முன்னைய காலத்தில், வழிப்போக்கர்களுக்கும், பசியால் களைத்து வருபவர்களுக்கும் இலவசமாக உணவு வழங்கும் சத்திரங்கள் பல இருந்தன. இது போன்று, கடலோடு அமைந்த நாகப்பட்டினம் என்றொரு ஊரிலும் ஒரு சத்திரம் இருந்தது.

ஒரு சமயம், காளமேகப் புலவர் நெடுந்தூரம் நடந்து களைத்து, மதிய போஜனம் அருந்தும் நோக்குடனே மேற்படி சத்திரத்துக்குள் போகிறார். மதிய நேரம் என்பதால், இவரைப் போலவே இன்னும் பலர் அங்கே பசி மேலிட, உணவை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

நேரம் நகர்ந்து கொண்டே இருந்தது, உணவோ வந்த பாடில்லை!

காளமேகப் புலவருக்குப் பசியினால் ஏற்பட்ட கோபம், உச்சத்துக்குச் சென்றுவிட,

கவிதை பிறக்கிறது :

" கத்தும் கடல் சூழ் நாகைக் காத்தான் தன் சத்திரத்தில்

அத்தமிக்கும் போது அரிசி வரும் ..

குத்தி உலையிலிட ஊரடங்கும் ..

ஓரகப்பை அன்னம் இலையிலிட வெள்ளி எழும்! "

'வெள்ளி எழும்' என்பது மறுநாள் அதிகாலையைக் குறிக்கும்!

கோபத்தால் ஏற்பட்ட, கிண்டலுடன் கூடிய நகைச்சுவைப் பாடல் இது.

ஒரு தடவை, கடும் வெயிலில் நடந்து களைப்புற்ற காளமேகப் புலவரின் கண்களில், எதிரே வீதிக் கரையில் ஒரு பெண், மோர் விற்றுக் கொண்டிருந்தது தெரிந்தது.

மோர் வாங்கி குடிப்பதற்காக அருகே சென்று, மோரை வாங்கிக் குடிக்கிறார்.

களைப்பு நீங்கியதோ இல்லையோ, மோரின் தரம் குறித்துக் கிண்டலாய்ப் பிறக்கிறது அவரிடம் ஒரு கவிதை!

" கார் என்று பேர் படைத்தாய் ககனத் துறும் போது ..

நீர் என்று பேர் படைத்தாய் நீள்தரையில் வந்த பின்னே ..

வார் ஒன்று மென் முலையர் ஆய்ச்சியர் கை வந்த பின்னே ..

மோர் என்று பேர் படைத்தாய் முப்பேரும் பெற்றாயே! "

அதாவது,

வானத்தில் (ககனம்) கார் மேகமாய் இருந்து, பின் மழையாய் பூமிக்கு வந்தபோது நீர் ஆகினாய் ..

மென்மை பொருந்திய இடைப் பெண்களின் கைகளில் பால் கடையும் மத்து (வார்) வந்து - கடைபட்டாய் ..!

(அவர்கள் பாலைக் கடைந்தனரா இல்லையா??)

அதன் பிறகு உனது பெயர் 'மோர்' என்று ஆகிவிட்டது!

(நீ நீர் தான் .. மோரல்ல!)

கார், நீர், மோர் ஆகிய மூன்று பெயரும் நீயே பெற்றுவிட்டாய் நீரே!!

மோர் மோராக இல்லாமல் வெறும் நீர் போன்றே சுவையின்றி இருந்ததைக் கண்ட காளமேகப் புலவரின் கிண்டல் கவிதை இது!

ஊற்றுக்கண்