லண்டன் சிறுநகர்ப் பகுதி ஒன்றிலுள்ள பொது மண்டபம்.பலர் கூடி இருக்கிறார்கள்.

மலர்கள்..மலர் வளையங்கள்..இரங்கல் உரைகள்.. சம்பிரதாய நடைமுறைகளெல்லாம் நடந்தேறிய பின்,

கடைசிக்கட்டம்.

நிருபனுடைய உடல் ஏரியூட்டக் கொண்டு செல்வதற்குத் தயாராகக் காத்திருக்கிறது. இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்டவர்களில் பலருடைய கவனமும் இப்போது-

வெள்ளை உடை அணிந்து, கொள்ளிக் குடத்தை இரண்டு கைகளாலும் பற்றித் தோளில் சுமந்தபடி நின்றிருந்த ராஜியின் மீதே குவிந்திருக்கின்றன.

'இதென்ன புதுசாய் இருக்கு?"

"பொம்பிளை கிரியை செய்யிறதா? இது எந்த ஊர்ப் பழக்கம்?

" ஆரைக் கேட்டு இதெல்லாம் செய்யினம்? வயசு போன ஒருத்தரும் இல்லையே?"

“அது தான் நானும் நினைக்கிறன்.. விட்டிருக்கப் படாது!”

மெல்லிய குரல்களில் இது போன்ற கிசு கிசுக்கள் பரிமாறப்படுகின்றன.

திகைப்பு, வியப்பு, எதிர்ப்பு, வெறுப்பு, கண்டனம்,

'இது தேவைதானா?’ என்னும் பாவனை என, சுற்றிவர இன்னும்

இது போன்ற உணர்வுப் பிரதிபலிப்புகளைத் தெறிக்கவிட்டுக்-

கொண்டிருந்தன பார்வைகள்!

‘ஊரில் என்றால் இப்படிச் செய்திருப்பாயா?' எனக் கேட்கும் கண்டனக் கணைகள் நாலாபக்கமுமிருந்து மௌனமாய்த் தன்னை நோக்கிப் பாய்ந்து கொண்டிருந்ததை ராஜி உணர்ந்தாள்.

ஒரு துளி கண்ணீர் கூட வெளியே வந்து விடக் கூடாது என்பதில்

உறுதியாய்- இறுகிப்போய் நிற்கிறாள்.

‘நிருபா! இது உங்களுக்கும் எனக்குமான பிரச்சினை.."

இறுதிக் கிரியை செய்பவர் ராஜியின் பின் புறமாக வந்து

நிற்கிறார். அவள் தோள் மீதிருந்த பானையில் கத்தியால் ஒரு சிறிய

துளை போட்டு நிருபனுடைய உடலைச் சுற்றி வரும்படி சொல்கிறார். பானையிலிருந்து மெல்லிய கீற்றாய் நீர்

வழிந்தோட, அடி எடுத்து வைக்கிறாள். மூன்று தடவைகள் இதுபோல

கணவனுடைய உடலைச் சுற்றி அவள் வர வேண்டும்.

‘நான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் உங்களுக்காகத் தான்’

—----+------+--------+------+----

மண மேடை.

நிருபனும் அவளும் கைகோர்த்து அக்னியை வலம் வருகிறார்கள்.

புரோகிதருடைய கணீர்க் குரல் அழகிய ராகமொன்றில் சப்தபதி தத்துவத்தை

ஒவ்வொன்றாய் இசைக்கிறது.

“ஈரடி கணவர்க்காக ...." ராஜிக்கு மெய் சிலிர்க்கிறது,

“அப்ப ரெண்டு அடி மட்டும் தான் எனக்காகவா?" யார்க்கும்

கேட்காதபடி மெதுவான குரலில் அவளுக்கு மட்டும் கேட்கும்படி

நிருபன் கேட்கிறான்.

"நான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் உங்களுக்காகத் தான்”

பதிலுக்கு ராஜியின் குரலும் கிசுகிசுக்கிறது. கோர்த்திருந்த கைவிரல்கள் மேலும் அழுத்தமாய் ஒன்றையொன்று பற்றிக் கொள்கின்றன.

" தீயைவலம் வரும்போது மேடையில சப்தபதி தத்துவம்

இசையோடை ஒலிக்க வேணும் “ இது தங்தையிடம் ராஜி போட்ட

திருமண நிபந்தனை. தேடிப் பிடித்து, தமிழ் நாட்டிலிருந்து ஒரு புரோகிதரை அவர் வரவழைந்திருந்தார்.

திருமணம் முடிந்த மறுநாள் நிருபன் ராஜியிடம் கேட்டான் .

“சப்தபதி தத்துவத்திலை அப்பிடியென்ன உனக்கொரு மோகம்?”

ஜெமினி கணேசனும் சுஜாதாவும் நடிச்ச பழைய படமொண்டு பாத்தனான்.. அதிலை இது வருகுது.. அப்பவிலை இருந்தே எனக்கொரு விருப்பம்.. கொஞ்ச நாளைக்கு முன்னம் ஒரு

கலியாண வீட்டிலை இதை கேட்டன். கேக்க சரியான

சந்தோசமா இருந்தது நிருபா.. மனமெல்லாம் நிறைஞ்சு போன மாதிரி

ஒரு உணர்வு…”

"ஓ.. எங்கடை கலியாணத்திலையும் அது ஒலிக்கவேணுமெண்டு விரும்பினியா? "

"ஓம்.. ஐயர் அதை ராகமாய்ச் சொல்ல,

நாங்களும் மற்ற எல்லாரும் கேக்கவேணுமெண்ட விருப்பத்தை

அப்பாட்டை சொன்னன். அதைப் போலை நேற்று மனமெல்லாம் நிறைஞ்சு போச்சு.. “

“உண்மை தான் ராஜி. எனக்கும் நல்ல சந்தோசமா இருந்தது ….எங்கை அதை முழுவதுமா ஒருக்கா சொல்லு பாப்பம் “

கண்கள் விரிய ஒவ்வொன்றாய்ச் சொன்னாள்.

“ஓரடி கற்பைக் காக்க....

ஈரடி கணவர்க்காக....

சீரடி மூன்றாம் பாதம் சேர்ந்ததோர் குலத்தைக் காக்க..

நாலடி அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு எனும்

நான்கினைக் காக்க..

ஐந்தடி புலன்கள் ஐந்தும் அடக்கியே வாழ்வைக் காக்க…

ஆறடி சுவைகளாறும் கணவர்க்கே அன்பில் ஊட்ட.

ஏழடி உலகமேழும் கணவனோடு சேர்ந்து வாழ!”

“அடேயப்பா! ஒவ்வொரு அடிக்கும் ஒவ்வொரு அழகான அர்த்தம்…fantastic! “

********************

அடுத்த துளை.

இரண்டாவது சுற்று.

உள்ளம் ரணகளமாய்த் துடிக்கிறது ராஜிக்கு,

“குழந்தை இல்லையெண்டா என்ன? எனக்கு நீ குழந்தை. உனக்கு நான் குழந்தை. பிறகென்ன?, சந்தோஷமாத் தானே இருக்கிறம்.?.. ரெண்டு பேரும் நல்ல ப்ரெண்ட்ஸ் ஆக வாழ்க்கையை ரசிப்பம்.”

“அது சரிதானப்பா.. பின்னடிக்குக் கடமை செய்ய எங்களுக்கு ஒரு பிள்ளை வேண்டாமா?”

“அட.. இது ஒரு விசயமே? Simple!

எனக்கு நீ செய்யாலாம்.. உனக்கு நான் செய்யலாம்..முதல்லை ஆர் போறமெண்டதைப் பொறுத்து.!”

“வேண்டாம்.. வேண்டாம்.. விடுங்கோ .. இதோடை இந்தக் கதையை நிப்பாட்டுவம்.."

“சரி.. சரி. உத்தரவு மகாராணி!” வாய் பொத்தி பாவனை காட்டினான்.

‘நிருபா! நீங்கள் முதல்ல போயிட்டீங்க.....

நான் கடமை செய்யிறன் நீங்கள் சொன்னபடி.. மற்றவை

என்ன சென்னாலும் அல்லது நினைச்சாலும் எனக்குக் கவலையில்லை.”

‌ *****************

அன்று சித்ரா பௌர்ணமி.

மறைந்து போன தங்கள் அம்மாக்களை நினைத்து நிருபனும் ராஜியும் விரதமிருக்கிறார்கள். அரை நேர வீவு போட்டு நிருபன் மதியமே வேலையிலிருந்து வீட்டுக்கு வந்து விட்டான்.

“அடேயப்பா! வாசம் மூக்கைத் துளைக்குது.. இவ்வளவும் நீயாடி சமைச்சநீ ? "

“பின்னை வேறை ஆர் சமைக்கிறது?”

“சரி. சரி. வா. உடனையே சாப்பிடுவம்.. பசி வயித்தைக் கிள்ளுது.”

வாழை இலையில் பறிமாறிச் சாப்பிடுகிறார்கள்.

“ஆறடி சுவைகள் ஆறும் கணவர்க்கு அன்பில் ஊட்ட... "

மெலிதாய் இசைத்துக்கொண்டே கண்களில் காதல் மின்ன

நிருபன் ராஜியைப் பார்க்கிறான்.

“சரி தான்.. சப்தபதி தத்துவம் சாப்பாட்டு மேசைக்கே வந்திட்டுது!”

“பின்னை வேறை என்ன? கணவனுக்காக இப்பிடி

அறுசுவையாகச் சமைச்சு ஒருத்தி வைச்சிருக்கிறாள்.. சப்தபதி தத்துவம்

வரத்தானே செய்யும்?"

மகிழ்ச்சியுடன் கழிந்த அன்றைய மாலைப் பொழுது நடு இரவுடன் முடிவுக்கு வந்தது. நிருபன் வாந்தி எடுக்க ஆரப்பித்தான். அஜீரணம் என்று நினைத்து வழமையான மாத்திரைகளை உட்கொண்ட போதும் வாந்தி நிற்கவில்லை. மயக்கம் அடையுமளவுக்கு அவனது நிலைமை மோசமாக- அம்புலன்ஸ் வரவழைத்து மருந்துவ மனைக்குக் கூட்டிப் போனாள். உடனே அனுமதிக்கப்பட்டு, அடுத்து வந்த இரண்டு நாள்கள் அவன் மருத்துவ மனையில்,

கொஞ்சம் ஓய்வெடுத்த நிருபன் மீண்டும் வேலைக்குப் போய்வரத் தொடங்க, அவன் குணமாகிவிட்டான் என்ற நினைப்பில் ராஜி நிம்மதியானாள். ஆனில், அடுத்து வந்த தினங்களில் அவ்வப்போது தலைகாட்டத் துவங்கிய வாந்தி அவளுக்குள் இனம்புரியாத கலக்கத்தையும் ஒரு வித பயத்தையும் ஏற்படுத்தியது.

“அடிக்கடி இப்பிடி வாந்தி வாறது ஏனெண்டு தெரியேல்ல..

ஒரு செக் அப் செய்தா நல்லது. ஒரு நாளைக்கு லீவு போடுங்கோ நிருபமா”

“அதொண்டு மில்லை ராஜி. செமியாக் குணமாய் இருக்கும்”
“அடிக்கடி என்ன செமியாக்குணம்? ஒரு செக் அப் செய்யிறதிலை
என்னப்பா பிரச்சினை ? நாளைக்கு லீவு போடுறியள்..நாங்கள்
டொக்டரிட்டைப் போறம்.. அவ்வளவு தான் !"

"சரி.. சரி.. இனி மறுக்க முடியுமே! போவம்.”

பரிசோதனைகள். புதிய புதிய மருந்துகள். கவனமாக இருக்கும் படி யான மருத்தவ அறிவுறுத்தல்.

எண்ணெய், காரம், எதுவுமற்ற - எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவு வகைகளை மட்டுமே பார்த்துப் பார்த்து ராஜி செய்தான். எனினும்,

ஒருசில நாள்கள் போக, மீண்டும் அதே நிலை. வேலை நேரங்களில் கூட

வாந்தி எடுக்கத் துவங்கினான். முகம் சோபையிழந்து, கண்கள் உயிரிழந்து.. நிருபனுடைய உடல் நிலை

மோசமாகிக் கொண்டிருந்தது.

ஏதோ ஒரு விபரீதம்

நிகழவிருப்பதை ராஜியின்

உள்மனம் எச்சரித்தபடியே இருந்தது. பழைய நிருபனாய்த் தன்

அன்புக் கணவனைக் காணவேண்டும் என்று ஏங்கினாள்.

மறுபடியும் மருத்துவமனை. பல்வேறு பரிசோதனைகள்..

ராஜியிடம் மருத்துவர் சொன்னார்.

நிருபனுக்கு நுரையீரல் புற்றுநோய்! நான்காம் நிலைக்கு வந்து விட்டது !

துடித்துப் போனாள், நொறுங்கிப் போனாள். இதயத்துள் ரத்தம் கசிந்தது..

யாரிடம் சொல்லுவாள்?

குறைந்தது இரண்டு மூன்று வாரங்கள் என்றாலும் கட்டாய ஓய்வில் இருக்கும்படி மருத்துவர் சொன்னதில், வேலைக்கு லீவு போட்டு

நிருபன் வீட்டிலேயே இருக்கிறான்.

“ஒரு நாளைக்கெண்டாலும் வீவு போட்டு வீட்டிலை நிக்க மாட்டீங்களா?" என்று ஆசையோடு கெஞ்சும் ராஜியிடம்

இப்போதெல்லாம் தெரிகின்ற மாற்றங்கள் நிருபனுக்குப் புதிது.

எதற்கெடுத்தாலும் சிரிப்பும் கேலியுமாய் இருப்பவள், எதையோ பறி கொடுத்தவள் போல எதிலும் ஒட்டாமல் இருப்பது அவனுக்குப் புதிது.

"நிருபா!" என்று கூப்பிடுகின்ற அந்தக் குரலில்

வழமையான காதலைத் தேடுகின்ற இந்த நிலை அவனுக்குப் புதிது.

அதிக நேரம் சாமி அறையே கதியென்று கிடக்கிறாள்.

தனக்கெனத் தனியாக எந்த உணவையும் சமைக்காமல்,

நிருபனுடைய பத்திய உணவையே தானும் சாப்பிடுகிறாள்.

இரவில் எப்போது படுக்கைக்கு வருகிறாள் என்பது

இப்போதெல்லாம் அவனுக்குத் தெரிவதில்லை, மறுநாள் கேட்டால்,

“நிறைய வேலை இருந்ததப்பா " என்பதே பதில்.

பொறுக்க முடியவில்லை அவனுக்கு ஒரு நாள் அவள் ஏதோ மும்முரமான வேலையில் இருக்க, கூப்பிட்டான்

“ராஜீ”

" என்னப்பா?”

“ஒருக்கா வந்திட்டுப் போம்மா.." என்னவோ ஏதோ என்று அவள் ஓடி வந்தாள்.

“இப்பிடி இரு “ அருகில் இருக்கும் படி சொன்னான் .இருந்தாள்.

" என்ன பிரச்சினை ராஜீ? ஏனிப்பிடி இருக்கிறாய்”

“ஒண்டுமில்லையப்பா. வழமை போலை தான் இருக்கிறன்”

“இல்லை .நீ பொய் சொல்லுறாய்- சும்மா மழுப்புறாய் ..”

“ஏன் நிருபா அப்பிடி நினைக்கிறியள்? “ அவளையறியாமல் குரலில் பதட்டம் வெளிப்படுகிறது.

“நீ மாறீட்டாய் ராஜி.. என்ரை பழைய ராஜி இல்லை நீ..”

“நான் உங்கடை பழைய ராஜீதான் நிருபா..எனக்கு ஒண்டுமில்லை. நீங்கள் யோசிக்க வேண்டாம்.அமைதியா இருந்து ஓய்வெடுங்கோ."

“ம்ஹும் .. நீ பொய் சொல்லுறாய்.. எனக்கு வருத்தம் வந்திட்டுதெண்டு கவலைப் படுறியா? ஒரு பிரச்சினையுமில்லை ராஜி ரெண்டு மூண்டு கிழமை ஓய்வெடுக்க - எல்லாம் சரியாப் போயிடும்.. உன்னை இப்பிடிப் பாக்க என்னாலை முடியேல்லையடா.. “

அருகில் அவளை அணைத்து அன்போடு தலை தடவினான்.

அவளுக்கு அடி வயிற்றிலிருந்து அழுகை பீறிட்டுக் கொன்டு வந்தது. என்ன செய்வாள்? கட்டுப்படுத்திக் கொண்டாள்.

‘உண்மையைச் சொல்லி விடலாமா?!’

‘வேண்டாம். வேண்டாம். உடைஞ்சு போவார். அவராலை இந்தப் பேரிடியைத் தாங்கவே முடியாது. இப்போதைக்கு இப்பிடியே விடுவம்.! ‘அவன் தோளில் தலை சாய்த்து.சிறிது நேரம் கண்மூடிக்கிடந்தாள்.

‘கடவுளே!' உள் மனம் புலம்புகிறது.

'ஐந்தடி புலன்கள் ஐந்தும் அடக்கியே வாழ்வைக் காக்க..'

தனது உடல் நிலை பாரதுரமாகப் போய்விட்டது என்பதை அடுத்து வந்த மருத்துவமனை அனுமதியின் போது நிருபன் தெளிவாகப் புரிந்துகொண்டான்.

“உண்மையைச் சொல்லுங்கோ டொக்ரர்.. பிளீஸ்..எனக்கு என்ன தான் பிரச்சினை?”

ராஜி இல்லாத சமயம் பார்த்து மருத்துவரிடம் மன்றாடிக் கேட்டான்.

ராஜியின் வேண்டுதலுக்கிணங்க இது வரை மௌனமாய் இருந்தவர், இனி சொல்லியே ஆகவேண்டும் என்ற நிலையில் மருத்துவர் எல்லாவற்றையும் அவனிடம் சொன்னார் மருத்துவரின் வார்த்தைகளில் மறைந்து கிடந்த, சாவுக்கான நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் தனது நிலை- நிருபன் அணுவளவும் எதிப்பார்த்திராத ஒன்று. அதிர்ந்து போனான். கண்கள் இருண்டு, தலை சுற்ற, தொப் என்று படுக்கையில் சாய்ந்தான்.

“Cheer up Nirupan.. Let's hope for the best.

Why not a miracle may happen? "

சொல்லி விட்டு மருத்துவர் போய் விட்டார்.

“ ஒ.. இது தான் காரணமா? “

“ராஜிக்கு எல்லாமே தெரியுமா?! ‘ கண்ணீர் வழிந்தோடியது.

‘ராஜீ..ராஜீ.. என்ரை ராஜிம்மா..!’

மதிய உணவுடன் ராஜி வந்தாள்.

“உங்களுக்கு பிடிச்ச கத்தரிக்காய்ப் பால் கறியும்,கரையக் காச்சின குத்தரிசிச் சோறும் கொண்டு வந்திருக்கிறன்”

பதிலேதும் சொல்லாமல் அவளையே உற்றுப் பார்க்கிறான்.

கன்னல்கள் குழிவிழுந்து.. இதழோரப் புன்சிரிப்பு நிரந்தரமாய்த் தொலைந்து.. கண்களில் உயிர்ப்பின்றி..

“ஐயோ..! என்றை ராஜியா இவள்?!”

“என்னப்பா.. ஒண்டுமே சொல்லாமல் என்னைப் பாக்கிறீங்கள்?

“வா ராஜி.. இப்பிடி எனக்குப் பக்கத்திலை இரு.”

”சாப்பிட வேணுமல்லே ?”

“முதல்ல இரு .. பிறகு சாப்பிடலாம்.."

இருந்தாள். அவளுடைய இரண்டு கைகளையும் பற்றித் தன் மார்புடன் சேர்த்து வைத்துக் கொண்டான். கண்ணீர் வழிந்தோட,

ஏதேதோ சொன்னான்- பிரதானமாய் ராஜியின் எதிர்காலம் பற்றி.

“இப்ப ஏன் நிருபா இதெல்லாம்? ஆறுதலாக் கதைப்பம்”

'கடவுளே! உண்மை தெரிஞ்சிட்டுதோ?' பதறிப் போனாள்.

“இன்னும் ஒரே யொரு முக்கியமான விசயம் ராஜி.. *

பொங்கி வந்த அழுகையைப் பிரயத்தனப் பட்டு நிறுத்தி,

'என்ன?' என்பது போல அவனை ஏறிட்டுப் பார்த்தாள்.

“கடவுளே! என்ன சொல்லப் போறார்”

“அதுதான்.. நான் முந்தினா நீ. நீ முந்தினா நான் எண்டொரு டீல் இருக்கு.. இப்ப நான் முந்தீட்டன்..இது உன்ரை turn…”

இனி அவளால் முடியாது.

மருத்துவ மனை மறந்து போனது. சூழவும் மனிதர்கள் நிற்பது மறந்து போனது....

ஓ, என்று குரலெடுத்துக் கணவனைக் கட்டி அணைத்தபடி கத்தினாள். குலுங்கிக் குலுங்கி -அழுதாள்.

தாதிமார் ஓடிவந்தார்கள்.. மருத்துவர் சிலர் பதறிப் போய் ஓடி வந்தார்கள்.

நிலைமை கட்டுக்குள் வர சில நிமிடங்கள் ஆயிற்று.

அடுத்து வந்த இரண்டு வாரங்கள் மட்டுமே நிருபன் உயிரோடிருந்தான்.

**********************

மூன்றாவது துளை.

கடைசித் தடவையாக நிருபனுடைய உடலைச் சுற்றி வருவதற்கு ராஜி அடியெடுத்து வைக்கிறாள்.இன்னும் சில பொழுதுகளில் அவளுடைய உயிரானவன் தீயுடன் சங்கமிக்கப் போகிறான். தன் 'உயிரை' வழியனுப்ப அவள் தயாராகி விட்டாள்.

‘நான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் உங்களுக்காகத் தான் நிருபா!’

எல்லாம் முடிந்துவிட்டது. கிரியை செய்பவர்,கொள்ளிக் குடத்தை அவளிடமிருந்து வாங்கி,அப்படியே ஓங்கித் தரையில் போட்டு உடைக்கிறார். நீர்த்துளிகள் நாலாபுறமும் தெறித்துச் சிதற-பானை சுக்குநூறாகிறது!

‘ஏழடி உலகம் ஏழும் கணவனோடு சேர்ந்து வாழ!’

****************

[2025 ஜுன் எழுநிலம் பத்திரிகையில் வெளிவந்த சிறுகதை.]