இன்று அவள் தண்ணீர் எடுக்க வரவில்லை. அம்மாக்கள் சிலர் மட்டும் குடங்களுடன் நின்றார்கள். தண்ணீர் அள்ளி, எல்லாக்குடங்களும் நிரப்பி அவர்கள் போன பிறகு கடைசியாக ஒரு அம்மா குடத்தை வைக்கிறா. அப்படி வைக்கும் போது அந்த முகத்தில் தெரிந்த வேண்டா வெறுப்பு நிறைந்த ஒரு பாவனையைக் கவனித்தபடி, தண்ணீரை அள்ளி வார்க்கிறேன். குடம் நிரம்பி நீர் வழிந்தோடியதைக் கூடக் கவனிக்காமல் ஏதோ யோசித்தபடி நிற்கிறா. அப்போது தான் கவனித்தேன். அது, அவள் தினமும் கொண்டு வருகிற அதே பச்சை நிற பிளாஸ்டிக் குடம்.
'இப்படி வழிஞ்சோடுற தண்ணீலைதான் ஒவ்வொரு நாளும் அவள் கால் நனைப்பாள்..... வாழைக் குருத்தை ஞாபகப் படுத்துற அந்தக் கால்களும்..... கிளிங்..... கிளிங்..... எண்டு சின்னச் சத்தம் போடுற வடிவான வெள்ளிக் கொலுசுகளும்.....'
"தம்பீ..... நீர் கதிரவேலுவின்ரை பேரன் தானே?"
அம்மாவின் குரல் என்னை சுயநினைவுக்குக் கொண்டுவந்தது.
"ஓமம்மா..... உங்களுக்கு எப்படித் தெரியும்?"
"அட..... உங்கடை குடும்பத்தை ஊரிலை எல்லாருக்கும் தெரியுந்தானே....." ஒரு வகை அழுத்தம் கொடுத்து இதைச் சொன்னா.
"ஓ..... அப்ப நீங்க தின்னவேலியா?"
"ம்..... என்ரை ரெண்டு பெடியளுக்கும் சின்ன வயசிலை உங்கடை சலூனிலை தான் முடிவெட்டிறனாங்கள்..... இப்ப அவங்களும் உம்மைப் போல தான் வளர்ந்து பெரிய ஆக்களாகீட்டாங்கள்."
"ஓ....."
"நீர் இப்ப என்ன செய்யிறீர்?"
"படிச்சு முடிச்சு பல்கலைக்கழகத்திலை லெக்சரர் ஆக வேலை பார்க்கிறேன்..... இடப் பெயர்வாலை இப்ப பல்கலைக்கழகம் மூடிக் கிடக்கு"
"பரவாயில்லை..... உம்மைடை அப்பா உம்மைப் படிக்க வச்சிட்டார்..... பெரிய காரியம்....."
குடத்தைத் தூக்கிக் கொண்டு திரும்பி விட்டா.
அடுத்து வந்த நாட்களிலும் அவள் வரவில்லை.
அவள் வராதது..... அந்தப் பச்சை நிறக்குடம்..... எனது சாதியை மறைமுகமாகச் சுட்டிக்காட்டிய அம்மாவின் வார்த்தைகள்.....
கூட்டிக் கழித்துப் பார்க்க எல்லாம் புரிகிறது. இனிமேல் அவள் கிணற்றடிக்கு வரமாட்டாள்.
யாழ்ப்பாண இடப்பெயர்வு.
துயர் படிந்த அந்த வரலாற்று சம்பவத்தை 95 ம் ஆண்டு தன்னில் பதிவு செய்து கொண்டது.
நடை பயணமாய் எங்கள் குடும்பம் சாவகச்சேரியை அடைந்து வெளி ஒன்றில் தற்காலிக கூடாரம் அமைத்தது போல இன்னும் பல குடும்பங்களும் அங்கே.....
நல்ல நீர் கிடைப்பது அரிதான ஒரு இடம் அது. குடிப்பதற்கும் சமையலுக்குமானீரை எடுப்பதற்கு ஒரு நன்னீர் ஊற்றுக் கிணறு சற்றுத் தூரத்தில் இருந்தது, துலாக் கிணறு. தண்ணீர் எடுக்க ஒரு நாள் நான் அங்கே போயிருந்தபோது, வேறும் சிலர் பெண்கள் - தண்ணீர் அள்ள சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்காக அன்று நான் உதவ முன்வந்தது - அதுவே எனது தினசரி சேவையாக மாறியது. கூடாரத்தினுள் முடங்கிக்கிடப்பதை விட இது எனக்குப் பிடித்திருந்தது.
அப்படி ஒரு நாளில் தான் கையில் குடத்துடன் அவள் வந்தாள். 'வயசு பதினாறிருக்கும் இளவயசு மங்கை' என்பதில் சின்ன மாற்றம் செய்து, 'வயசு இருபதிருக்கும் இளவயசு மங்கை' என்று பாடலாம் போன்றதொரு கொள்ளை அழகு! ஏதோ கனவில் மிதப்பது போல அசைந்து அசைந்து வந்த நடையிலும் ஒரு நளினம். கொலுசுகளின் செல்லச் சிணுங்கல்.
தண்ணீருக்காகக் குடத்தை வைத்தாள்.
நான் வசமிழந்தேன். துலாக் கயிற்றைப் பிடித்திருந்த கைகளில் திடீரென ஒரு தளர்வு. கடைக்கண்களால் அவளைப் பார்ப்பது, பிறகு தண்ணீர் அள்ளுவதில் கவனம் செலுத்துவதுமாக நானிருக்க -
அவளோ.....? கண்கள் தூரத்தில் எதையோ துளாவ இன்னும் அதே மோன நிலையில்.
குடத்தில் நீர் நிரம்பி வழிந்து கால்களை நனைத்தபோது சுய நினைவுக்கு வந்தாள். முகத்தில் மட்டற்ற மகிழ்ச்சி! சட் என்று பாவாடையைச் சிறிது மேலே தூக்கிப் பிடித்து மேலும் கால்களை நனைய விட்டாள். அழகான வெள்ளிக் கொலுசுகளும் நீராடின.
அட! ஒரு பெண்ணின் கால்கள் கூட மன்மத பாணம் தொடுக்குமா என்ன? ஆங்காங்கே பொத்தல் விழுந்த என் இதயம் வேக வேகமாய்த் துடிக்க -
குடத்தைத் தூக்கிக் கொண்டு அவள் போய் விட்டாள்
மறுநாள் வந்தாள். அடுத்த நாளும் வந்தாள்.
சேவையென்று நான் நினைத்தது 'வரம்' ஆயிற்று.
மூன்றாவது நாள். கால் நனைத்த பிறகு, போகப்போகிறாளே என்று என் உள்ளம் பரிதவிக்க - அவள் போகவில்லை.
நிமிர்ந்து என்னைப் பார்த்தாள். 'விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த' - அந்தப் பார்வை!
"இன்னும் கொஞ்சம் ஊத்துங்கோ" கிளி கொஞ்சியது
"குடம் நிரம்பீட்டுது தானே.....?"
"ம்.....ஹாம்..... கால் இன்னும் கொஞ்சம் நனைய வேணும்"
"ஓ" மீண்டும் வாலி நிரப்பிக் குடத்தில் வார்க்கிறேன். காலைச் சூரிய ஒளி பட்டு மின்னிக்கொண்டிருந்த நீர்த்துளிகள் அந்தப் பட்டுப் பாதங்களில் துள்ளி விளையாடிக் கொண்டிருந்தன. என் இதயத்தைச் சீண்டிப் பார்க்கும் முயற்சியில் கொலுசுகளின் ஒலியும் சேர்ந்து கொண்டது.
"தாங்க்ஸ்"
என்னைக் கனவுக்குள் தள்ளிவிட்டு அவள் போய்விட்டாள். அதன் பிறகு, காத்திருந்த குடங்களை எப்படி நிரப்பினேன் என்பது எனக்கே தெரியாது.
அடுத்து வந்த நாள்களில் அவளிடம் ஒரு மாற்றம். எல்லோருக்கும் நீர் நிரப்பும் வரை காத்திருந்து கடைசி ஆளாக அவள் வருவது வழக்கமாயிற்று. பார்வையில்,பாவனையில்,எல்லாம் ஒரு வித்தியாசம்.
'அப்படியெண்டா அவளும் என்னை.....?'
'உன் பேரும் என் பேரும் தெரியாமலே உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ?' என் மனம் அடிக்கடி இதை முணு முணுக்கத் தொடங்கியிருந்தது.
'நாளைக்கு எப்படியாவது அவளிடம் பேசி விடுவது என்று முடிவெடுத்தேன் வந்தாள். கடைசி ஆளாக.
கால்கள் நனைந்து கொண்டிருக்க - அவளது கண்கள் என்னையே பார்த்துக் கொண்டிருக்க - மௌனம் உடைத்தேன்.
"நல்ல வடிவான கொலுசு....."
மெதுவாய்த் தலை சாய்த்து என்னைப் பார்த்துப் புன்னகைக்கிறாள்.
"வேறை?"
"ம் வேறை ஒண்டுமில்லை"
"ஒண்டுமே இல்லையா?"
"இருக்கு இருக்கு அதைப் போட்டிருக்கிற காலும் வடிவுதான்" எனக்கு நா குழறியது.
வெள்ளி மணிக் குவியலை அள்ளிக் கொட்டியது போல வாய்விட்டுச் சிரித்து -
"நாளைக்கு வாறன்" சொல்லிப் போய்விட்டாள்.
'நாளைக்கு என்ன கதைக்கிறது? எப்படித் துவங்கிறது? பேர் கேட்கலாமா? அல்லது …நான் அவளை விரும்புறதை நேரடியாகவே சொல்லீடலாமா? சீச்சீ வேண்டாம் அது கொஞ்சம் ஓவர்'
தூக்கம் தொலைத்த இரவில் இப்படிப் பல எண்ணங்கள்.....
மறுநாள் கிணற்றடியில் கொஞ்சம் கூட்டம் அதிகம். பின்னால் அவள் நிற்பதைக் கொலுசொலி கட்டியம் கூறியது.
"இவ்வளவு நேரமா தண்ணி அள்ளிக் கொண்டிருக்கிறது உங்களுக்குக் கஷ்டமாயில்லையா?" - கடைசியாகக் குடத்தை வைத்தபோது கேட்டாள். குரலில்,பார்வையில்,ஒரு கனிவு தெரிந்தது.
"ம்… ஹாம்… கடைசி வாடிக்கையாளரை(!) பாக்கிற நினைப்பிலை எந்த கஷ்டமும் தெரியேல்லை"
பதிலுக்கு அழகாய்ச் சிரித்தாள்.
தொடர்ந்து வந்த நாட்களில் ஏதேதோ பேசிக் கொண்டோம். என்னவென்று விவரிக்க முடியாத ஏதோ ஒரு உணர்வு அல்லது ஈர்ப்பின் பாற்பட்டு எமக்கிடையில் வளர்ந்த ஈடுபாடு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போனது. அது சாதாரண அன்பா! அல்லது அதையும் தாண்டிய காதலா? என்னைப் பொறுத்தவரை அது காதல் என்றே தோன்றியது.
அவளுக்கு?
புரிந்து கொள்ளும் முன்னரே பிரிந்துவிட நேரும் என்று நினைத்தும் பார்க்கவில்லை.
கிணற்றடியில் சொர்க்கம் தந்த ஒரு உறவு கனவாகி…பழங்கதையாகி…
"எங்கடை சனம் திருந்தாது".
அப்பா அடிக்கடி இப்படிச் சொல்லுவார். அந்த வார்த்தைகள் அடிக்கடி எனக்குள் எதிரொலிக்கத் தொடங்கின.
"வகுப்பிலை எப்பவும் நானே முதலாவதாய் இருந்தும், சாதியை மனசிலை வச்சு என்னை கேவலமா நடத்தி ஒதுக்கி வச்ச வாத்திமாராலை தான் பள்ளிக்குப் போக மனமில்லாமை பன்னிரெண்டு வயசிலேயே வீட்டிலை நிண்டிட்டேன் தம்பி..... நீயும் என்னைப் போல இருந்திடக்கூடாது..... நல்லாப் படிச்சு பெரிய ஆளா வரவேணும்....."
அப்பாவின் நெஞ்சுக்குள் இருந்த அந்த மாறாத வலிதான் அவரை இரவு பகல் பாராமல் உழைக்கவும், என்னைப் படித்துப்பட்டம் பெறவும் வைத்தது. பள்ளிக் கூடம் போகவில்லை என்றாலும் தனது திறமையாலும் சுய முயற்சியாலும் பலர் போற்றும் புகழ் மிக்க ஒரு எழுத்தாளனாக, படைப்பாற்றல் மிக்கவராக – அவர் தன்னை நிலை நிறுத்திக் கொண்டார்.
"ரமணன்! அப்பான்ரை புத்தகங்களை ஒருக்கா பார்த்து வடிவா அடுக்கிவைக்கச் சொல்லி எத்தினை நாளாய் சொல்லுறன்..... வெளிக்கிடேக்கை அவசரத்திலை அள்ளி உர பாக்கிலை கட்டிக் கொண்டு வந்தது..... வரேக்கை மழைத்துமியும் பட்டிருக்கும்..... ஒருக்காப் பார் ஐயா....."
"செய்கிறனம்மா"
எனக்கும் இது ஒரு மாறுதலாய் இருக்கும் என்று தோன்றியது. தரையில் புத்தகங்களைப் பரப்பி நடுவில் உட்கார்ந்தேன்.
"ஒண்டையும் எறிஞ்சு போடாதை தம்பி" தினசரிப் பத்திரிகை வாசித்துக்கொண்டிருந்த அப்பா சொன்னார்.
"ஓமப்பா....."
எல்லாமே அப்பாவின் படைப்புகளைச் சுமந்த புத்தகங்கள், பார்க்கப் பார்க்க பிரமிப்பாய் இருந்தது. மேல் அட்டை கொஞ்சம் இத்துப் போய், கையேடு (Notebook) போல ஒன்று புத்தகங்களுக்கு நடுவில் இருந்தது. 'என்னவாமிருக்கும்?' அது, வருடங்கள் பல கடந்த நாட்குறிப்பு, அப்பாவினுடையது. அதை மட்டும் பாதுகாத்து வைக்க ஏதோ ஒரு காரணம் இருந்திருக்க வேண்டும்.
'பிரிக்கலாமா?' 'படிக்கலாமா?' – மனம் குறுகுறுத்தது. திரும்பிப் பார்த்தேன். அப்பா வாசிப்பில் மூழ்கியிருந்தார்.
'படிக்கலாம்.....' 'என்னை மன்னித்துவிடுங்கோ அப்பா.....'
அடையாளம் வைத்திருந்த பக்கத்தை விரித்தேன்.
படிக்கப் படிக்க, ஒரு இளைஞனாய் அன்று அப்பா தன் நெஞ்சுக்குள் சுமந்த வலி இடம் மாறி இன்று என் நெஞ்சுக்குள் இறங்குவதாய் உணர்ந்தேன்.
'வழமை போல, யாரும் எங்களை அடையாளம் கண்டுவிட முடியாத இரவு எட்டு மணிப்பொழுதில் இன்றும் அவளைப் பார்க்கவும் பேசவும் ஆவலுடன் போனேன். அவளுடைய வீட்டின் பின்பக்க கேட் திறந்து, சத்தமின்றி நடந்து, கவசமாய்க் காத்து நிற்கும் அடர்த்தியான மல்லிகைப் பந்தலின் கீழே நின்று, என் காதலையெல்லாம் குழைத்து, "ராணி" என்றேன். பதிலில்லை. மறுபடியும் கூப்பிட, பதில் வந்தது!
"ராணி இனிமேல் வரமாட்டாள்."
எனது சர்வ நாடியும் ஒடுங்கியதாய் அந்தக் குரல்!
நின்றிருந்தது ராணியின் உருவமல்ல என்பது புரிய வெல வெலத்துப் போனேன். பயத்தில் உடல் நடுங்கியது.
"தம்பீ..... இண்டையோடடை இதை நிப்பாட்டும்..... உம்மை மட்டும் பிழை சொல்லேல்லை..... என்ரை மகளிலையும் பிழை இருக்கு. ஆனா..... இனி வேண்டாம்..... எங்களை குடும்பம் எப்படிப்பட்ட குடும்பமெண்டு உமக்குத் தெரியும்..... உங்கடை குடும்பத்தைப் பற்றியும் நீர் ஆரெண்டும் எனக்குத் தெரியும்..... இது ஒத்து வராது..... ஊரிலை நாங்கள் தலை நிமிர்ந்து நடக்க வேணும்..... தகப்பனுக்கு இது தெரிஞ்சா அவளைக் கொண்டு போட்டிடுவார்.....
.....தயவு செய்து என்ரை மகளை மறந்திடும்....."
நான் என்ன சொல்லுவேன்? உறைந்து போய் நின்றேன்.
"உம்மை மண்டாடிக் கேக்கிறன் தம்பீ..... இனிமேல் ராணியோடடை எந்தத் தொடர்பும் வைக்கமாட்டனெண்டு சத்தியம் பண்ணிக்குடும்....."
சாதியம் விஸ்வரூபமெடுத்து முன்னால் நின்று சத்தியம் கேட்டது! என் உள்ளம் மட்டுமல்ல..... உயிரும் சேர்ந்து சுக்குநூறாகிப் போனது.
"இனி மேல் உங்கடை மகளின்ரை பக்கம் திரும்பியும் பாக்க மாட்டன்..... அவளின்ரை வாழ்க்கையிலை குறுக்கிடவும் மாட்டன்..... என்னை நீங்கள் நம்பலாம்....."
உயிரைப் பறிகொடுத்து உடலை மட்டும் சுமந்தவனாய்த் திரும்பி நடந்தேன்.
நாட்குறிப்பின் மீதிப்பக்கங்கள் வெற்றிடமாய்க் கிடந்தன.
'எங்கடை சனம் திருந்தாது'
அப்பாவின் இந்த வார்த்தைகளை இப்போது எனது மனமும் வழி மொழிகிறது.
◆◆◆◆◆
கிணற்றடிக்குப் போவது..... தண்ணீர் அள்ளிக் கொடுப்பது இருப்பிடம் திரும்புவது..... என –
யந்திரமாய் செயல்பட்டுக் கொண்டிருந்தேன். நெஞ்சின் பாரம் அதிகமாகியதே தவிர, குறைந்த பாடில்லை. அன்று – ராணி என்ற பெண்ணுடைய அம்மா..... இதோ இன்று – பெயர் தெரியாத இந்தப் பெண்ணுடைய அம்மா.....
என்னால் அவளை மறக்க முடியவில்லை. வேண்டாம் என்று ஒதுக்கித் தள்ளத் தள்ள அவளைப் பற்றிய நினைவுகள் அதிகமானதே தவிர, குறைந்த பாடில்லை.
ஏழெட்டு நாட்கள் இப்படியே கழிந்தன.
அன்று – காலாற நடந்தால் கொஞ்சம் மன ஆறுதலாயிருக்கும் என்று பட்டது. புறப்பட்டு சில தூரம் நடந்திருப்பேன்.
"ஹலோ!..... ஹலோ!....."
'என்னையா?'
பின்னால் திரும்பிப் பார்த்தேன்.
அவள்! மூச்சிரைக்க என்னை நோக்கி ஓடி வந்துகொண்டிருந்தாள். அந்த இடத்தில் அவளை நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.
"நில்லுங்கோ! ஒரு நிமிஷம்....."
நின்றேன். அவளிடம் பதட்டம் தெரிந்தது. சுற்று முற்றும் நோட்டம் விட்டபின் அருகில் வந்து எதையோ என்னிடம் நீட்டினாள்.
"இந்தாங்கோ..... பிடியுங்கோ....." குரலில் அவசரம் தெரிந்தது. இதயம் வேக வேகமாய்த் துடிக்க, கையை நீட்டினேன். ஒரு கடித உறை, ஒற்றைக் கொலுசு..... இரண்டையும் என் கைக்குள் திணித்துவிட்டு வந்த வேகத்திலேயே ஓடி மறைந்தாள்.
விநாடிகளில் நடந்து முடிந்த அவள் வருகை..... கொலுசைத் தந்தது..... இது என்ன புதிய திருப்பம்.....? கடிதத்தில் என்னதான் எழுதியிருப்பாள்.....?
திகைப்பிலிருந்து விடுபடாநிலையுடன் இருப்பிடம் திரும்பினேன். உள்ளம் படபடப்ப, கடிதம் பிரித்தேன்.
'எதை எழுதுவது? எப்படி எழுதுவது? உங்களை எப்படி அழைப்பது.....?' என்று முத்து முத்தான கையெழுத்தில் தொடங்கிய கடிதத்தில் தன்னுடைய இதய தாபம் முழுவதையும் கொட்டித் தீர்த்திருந்தாள்.
இது – நான் சற்றும எதிர்பாராதது. மீண்டும் ஒரு முறை இறக்கை கட்டிப் பறந்தேன்.
".... எனது ஞாபகமாக இந்தக் கொலுசு உங்களிடம் இருக்கட்டும். மற்றக் கொலுசு என்னிடம் பத்திரமாக உள்ளது. எல்லாத்தடைகளையும் உடைத்தெறிந்து நாங்கள் ஒன்று சேரும்போது, நீங்கள் மிகவும் ரசித்த இந்தக் கொலுசுகள் மீண்டும் எனது கால்களை அலங்கரிக்கும்.
நம்பிக்கையோடு காத்திருப்போம்.
என்றும் உங்களுக்காக –
உங்கள்,
வைஷ்ணவி."
தனது கைபேசி இலக்கம் குறிப்பிட்டிருந்தாள்.
◆◆◆◆◆
2007.
"பேராசிரியர் ரமணன் அவர்களுடைய உரையைத் தொடர்ந்து
இப்பொழுது பரிசளிப்பு நடைபெறவுள்ளது. திருமதி, வைஷ்ணவி ரமணன் அவர்கள் பரிசுகளை வழங்குவார்"
யாழ். இன் பிரபல பாடசாலை ஒன்றின் ஆண்டு விழா நிகழ்ச்சியின் போது ஒலிபெருக்கியின் இந்த அறிவிப்பு காற்றலைகளில் மிதந்து வருகிறது...
(இடப்பெயர்வு துடைத்தெறிந்த பல சமூகத்தீமைகளில் சாதியமும் ஒன்று - உடைத்தெறிந்த காரணியாய், அழகிய காதல் ஒன்றை 'நன்னீரூற்றுக் கிணற்றடியில்' என்ற காந்தளின் கவிதை அருமையாகச் சொன்னபோது, அதுவே ஒரு சிறுகதையாக என் கற்பனையில் விரிந்தது.)

கருத்துகள்
இன்னும் கருத்து இல்லை.