சூரியன் இன்னும் தன் விழி திறக்கவில்லை. விடியலின் மெல்லிய வெளிச்சம், இருளை மெல்ல விலக்கிக் கொண்டிருந்த அந்த அதிகாலை வேளையில், தண்ணிமுறிப்பு பேராற்றங்கரையின் வயல்வெளிகள் அசைவற்றுப் பனிப்புகையடைந்து கிடந்தன. சுற்றிலும் சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தூரத்திற்கு வயல் வரம்புகளும், உழவும் சாலுமாய் நிலம் பரந்து விரிந்திருந்தது. ஆற்றை ஒட்டிய கைவிடப்பட்ட நிலங்களில் அடர்ந்த புதர்கள் மண்டிக் கிடந்தன.

கடந்த ஆறு நாட்களாகத் தொடர்ந்து தூக்கமில்லாமல் மாடுகட்டிப் போரடித்த சிதம்பரம்பிள்ளை அப்பாவின் சோர்வு உடலிலும் மனதிலும் அப்பியிருந்தது. தூக்கக் கலக்கமும், கடுமையான அசதியும் சேர்ந்துகொள்ள, காலைக் கடன்களைக் கழிப்பதற்காகக் களத்துமேட்டிலிருந்து ஆற்றங்கரைக்கு புறப்பட்டார். உழவுசால்களிலும், வரம்புகளிலும் இடறி இடறி, பேராற்றங்கரையை நோக்கி நடைபோட்டார்.

ஆற்றங்கரையின் ஓரத்திலிருந்த ஒரு பற்றைப் புதருக்குள் இருந்து ஏதோ ஒன்று வெளிப்பட்டது. அது ஒரு குள்ளநரி! அதன் வாயில் ஏதோ ஒரு நீண்ட பொருள் கௌவப்பட்டிருந்தது.

அதே வினாடி, நரியின் பார்வையும், தூரத்தில் நடந்து வந்த சிதம்பரம்பிள்ளை அப்பாவின் பார்வையும் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன.

இரண்டு பக்கமும் சந்தேகமும் திகைப்பும் கணத்தில் தொற்றிக்கொண்டன.

‘இவன் என்னையும், என் வாயிலிருக்கும் இந்தப் பெரிய முயலையும் கண்டுவிட்டானோ?’ – நரியின் மனதில் திகில்.

‘நான் வருவதை இந்த நரி பார்த்துவிட்டதோ?’ – அப்பாவின் கண்கள் கூர்மையாயின.

நிலவிய அந்த அமைதியில், இருவரும் சில வினாடிகள் அசையாமல் சிலை போல நின்றார்கள். காற்று கூட வீச மறந்த தருணம் அது.

நரி சட்டென்று தன் முடிவை எடுத்தது. தான் பயந்தது போலவோ, பரபரப்படைந்தது போலவோ காட்டிக் கொள்ளவே இல்லை. மிகவும் சாதாரணமாக, இயல்பாக நடப்பது போலப் பாவனை செய்துகொண்டே, அருகிலிருந்த மற்றொரு புதருக்குள் மெதுவாகச் சென்று மறைந்தது.

நரி புதருக்குள் நுழைந்த அடுத்த கணமே, அப்பாவின் குள்ளக் குறும்புத் தனமும் சுறுசுறுப்பும் விழித்துக் கொண்டன. மனதுக்குள் சிரித்துக் கொண்டவர், "வடவாப் பயலே... நீ படித்த பள்ளிக்கூடத்தில நான் ஹெட்மாஸ்டர்டா! என்கிட்டயே உன் விளையாட்டைக் காட்டுறியா?" என்று முணுமுணுத்தார்.

அதற்குள் அந்த நரி, எந்தவித சலனமும் இல்லாமல் , அப்பாவை பார்த்தபடியே ஓடிப் போய் அடர்ந்த காட்டுக்குள் மறைந்தது. ‘மனிசன் நம்மளத் தான் பார்க்கிறான், நாம காட்டுக்குள்ள போற மாதிரி போயிடுவோம்’ என்ற கணக்கு அதற்கு.

ஆனால், நரி காட்டுக்குள் நுழைந்த மறுவினாடியே, அப்பா பாய்ந்து ஓடிவந்தார்! நரி முதலில் முயலையெடுத்துக்கொண்டு எந்தப் புதருக்குள் நுழைந்து வெளியேறியதோ, அதே புதருக்குள் தாவிச் சென்று பார்த்தார்.

அங்கே... அதிகாலையில் நரியால் துரத்தி வேட்டையாடப்பட்ட அந்தப் பெரிய முயல், இன்னமும் முழுமையாகச் சாகாமல், கால்களை மெல்ல ஆட்டியபடி மரணத்தின் விளிம்பில் கிடந்தது!

"நெய்க்குடம் உடைஞ்சது, நாய்க்கு வேட்டையா போச்சு!" என்று உச்சி குளிர்ந்த அப்பா, நொடிப் பொழுதில் அந்த முயலை அள்ளிக்கொண்டு ஓடினார். அந்த நரியின் கண்ணில் படாதவாறு ஒரு மறைவிடத்தில் போய் ஒளிந்து கொண்டு, நடப்பதைக் கவனிக்கத் தொடங்கினார்.

சிறிது நேரத்திற்குப் பின், 'அப்பாடா... அந்த மனிசன் போயிருப்பான். இனி நிம்மதியா இரையை ரசித்து ருசிப்போம்!' என்ற உச்சகட்ட ஆசையோடும் உற்சாகத்தோடும் நரி மெதுவாக அந்தப் புதருக்குள் நுழைந்தது.

உள்ளே போய் பார்த்த நரிக்கு அதிர்ச்சி! அங்கே முயலும் இல்லை, ஒன்றும் இல்லை! இடம் வெறிச்சோடிப் போயிருந்தது.

ஏமாந்துபோன அந்த நரி, புதரின் மறுபக்கமாக வெளியே வந்தது. அப்பா நடந்து போன திசையை நோக்கி சில வினாடிகள் வெறித்துப் பார்த்தபடியே நின்றது. அதன் கண்கள் ஏமாற்றத்தாலும் அதிர்ச்சியாலும் கலங்க, ஆற்றங்கரையை நோக்கித் தன் கண்ணீரோடு மெல்லத் திரும்பிச் சென்றது.

மறைவிலிருந்து இதைப் பார்த்துக் கொண்டிருந்த சிதம்பரம்பிள்ளை அப்பாவின் முகத்தில் ஒரு குறுஞ்சிரிப்பு மின்னியது!