அண்மையில், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் தொடர்பான ஒரு விசித்திரமான பதிவை இணையதளம் ஒன்றில் பார்த்தேன். அது விசித்திரமாக இருந்த போதிலும், இன்றைய காலப்பகுதியில் இந்த AI தொழில் நுட்பம் நிகழ்த்திக் கொண்டிருக்கும் சாதனைகள் எல்லாமே- அதாவது எல்லாப் பதிவுகளுமே- தத்ரூபமாகவும், நம்பும்படியாகவும் அமைந்துள்ளமை நவீன விஞ்ஞானத்தின் ஒரு பாய்ச்சல் என்றே கூறவேண்டும். இன்றைக்கு 50 வருடங்களுக்கு முன், இப்படி ஒரு தொழில் நுட்பம் பற்றி நம்மில் யாரும் கற்பனை செய்து கூடப் பார்த்திருக்க மாட்டோம் என்பது தான் உண்மை.

[ அந்தப் பதிவு பற்றிய விபரத்தை இப்பத்தியின் முடிவில் சொல்கின்றேன்].

நாமே இப்படி என்றால், எமக்கு முந்தைய தலைமுறையினர்?

இப்படி நினைத்துக் கொண்ட போது தான் காலஞ்சென்ற எனது அன்புத் தந்தை நினைவில் வந்தார். அவரை நான் ஐயாச்சி என்றே அழைப்பேன்.

ஐயாச்சி வாழ்ந்த காலத்தில் வானொலி தவிர்ந்து வேறு எந்த இலத்திரனியல் சாதனங்களும் இருக்கவில்லை.

ஐயாச்சி பற்றி ஒரு அறிமுகம் செய்தால் தான் இனி நான் கூறப்போகும் விடயங்களின் சுவாரஸ்யத்தை நீங்கள் முழுமையாக அனுபவிக்க முடியும்.

புராண இதிகாசங்கள் எல்லாம் அறிந்து, இம்மி பிசகாமல் புராணக்கதைகளை அழகாக வர்ணித்துச் சொல்லும் ஒரு மனிதர் அவர். சந்திர சூரியர்கள் நமக்கெல்லாம் கடவுளர்கள் என்று அடிக்கடி சொல்லுவார்.

கிரகணம் நிகழும் போது, அது சூரிய கிரகணமாகவோ அல்லது சந்திர கிரகணமாகவோ இருக்கலாம்.. நாங்கள் சிறியவர்களாக இருந்தபோது, ஐயாச்சி கூறும் விளக்கம்:

" பாம்பு சூரியனை / சந்திரனை கௌவி வைத்திருந்து, பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வெளியே உமிழ்ந்து விடுவது தான் கிரகணம் என்று சொல்லுறது.."

சூரியன் / சந்திரன் அந்த நேர்கோட்டு மறைப்பிலிருந்து விலகத் துவங்க, சிறிது சிறிதாக வெளிச்சம் வரும் இல்லையா?

" சரி.. கொஞ்சம் கொஞ்சமாய் பாம்பு சூரியனை / சந்திரனை கக்கத் துவங்கிட்டுது.. வெளிச்சம் வருது பார்த்தீங்களா?" என்று சொல்லுகின்ற ஐயாச்சியின் கூற்றை நாம் நம்பினோமா இல்லையா என்று சொல்ல முடியவில்லை. சிறிய வயதில் அதற்கு விளக்கம் தேட முற்படவில்லை என்பது உண்மை. காலப் போக்கில் நாங்கள் வளர வளர - விஞ்ஞான விளக்கங்கள் கிடைத்தபோது - ஐயாச்சியின் இந்த விளக்கங்களை நாங்கள் நகைச்சுவையோடு ரசித்தோமே தவிர - விஞ்ஞான ரீதியான விளக்கம் எதுவும் அவரிடம் கூற முற்படவில்லை.

நான் இங்கே முக்கியமாகக் குறிப்பிட வந்ததே, ஐயாச்சியின் இந்த மனநிலை தொடர்பான ஒரு முக்கிய விடயம் பற்றித் தான்.

1969 ஜூலை மாதத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த நீல் ஆம்ஸ்ட்ராங் (Neil Armstrong) என்ற விண்வெளி வீரன் - சந்திரனில் கால் பதித்த வரலாற்றுச் செய்தி எம் எல்லோர்க்கும் தெரியும். வானொலி, பத்திரிகைகள் என, அனைத்திலும் இச்செய்தி பரபரப்போடும் மகிழ்ச்சியோடும் வெளியிடப்பட்டது. மனித குலம் பூரிப்படைந்த ஒரு விஞ்ஞான வெற்றி அது.

எனது கணவர் உட்பட, நானும் எனது அண்ணா பிள்ளைகளும் இச்செய்தியைத் தெரிவிப்பதற்காக ஐயாச்சியைச் சூழ்ந்து கொண்டோம் (நான் ஐயாச்சி என்று கூப்பிட, எல்லோரும் அவரை ஐயாச்சி என்றே கூப்பிட்டார்கள்).

" ஐயாச்சி! உங்களுக்கு விஷயம் தெரியுமா? நீல் ஆம்ஸ்ட்ராங் என்பவர் சந்திரனில போய் இறங்கிட்டார். முதல் முதல் சந்திரனில கால் பதிச்ச பெருமை அவருக்குத் தான். "

ஐயாச்சி தலையை நிமிர்த்தி - எங்களையெல்லாம் ஒரு விநோதப் பார்வை பார்த்தார்.

" என்ன பேய்க்கதை பேசுறீங்க? இதை யார் உங்களுக்குச் சொன்னது?"

" பேப்பரிலை, ரேடியோவிலை எல்லாம் இதே செய்திதான்.. பேப்பரிலை படங்களும் வந்திருக்கு ஐயாச்சி "

" இதுஎன்ன கிலிசு கெட்ட கதையாய் இருக்கு! அவர் (சந்திரன்) நாங்கள் கும்பிடுற கடவுள்.அவரிலை ஒரு மனிதன் கால் வைக்க முடியுமா? உங்களைப் பேய்க்காட்ட இதெல்லாம் சொல்லுறாங்கள்.அப்படியொன்றும் இருக்காது..பேசாமை இருங்கோ! "

" இல்லை ஐயாச்சி.. உண்மைதான்.. சந்திரனிலை இருந்து கொஞ்சம் மண், சின்னச் சின்னப் பாறைத் துண்டுகள் எல்லாம் நீல் ஆம்ஸ்ட்ராங் கொண்டு வந்திருக்கிறாராம்.. "

முகத்தில் கோபம் பரிணமிக்க, ஐயாச்சியின் குரல் இப்போது உயர்கிறது!

" கடவுளிலை போய் கால் வைச்சாங்களாம்.. அதுமட்டுமில்லாமை அவரிலை இருந்து மண்ணும் எடுத்துக்கொண்டு வந்தவையாம்.. சும்மா இருங்கோ.. உந்தப் பேய்க்காட்டை ஒருத்தரும் நம்ப வேண்டாம்.. சந்திரனைப் பற்றிய மகிமையைச் சொல்லுற ஒரு கதை சொல்லுறேன்.. கேளுங்கோ..

.. அப்பதான் உங்களுக்கு விளங்கும்.."

புராணக் கதை ஒன்றை ஐயாச்சி சொல்லத் துவங்க - நாங்கள் எல்லோரும் கப் சிப்! ஆளை ஆள் பார்த்து, சமிக்ஞையில் சிரித்தபடி கதையைக் கேட்டோம்.

இது தான் ஐயாச்சி!

ஆரம்பத்தில் குறிப்பிட்டபடி, இணைய தளத்தில் நான் பார்த்த காணொளி பற்றி இப்போ கூறிவிடுகின்றேன்.

சம காலத்தில் இயங்கி வருகின்ற ஒரு நகைக் கடைக்கான விளம்பரம் அது.

(காலஞ்சென்றவர்களான) நடிகையர் திலகம் சாவித்திரியும், அவரது கணவர் ஜெமினி கணேசனும் அந்த நகைக் கடைக்கு வந்திருக்கிறார்கள். சுற்றிவர - நகை களைப் பார்வையிடுகிறார்கள்.

" இது நல்லா இருக்கா? " என்று ஒரு நெக்லஸைக் காட்டி சாவித்திரி கேட்க - " நல்லா இருக்கு " என்று பதில் சொல்கிறார் ஜெமினி. விரும்பிய நகைகளை வாங்கிக் கொண்டு கடையிலிருந்து விடை பெறுகிறார்கள்.

தத்ரூபமாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் அந்தக் காணொளியின் கைவண்ணம் - முற்றிலுமாய் AI தொழில் நுட்பம் சார்ந்தது என்பது வெளிப்படை.

உண்மையில், அதைப் பார்த்தபோது எனக்குள் ஏற்பட்ட அளவற்ற ஆச்சரியம் காரணமாகவே - ஐயாச்சியை நான் நினைக்க வேண்டி ஏற்பட்டது.

அவர் இன்று உயிரோடு இருந்திருந்தால் - இந்தக் காணொளி பற்றி என்ன சொல்லியிருப்பார்?

கற்பனை செய்து பார்க்கின்றேன்..

சரியான வடிவம் இன்னமும் மனசுக்கு வரவில்லை.

உங்களில் யாருக்காவது ஏதும் கற்பனை தோன்றுகிறதா?

Comments இல் பதிவிடுங்கள். வரவேற்கிறோம்.

ஊற்றுக்கண்.