கொரோனா கதைகள்
அழகான நிபந்தனை
முழுசாய் மூன்று மாதங்களின் தனிமை, அடுத்து வரவிருக்கும் முப்பது வருடங்களுக்கான ஒரு அழகிய வாழ்க்கையைப் பரிசளிக்கிறது ஒரு கழுகுக்கு!
ஆச்சரியமாயிருக்கிறதல்லவா? முற்றிலும் உண்மை இது.
ஒவ்வொரு கழுகுக்குமான இந்த வாழ்வியல் நடைமுறை பற்றி அதனை முழுவதுமாய்த் தெரிந்து கொள்கிறபோது, இன்று உலகெங்கும் கொரோனா உள்ளிருப்பில் நாட்களைக் கழித்துக்கொண்டிருக்கும் மனிதர்களுக்கு நிச்சயமாய் ஒரு உந்துசக்தியைக் கொடுக்கும்.
[03–05–2020 அன்று முகநூல் (Facebook) பக்கங்களை விரித்துக் கொண்டு போனபோது. திரு. சபேசன் ராசலிங்கம் என்பவரின் ஒரு பதிவு பார்வையை ஈர்த்தது. 'கழுகு வாழ்க்கையும் கொரோனா ஊரடங்கும்' என்று குறிப்பிட்டுப் பதியப்பட்டிருந்த தகவல் அது. விபரம் சுருக்கமாய்க் கீழே]
கழுகு பறவைகளின் ராஜா மட்டுமல்ல. பலத்திலும் ராஜா. இந்தப் பறவை ராஜாவின் ஆயுட்காலம் எழுபது ஆண்டுகள். இந்த எழுபது ஆண்டுகளையும் பூரணமாய் வாழ்வதற்கு, இந்தக் கழுகுப்பறவையார் தனது நாற்பதாவது வயசில் ஒரு பெரிய சவாலை எதிர்கொள்ளவேண்டும். வென்று விட்டால் அது மறுபிறவிக்கு ஒப்பானது.
அதனுடைய நாற்பதாவது வயசில் கழுகின் அலகு மழுங்கி வளைந்து விடும். அலகு மட்டுமா? இரைகளைப் பற்றிப் பிடிக்க உதவும் அதன் நகங்களும் கூர்மை இழந்து விடும். இறக்கைகளோ பெரிதாகிப் பாரமாகிவிடும். சரியாக உண்ண முடியாது. பறக்க முடியாது. பலம் குறைந்து போய் முதுமை அடையும். இந்த நிலை ஏற்பட்டபின் மற்றக்கழுகுகளுடன் சேர்ந்து வாழ விரும்பாத கழுகு தன்னைத் தானே தனிமைப்படுத்தி — தனித்திருக்கும் 'தவம்' ஒன்றை ஆரம்பிக்க — காட்டிலுள்ள மலையின் உச்சி தேடிப் போய்விடும். இது — வலியும் வேதனையும் நிறைந்த ஒரு பறவையின் 'தனித்திருத்தல்' தவம்.
ஆம், முதல் வேலையாகத் தனது அலகினால் நகங்களையும் சிறகுகளையும் பிடுங்கிவிடும். அதன் பிறகு, பாறையோடு உரசித் தன்னுடைய அலகையும் உதிர்த்துவிடும். இரத்தம் சொட்டும்..... உயிர் போகுமளவுக்கு உடலெங்கும் வலியெடுக்கும். அனைத்தையும் பொறுமையோடு சகித்துக்கொண்டு, தனித்திருக்கும். அலகில்லை, நகமில்லை, சிறகுகளில்லை. அது, புதிதாய்ப் பிறக்கும் ஒரு கழுகுபோல உருமாறிவிடும். எனினும் உறுதியோடு தனித்திருக்கும். உயிர் வாழ்தலுக்காக — பாறைகளின் இடுக்குகளில் கிடைக்கும் புழுக்கள் பூச்சிகளை உணவாய்க் கொள்ளும்.
கருடனைக்கூடக் கலங்கவைக்கும் கழுகா அது?
மூன்றே மூன்று மாதங்கள். முற்றிலும் வேறுபட்ட சூழலில் வலி, வேதனை அனைத்தையுமே சவாலாய் ஏற்றுக்கொள்ளும் பறவை ராஜாவின் வாழ்க்கை அடுத்த கட்டத்துக்கு நகரும் நான்காவது மாதம் பிரமிப்பூட்டுவது.
சிறகுகள் வளர்ந்து நீளும்..... நகங்கள் கூர்மை பெறும். இதோ கெளவுகிறேன் என்று சொல்வது போல அலகு எதிரிகளைப் பயமுறுத்தும்.
மூன்று மாத — தனித்திருப்பின் பரிசாய்க் கிடைக்கவிருந்த அடுத்த முப்பது வருடங்களின் அழகிய வாழ்க்கையைத்தேடி நீல வானிலே அந்தக் கழுகுராஜா சுதந்திரமாய்ச் சிறகு விரிக்கும்!
தனித்திருத்தல் வாழ்க்கை. அதுவும் வலி நிறைந்த ஒரு தனிமை. கேவலம் ஒரு பறவையே அந்தச் சவாலை வெற்றிகொள்ள முடியுமெனில், மனிதர்களால் முடியாதா? முடியும். நிச்சயமாய் முடியும். மனதில் உறுதி வேண்டும்.
உறவுகள் எனும் அலகு உதிர்த்து —
பாசம் பற்றிப் பிடிக்கும் நட்பு எனும் நகங்களை இழந்து —
சுதந்திரமாய் உலா வந்த இனிய பொழுதுகளாகிய சிறகுகள் தொலைத்து —
வீடுகளில் முடங்கிக் கிடக்கிறோம்.
இது தண்டனையல்ல. இயற்கை எமக்களித்த கட்டாய ஓய்வு.
நேரமில்லை..... நேரமில்லை..... என்று ஓடித்திரிந்த பொழுதுகள் போய் இப்போது எமக்கு முன்னால் நின்று, 'வா' என்று கைநீட்டி வரவேற்கிறது நேரம்.
முழுமையாகப் பயன்படுத்துவோம்.
முதன்மையானது — சுயவிமர்சனம்.
ஒவ்வொரு மனிதனையும் மீண்டும் புதிதாய்ப் பிறக்க வைக்கும் கால அட்டவணை.
அன்பு செய்தோமா.....? ஆணவம் கொண்டோமா? உண்மையில் உயர்ந்தோமா? பொய்மையில் உழன்றோமா? பண்பினைப் புரிந்தோமா? பொறாமையில் எரிந்தோமா? உறவினை அணைத்தோமா? உதாசீனம் செய்தோமா? இன்னும்..... இன்னும்.....
நடந்து வந்த பாதையிலே மீண்டுமோர் பயணம் செய்து, களை பிடுங்கி விதை விதைக்கும் காலபோகமாய்க் கனிந்து வந்திருக்கிறது இந்த உள்ளிருப்பு!
முப்பது வருடங்களென்ன..... எத்தனை வருடங்கள் கடந்தாலும், 'மனிதனாய் வாழ்ந்தோம்' என்ற பெருமை சொல்லும் வாழ்க்கையின் நல்விதைகளாய் அவை இருக்கட்டும்.
தனித்திருத்தல் தண்டனையல்ல — 'மனிதம்' வளர்க்க இதயம் வரவு வைக்கும் அழகான நிபந்தனை!

கருத்துகள்
இன்னும் கருத்து இல்லை.