போர் - பல முனைகளிலும் உக்கிரமாக நடந்துகொண்டிருக்கிறது.
அது இரண்டாம் உலகப் போர்.
ராணுவ வீரர்கள் இரவு பகலாக மாறி மாறிப் போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர். சோவியத் படையில் பணியாற்றி, இப்போது இரண்டாம் உலகப் போரிலும் பங்குபற்றிப் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஸ்பிரிதோனோவிச் என்ற வீரனும் அவர்களில் ஒருவனாய் ஓய்வு ஒழிச்சல் இன்றியப் போர் முனையிலேயே நிற்கிறான். முறைப்படி விடுப்பு கிடைக்க வேண்டிய இராணுவ வீரர்களில் அவனும் ஒருவன் என்றாலும், தொடர் போர் நடவடிக்கைகள் காரணமாக அது சாத்தியப்படவில்லை.
அதிர்ஷ்டவசமாய் - மூன்று நான்கு வீரர்களுக்கு அந்த விடுப்பு வழங்கப்பட - அவனுக்கும் அந்த விடுப்பு கிடைக்கிறது.
அந்த நிமிடமே தன் சொந்த ஊருக்குத் திரும்பிப் போய் தனது காதல் மனைவியைப் பார்த்துவிடும் ஆவலில் அவன் உள்ளம் பரபரக்கிறது.
எறிகணைகள், குண்டுப் பொழிவுகள் என எல்லாவற்றிற்கும் தப்பி, ஒருவாறு சொந்த ஊரைச் சென்றடைகிறான். அங்கேயும் போரின் அழிவுகள்.. குண்டும் குழியுமாய் வீதிகள்.. சிதிலமடைந்து கிடந்த கட்டடங்கள்.. பிணங்கள்...
நொந்து போன இதயத்துடன், இன்னும் சில நிமிடங்களில் வீட்டைச் சென்றடைந்து விடலாம் என்று ஓடுகிறான். அப்போது தான் அவனுடைய கண்களில், சற்றுத் தூரத்தில் வீதியை அண்டிய பகுதி ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு லாரிகளில் இறந்து போன மனிதர்களின் உடல்கள் அடுக்கப்பட்டிருந்த காட்சி தெரிகிறது.
'ஓ.. இத்தனை பேர் இறந்து போனார்களா?' நினைப்பிலேயே உறைந்து போய்ச் சிலையாகி நின்றான்.
அத்தனை உடல்களையும் பொதுவான இடமொன்றுக்குக் கொண்டு போய் அடக்கம் செய்யவிருப்பதாக ஒருவரிடம் தகவல் அறிந்தான்.
என்ன நினைத்துக் கொண்டானோ?
லாரிகள் நிறுத்தப்பட்டிருந்த இடத்தை நோக்கி ஓடினான்..
சிறியவர்கள், முதியவர்கள், குழந்தைகள், பெண்கள் என, உடல்கள் அடுக்கப்பட்டுக் கிடப்பதையும் ரத்த வாடை வீசிக் கொண்டிருப்பதையும் கண் கலங்கிப் பார்த்தான் அந்த ராணுவ வீரன்.
'ஓ.. எங்கள் கிராமமும் தாக்கப்பட்டிருக்கிறது..!'
உடல்கள் மீது கண்களை ஓடவிட்டவன் ஒரு கணம் அதிர்ந்து போனான்.
வெளியே கால்கள் தெரிய அடுக்கப்பட்டிருந்த ஒரு பெண் உடலில் காணப்பட்ட காலணிகள், முன்னர் ஒரு தடவை அவன் தன் மனைவிக்குப் பரிசளித்த காலணிகள் போலவே இருந்தன.
நெஞ்சு அடைக்க, வீட்டை நோக்கி ஓடினான்.
வீடு உடைந்து போய்க் கிடந்தது. மனைவி அங்கே இல்லை. மீண்டும் பிணங்கள் இருந்த இடத்திற்கு தலை தெறிக்க ஓடி,
"அது எனது மனைவியின் உடல்.. நான் தனிப்பட்ட முறையில் அவளை அடக்கம் செய்ய விரும்புகிறேன்" என்று சொல்லி, அந்த உடலைத் தரும்படி அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டான். ஒரு ராணுவ வீரன் என்பதாலோ என்னவோ, அவனுக்கு அனுமதி கிடைத்தது.
மெதுவாக - மிக மெதுவாக - அந்த உடலை வெளியே எடுத்தபோது - அது அவனுடைய மனைவியின் உடலே! மிகப் பெரிய ஆச்சரியம் என்னவெனில், உடலில் இன்னமும் உயிர் இருந்தது!
அவசரம் அவசரமாக மருத்துவ மனைக்கு எடுத்துச் சென்று தன் அன்பு மனைவியை உயிருடன் மீட்டெடுத்தான் அந்த வீரன்.
அவர்களுடைய இனிய வாழ்க்கை தொடர்ந்தது.
எட்டு ஆண்டுகள் கழித்து மனைவி கர்ப்பமானாள்.
பிரசவத்திற்கு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு, ஆண் குழந்தை பிறந்தது.
"அன்று நீங்கள் வந்திருக்கா விட்டால், இன்று நான் இருந்திருக்க மாட்டேன். எனக்கு இந்தக் குழந்தையும் கிடைத்திருக்காது.." மகிழ்ச்சி மேலிட, ஸ்பிரிதோனோவிச் இடம் அவன் மனைவி கூறிக்கொண்டிருக்க -
புதிதும் புது மலராய்க் கிடந்த அவர்களுடைய குழந்தையைக் கையில் ஏந்திய வண்ணம் அவர்களிடம் வந்த மருத்துவத் தாதி -
குழந்தையை அதன் தந்தையின் கையில் கொடுத்தபடி கேட்டாள்:
"அழகான உங்கள் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கப் போகிறீர்கள்?"
"விளாடிமிர் புடின்".

ஊற்றுக் கண்.
