‘வேலாத்தை’என்ற பெயரைக் கேட்டாலே சுற்றுவட்டாரக் கிராமங்களுக்கு ஒரு தனி மரியாதையும் கம்பீரமும் தொற்றிக்கொள்ளும். அவர் வேறு யாருமல்ல; சாத்திரியார் வேலுப்பிள்ளை எனும் எமது அப்பச்சித்தாத்தா.

அக்காலத்தில் அதர்வண வேதங்களின் ஆழத்தைக் கரைத்துக் குடித்த அபூர்வமான ஞானி அவர். வைத்திய வாகடங்கள் அனைத்தும் அவருக்குக் கைவந்த கலை. கானகத்தில் மூலிகைகளைப் பறிக்கும்போது கூட, ஒவ்வொன்றிற்கும் உரிய சுலோக வரிகளை நா தழு முறைமையாக உச்சரித்தே பறிக்கும் ஆசார சீலர்.( நா தழு முறைமை என்பது ஒரு பாரம்பரிய முறை: சுலோகங்களின் எழுத்துக்கள் சிதையாமல், நாக்கின் அசைவுகள் மற்றும் உச்சரிப்பு முறை பிழையின்றித் தாளலயத்துடன் வெளிவரும் நேர்த்தியான முறைமை) இயற்கை அவருக்குக் கொடையாக அளித்த விவேகமும், சமயோசித புத்தியும், நாள்-கோள் நிலைகளைக் கணிக்கும் சோதிடத் தேர்ச்சியும் அவரை ஒரு வழிகாட்டியாக உயர்த்தியிருந்தன.

ஆனால், இந்தச் சாந்தமான ஆன்மீக உருவத்திற்குப் பின்னால், கானகத்தின் அத்தனை ரகசியங்களையும் அறிந்த ஓர் அபாரமான வேட்டைக்காரன் ஒளிந்திருந்தான். மனிதர்களின் நாடி நரம்பை வாசித்து நோய் அறியும் அதே விரல்கள், வன விலங்குகளின் நாடித்துடிப்பையும் துல்லியமாக உணரும். அடர்ந்த காட்டில் ஒரு மிருகம் அடி எடுத்து வைக்கும் ஓசையைக் கேட்டே, அது இரையைத் தேடி நகர்கிறதா அல்லது ஆபத்தை உணர்ந்து பாய்கிறதா என்பதை அணுவணுவாகக் கணித்துவிடும் வல்லமை அவருக்கு இயற்கை தந்த பிரத்தியேகக் கொடை.

அப்பச்சித்தாத்தாவின் அடிமனதில் நீண்ட நாட்களாக ஆழப் பதிந்திருந்த ஆசை ஒன்று இருந்தது — ஒரு சிறுத்தைப் புலியின் தோலை அடைய வேண்டும் என்பதுதான் அது.

வனத்து விலங்குகளுக்குத் தாகமே முதன்மையான பலவீனம். மனிதனைப் போலவே நீரினை மையம் கொண்டே கானகத்தின் வாழ்வியலும் சுழல்கிறது. எனவே, நீர்நிலைகளைத் தேடி வரும் விலங்குகளை வேட்டையாட 'ஒளி' அமைப்பது வேட்டைக்காரர்களின் பாரம்பரிய உத்தி. கூர்மையான செவிப்புலனும், கூர் நாசியும் கொண்ட விலங்குகளின் மோப்பச் சக்தியை ஏமாற்றுவது சாதாரண காரியமல்ல. காற்றின் திசையறிந்து, நீர்நிலைக்கு எதிர்ப்பக்கமாகப் புதர்களைக் கொண்டு உருமறைப்பு செய்து 'ஒளி' அமைக்க வேண்டும். அப்போதுதான் மனித வாடை விலங்கின் நாசியைத் தீண்டாது.

அன்று அமாவாசை நிலவரம். இரவு ஒன்பது மணி இருக்கும். கானகம் தன் காரிருள் போர்வையைப் போர்த்திக்கொள்ள, அப்பச்சித்தாத்தா தனக்காக அமைக்கப்பட்ட 'ஒளி'க்குள் புகுந்து அமர்ந்தார். கொசுக்களின் ரீங்காரமும் கடியும் உடலைத் துளைத்தாலும், ஆடாமல் அசையாமல் ஒரு சிலை போல உருமறைந்து காத்திருந்தார்.

மணி நடுநிசி ஒன்றை எட்டியது. காற்று கூடத் தன் மூச்சை அடக்கிக்கொண்டது போலக் கானகமே உறைந்து கிடந்தது. குளக்கரையில் இருந்து சுமார் பத்து மீட்டர் தொலைவில் கம்பீரமாக நின்றது ஓர் ஒற்றைப் பனைமரம். அவ்வப்போது வீசும் மெல்லிய தென்றலுக்கு, அந்தப் பனையின் உச்சியில், விழும் தருவாயிலிருந்த காய்ந்த பனை ஓலை (காவோலை) அசையும்போது, "சர... சர..." என்ற உரசலோசை அந்த நிசப்தத்தைக் கிழித்தது. ஒவ்வொரு முறை அந்தச் சத்தம் கேட்கும்போதும், அப்பச்சித்தாத்தா மெல்லத் தலையுயர்த்திப் பனையுச்சியை நோக்குவார்; பின் மறுபடியும் குளத்தின் எதிர்க்கரையில் தன் கூர்மையான பார்வையை நிலைநிறுத்துவார்.

திடீரென, மங்கலான அந்த எதிர்க்கரையில் ஒரு நுட்பமான அசைவு!

அப்பச்சித்தாத்தாவின் நரம்புகளில் எச்சரிக்கை உணர்வு விழித்துக்கொண்டது. 'மானாக இருக்கலாம்... அல்லது மரையாக இருக்கலாம்... போனால் போகிறது, பன்றியாக இருந்தாலும் இன்றைக்கு வேட்டை உறுதி!' — எண்ணங்கள் மின்னல் வேகத்தில் ஓட, கையிலிருந்த மின்சூளையை (Torch light) சட்டென்று அழுத்தி, இலக்கை நோக்கி ஒளியைப் பாய்ச்சி கணப்பொழுதில் அணைத்தார்.

அந்தக் கரிய இருளில் இரு சுடர்கள் மின்னி மறைந்தன! வேட்டைக்காரர்களின் பாஷையில் அது "லைட்டுக்குக் கண்கொடுத்தல்".

அப்பச்சித்தாத்தாவின் இதயம் ஒரு கணம் நின்று நிதானித்து பின் வேகமாக அடிக்கத் தொடங்கியது. கண்கொடுத்தது சாதாரண மிருகமல்ல... சிறுத்தை!

தனித்து வேட்டைக்குச் செல்லும் எந்த அனுபவமிக்க வேட்டைக்காரனும் நேருக்கு நேர் நிற்கும் சிறுத்தையை சுடத் துணியமாட்டான். ஏனெனில், சிறுத்தையின் நெற்றிப்பொட்டில் தோட்டா பாய்ந்தாலும், தன் உயிர் பிரியும் அந்தச் சில வினாடிகளுக்குள், தாக்குதல் வந்த திசையைக் கணித்து மிருகத்தனமாகப் பாய்ந்து, எதிரியை அட்டகாசமாகக் குதறி எறிந்துவிட்டே அது மரணிக்கும்.

ஆனால், அப்பச்சித்தாத்தா மூன்று வினாடிகளுக்குள் தன் தீர்மானத்தை எடுத்தார். துப்பாக்கி இலக்கு வைக்கப்பட்டு, வெடிச்சத்தம் கானகத்தை அதிர வைத்தது!

அடுத்த கணம் அங்கே நடந்த காட்சி, வேட்டை உலகமே வியக்கும் ஒரு விந்தை!

வெடிச்சத்தம் கேட்ட மறுநிமிடம், அந்தச் சிறுத்தை அப்பச்சித்தாத்தாவின் 'ஒளி'யை நோக்கிப் பாயாமல், பனைமரத்தின் உச்சியை நோக்கி எழும்பிப் பாய்ந்து, அங்கே ஆடிக்கொண்டிருந்த காவோலையைப் பிடுங்கிக்கொண்டு, "சரார்..." என்ற பேரொலியுடன் பனையடிவாரத்தில் வந்து பிணமாக விழுந்தது!

மறுநாள், கம்பீரமாக சிறுத்தையுடன் வீடு திரும்பிய அப்பச்சித்தாத்தாவைச் சூழ்ந்துகொண்டு, நாங்கள் ஆச்சரியம் விலகாமல் "இது எப்படிச் சாத்தியமானது?" என்று கேட்டோம்.

அப்பச்சித்தாத்தா தன் வழக்கமான புன்னகையோடு அந்த ரகசியத்தை அவிழ்த்தார்:

"காற்றிலே அவ்வப்போது 'சர சர'வெனச் சத்தமிட்டுக் கொண்டிருந்த காவோலையின் தைரியத்தில்தான் நான் சிறுத்தையைச் சுடத் துணிந்தேன்! அந்தச் சிறுத்தை குளக்கரைக்கு வந்தபோதே, தன் சுற்றப்புறத்தை நோட்டமிட்டு, அந்தச் சத்தத்தை எழுப்பும் காவோலையைத்தான் தனக்கு ஆபத்தான முதன்மை எதிரியாகக் கணித்து மனதிற்குள் குறித்து வைத்திருந்தது. என் துப்பாக்கிச் ரவை அதன் நெற்றியைத் துளைத்த அந்த இறுதி வினாடியில், தன் உயிரைப் பறித்த எதிரி அந்தப் பனை ஓலைதான் என்று திடமாக நம்பி, அதை நோக்கிக் பாய்ந்து குதறி வீழ்ந்தது!"

அவரது தீர்க்கமான கணிப்பைக் கேட்டு நாங்கள் மிரண்டுபோய் நிற்க, அப்பச்சித்தாத்தா மிகவும் இயல்பாகத் தன் கத்தியை எடுத்துச் சிறுத்தையை உரிக்கும் பணியில் மூழ்கிப்போனார்.