்.
அதற்குமப்பால் இருள் ஆட்சி செய்து கொண்டிருந்தது.
இருளை ஊடுருத்துக்கொண்டு அவள் நடந்தாள். ‘எங்கள் மண் விடுதலை பெற வேண்டும்’ என்ற மந்திரத்தை ஒவ்வொரு மூச்சிலும் உச்சரித்தபடி, யாரும் தன்னைக் கவனிக்கவில்லை என்பதை அடிக்கடி உறுதி செய்தபடி நடக்க –
ஒரு அரை மணி நேரம்தான்.
அதோ.. வெளிச்சம் பரப்பிக்கொண்டு அந்த இடம். அவள் தேடி வந்த இடம். அவளுக்கு மிக அருகில்.
ஆங்கிலேயப் படைகளின் அதி நவீன ஆயுதக் கிடங்கு!
ஊர்ந்தும் தவழ்ந்தும் இலக்கை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தவள், கட்டடத்தின் ஒரு பக்கத்தில் சிறிய வாசலொன்று இருந்ததை அவதானித்தாள். நகர்வை நிறுத்திக் கூர்ந்து கவனித்தபோது ஆளரவம் எதுவும் தென்படவில்லை.
ஆங்கிலேயப் படைகளின் கவனம் முழுவதும் அன்று – பெண்கள் கூட்டத்திலும் விஜயதசமிக் கோலாகலங்களிலுமே செலுத்தப்பட்டுக்கொண்டிருந்த ஒரு சூழ்நிலை அது.
சில சமயம், அந்தக் கட்டடத்தின் பிரதான வாசல் காவலர்கள் அங்கேயே நின்றிருப்பார்களோ என்னவோ, இந்த வாசலில் எந்தப் படைவீரருடைய நடமாட்டமும் இல்லை.
அவளுக்கு அது ஒரு சாதகமான சூழ்நிலை..
இதோ..... இன்னும் சில நிமிடங்களில் தேச விடுதலைக்காகத் தனது இன்னுயிரை ஆகுதியாகத் தயாராகிறாள்.
நூற்றெட்டு தீபங்கள் ஏற்றுவதற்கல்ல.. உன்னதமிக்க விடுதலை தீபத்தை ஏற்றுவதற்காக அவள் எடுத்து வந்த எரி நெய், குயிலியின் உடல் முழுவதையும் குளிப்பாட்டுகிறது.
"எங்கள் மண் விடுதலை பெற வேண்டும்" என்று மெதுவாக உச்சரித்துக்கொண்டே தனக்குத் தானே தீ மூட்டிக்கொண்ட அந்தத் தமிழச்சி, ஆயுத வரிசைகளுக்குள் பாய்கிறாள்!
ஆங்கிலப் படைகள் அணுத்துளியும் எதிர்பார்த்திராத கணப்பொழுதொன்றில், பிரபஞ்சமே அதிர்ந்து குலுங்கும்படி அந்தப் பேரோசை எழுந்து வானலைகளை நிறைக்கிறது!
சிவகங்கை முழுவதிலும் எதிரொலி செய்த அந்த ஓசை பேரிடியின் பெருமுழக்கமா? பிளவுண்ட பூமியின் பெரு நடுக்கமா?
ஊழிக்காலத்துப் பெருங்காற்றா?
அழிக்க வந்த ஆயுதங்கள் அனைத்தும் மாறி மாறி வெடித்துச் சிதறியதில் ஏற்பட்ட பெருந்தீ (விடுதலை யாகம் ஒன்றின் வரலாற்றுக் குறியீடாய்) ஓங்கி வளர – அனைத்தும் அழிந்து பஸ்மமாகின.
ஆங்கிலேயன் நிலை குலைந்தான்.
அடுத்து நிகழ்ந்த –
வேலு நாச்சியார் தலைமையிலான எதிர்த்தாக்குதல் எதிரியானவன் எதிர்பார்த்திராத ஒன்று!
மடிந்து வீழ்ந்தவர்கள் போக, மீதிப் படைகள் சிவகங்கையை விட்டுப் புறங்காட்டி ஓடின.
மண் விடுதலைக்காக உயிராயுதமாய் எழுந்த குயிலி என்ற வீரத்தமிழ் மங்கை, வானோங்கி வளர்ந்த பெருந்தீச்சுவாலைகளின் நடுவில் விஸ்வரூபமெடுத்து நின்றாள்.

கருத்துகள்
இன்னும் கருத்து இல்லை.