நேரம் இரவு ஒரு மணியைத் தொட்டுக்கொண்டிருந்தது. ஒரு மணி நேர overtime வேலை, வழமையான எனது வீடு திரும்பும் நேரத்தை இன்று தாமதமாக்கிவிட்டது.

இரண்டு நாளைக்கு முன் சமைத்துவைத்த சோறும் கோழிக்கறியும் குளிரூட்டியில் காத்திருக்கும். சூடாக்கி..... சாப்பிட்டு..... படுக்கையில் விழுந்தால் நாளை மதியம் 1 மணி வரை தூக்கம். எழுந்து முகம் கழுவி, ஏதாவதொன்றைக் கொறித்துக்கொண்டு வேலைக்கு ஓட்டம்.....!

வண்டியை நிறுத்திவிட்டு வாசல் கதவைத் திறந்தேன். எனக்கான அன்றைய கடிதங்கள் தரையில் கிடந்து வரவேற்றன. குனிந்து எடுத்தேன்.

ஓ..... அழகான கையெழுத்தில் எனது முகவரி எழுதப்பட்ட குமரனுடைய கடிதமும் அவற்றுள்!

வழமையாக – எனக்கு வரும் கடிதங்களை மேசையில் வைத்துவிட்டு, மறுநாள் நித்திரைவிட்டு எழும்பிய பிறகு படிப்பேன்.

இன்று – நண்பனுடைய கடிதம், நாளை வரைக்கும் காத்திருக்கும் பொறுமையை விரட்டிவிட்டது.

குளித்து..... உடை மாற்றி..... உணவைச் சூடாக்கிச் சாப்பிட்டுக் கொண்டே கடிதம் மீது பார்வையை ஓடவிட்டேன்.

அன்புள்ள ரவி,

நீ நலமுடன் இருப்பதை உனது கடிதம் சொல்லிற்று. அத்துடன் வந்த துண்டுப் பிரசுரமும் பார்த்தேன்.

குறு குறு கண்களுடன் மொழு மொழு அழகான (லண்டன்) பூனையின் படம்! பார்ப்பவர் மனசைக் கொள்ளை கொள்ளும் அழகுப் பிராணி. அந்தச் செல்லப் பூனை தொலைந்து போனமைக்கு (காணாமல் போய்விட்டது!) மனம் வருந்தி விளம்பரம் செய்திருக்கும் அதன் உரிமையாளர்களின் துயரம் செறிந்த வாசகங்கள்!

'மோனா' என்ற அவர்களுடைய செல்லப் பூனை காணாமல் போனதற்கு இப்படிஒரு துண்டுப் பிரசுரம் அடித்து, அந்தச் சுற்றாடல் முழுவதிலுமுள்ள ஒவ்வொரு வீட்டின் கதவிடுக்கு வழியாகவும் உள்ளே போட்டு, விடயத்தை, அல்லது - அவர்களைப் பொறுத்தவரை அந்தப் பேரிழப்பை - அனைவர் கவனத்துக்கும் கொண்டு வந்து, அது மீளக் கிடைக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன், அதைக் கண்டு பிடித்துத் தருபவர்களுக்குச் சன்மானம் வழங்கப்படும் என்று அறிவித்திருப்பதானது –

தொலைந்து போனது ஒரு பிராணியா அல்லது மனிதனா என்பதற்கப்பால் - அது ஒரு உயிரின் மீதான நேசத்தின் சாட்சி..... மனிதபிமானம் (உயிராபிமானம்) – என்றெல்லாம் நீ அதை உயர்வாக மதித்திருப்பாய்..... ஏன்? வேறு யாராக இருந்தாலும் கூட அப்படித்தான் நினைப்பார்கள்.....

ஆனால் நண்பா – என்னை மன்னித்துவிடு.

என்னால் அப்படி நினைக்க முடியவில்லை. காரணம் - உனக்கே புரியும். புரிய வேண்டும். ஆனாலும் நீ நிறையவே மாறிவிட்டாய் ரவி.

லண்டன் மாநகரம் தரக்கூடிய சௌகரியங்களும், உயிர்ப் பயமில்லாத அன்றாடங்களும் உன்னை இப்படி மாற்றியிருக்கலாம்.

அது தவறல்ல.

ஆனால், மீண்டும் மீண்டும்...... என்னை நீ வற்புறுத்திக் கேட்கும் ஒரே விஷயத்தை – எமது தாய் நிலத்திலிருந்து புறப்பட்டு நான் லண்டனுக்கு வரவேண்டும் என்ற உனது விருப்பத்தை - இந்த உனது கடிதமும் சுமந்து வந்திருக்கிறது. அந்த நிலைப்பாட்டுக்கு நான் வந்துவிட வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு லண்டனைப் பற்றி நிறையவே புகழ்ந்திருக்கிறாய்.

'ஒரு செல்லப்பிராணியின் உயிருக்குக்கூட மதிப்பளிக்கும் பூமி' என்று குறிப்பிட்டிருக்கிறாய்.

இருக்கலாம் ரவி, நடந்து முடிந்தவை..... கடந்து போனவை..... இன்னும் நடந்துகொண்டிருக்கும் அவற்றின் தொடர்ச்சி..... என எங்களுடைய தாய் நிலத்து உறவுகள் அனுபவித்த – அனுபவித்துக் கொண்டிருக்கிற – கொடுமைகள் எல்லாவற்றையும் முழுவதுமாய் அறிந்த உன்னால் இதைஎப்படியடா எழுத முடிந்தது? போதாக்குறைக்கு உனது விருப்பத்தை அல்லது கோரிக்கையை வலுப்படுத்தும் சாட்சியாக இந்தத் துண்டுப் பிரசுரம்!

காணாமற் போய் விட்ட 'மோனா' என்ற செல்லப் பூனை பற்றி.

இங்கே எங்கள் தாய் மண்ணில், நடந்து முடிந்த கொடிய போருக்கு முன்னரும் பின்னரும் காணாமல் போனவர்களின் பெயர்ப் பட்டியலின் பெருநீளம் நீ அறியாததா?

இல்லை என்று மட்டும் சொல்லி விடாதே. கடைசியாய், இங்கே - நீயும் நானும் சந்தித்துக்கொண்ட பொழுதுகளிலெல்லாம் நாம் பகிர்ந்து கொண்ட விடயங்கள், சாதாரணமாய் இரண்டு வாலிப நண்பர்களுக்கிடையானவையாக இல்லாமல், எமது மண்மீது நாம் கொண்ட அக்கறையின்பாற்பட்டவையாகவே இருந்தன.

அதையும் நீ அறிவாய். எல்லாம் தெரியும் உனக்கு. ஆனாலும் எல்லாம் மறந்தவன் போல, அல்லது எல்லாம் மறந்தவனாய், இந்த மண்ணை விட்டு வரும்படி என்னை வற்புறுத்துகிறாய்.

வேண்டாம் நண்பனே.

நான் மாற மாட்டேன். எனது மறுப்புக்குக் காரணம் கேட்டிருந்தாய். விரிவாக எழுதுகிறேன் – அடுத்த கடிதத்தில்.

இன்று - இனி நேரமில்லை. மணி பிற்பகல் மூன்றாகிவிட்டது. எனது பையனைப் பள்ளிக்கூடத்திலிருந்து கூட்டிவரவேண்டும்.

அன்புடன்,

குமரன்.

'பையனா......? குமரன் எப்போது திருமணம் செய்து கொண்டான்? யாரை......? எனக்குக் கூடச் சொல்லாமல்....?'

ஒன்றன் பின் ஒன்றாகக் கேள்விகள் மனதைக் குடைய எனது தூக்கத்துக்கு அன்று விடுமுறை.

◆◆◆◆◆

தொடக்கப் பள்ளியிலிருந்தே குமரனும் நானும் நண்பர்கள். ஒரே ஊர். இரண்டு பேருடைய வீடுகளும் ஒரே ஒழுங்கையில்.

கிளித்தட்டு, எட்டுக் கோடு, கெந்திப் பிடித்தல், வாரோட்டம், மாபிள் அடித்தல் என எல்லா விளையாட்டுகளும் அத்துபடி. A/L வரைக்கும் ஒன்றாகப் படித்து, ஒன்றாகத் தேர்வெழுதி, ஒன்றாகத் தேர்ச்சி பெற்று.....

வேலையில்லாப் பட்டதாரிகளாய் ஒன்றாய் அலைந்த போது எங்கள் நட்பு மேலும் இறுக்கமானது.

ஊர்ப் பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக ஒரு பெரிய ஆலமரம். மாலை வேளைகளில் அந்த நிழலில் உட்கார்ந்து மணிக்கணக்காகப் பேசுவோம். வாசித்த புத்தகங்கள்..... தொடர் கதைகள்..... பார்த்த திரைப்படங்கள்..... நடிக நடிகையர்.... என்பவற்றிலிருந்து வேலையில்லாப் பட்டதாரிகள் சங்கம் ஆரம்பிப்பது வரை – எங்கள் உரையாடல்கள் எல்லாப் பரப்புகளிலும் பயணித்து மீளும்.

நாளாக..... நாளாக...... இவையெல்லாம் அர்த்த மற்ற பேச்சுக்கள் என்று நினைக்குமளவுக்கு எங்கள் தாய் நிலத்தில் விரும்பத்தகாத துயர் தரும் மாற்றங்கள் நிகழத்தொடங்கின.

"என்னடாப்பா.....? இண்டைக்கு பொம்மர் (Bomber) அடியிலை சரியான சேதமாம்....."

"கேள்விப்பட்டேன்.... ரெண்டு குழந்தைகள் உட்பட எட்டுப்பேர் ஸ்பாட் (Spot) இலேயே சரியாம்..... கனபேருக்குக் காயமாம்...."

"பாத்தாதத்துக்கு..... காயப்பட்டவையை ஆஸ்பத்திரிக்கு ஏத்திக்கொண்டுபோன வாகனத்தைக் கலைச்சுக் கலைச்சு ஹெலிகொப்டர் அடிச்சுக் கொண்டேயிருந்ததாம்....."

"நாலைஞ்சு வீடுகள்..... வாசிக சாலை எல்லாமே தரை மட்டமாம்...."

"இதையெல்லாம் எங்கை போய்ச் சொல்லுறது.....? அல்லது ஆரிட்டைச் சொல்லுறது.....? நியாயம் கேட்க ஆருமே இல்லை....."

"சுதந்திரம் எண்ட பேரிலை (48ஆம் ஆண்டு) வெள்ளைக்காரன் போட்டிட்டுப் போன நச்சு விதை வளர்ந்து..... விருட்சமாகி..... தமிழனை

அழிச்சுக்கொண்டிருக்கு..... வேறையென்ன சொல்லமுடியும்.....?"

அண்டைக்கொரு நாள்....

"விடியப்பறம் 5 மணிக்கு ஊரடங்கு அறிவிச்சுப்போட்டு ஆமி சுத்திவளைக்கேக்கை, இனி நான் உன்னைப் பார்ப்பனோ..... பார்க்க மாட்டனோ.... எண்டுதான் நினைச்சன் குமரன்..... அப்படியே முழுப்பெடியளையும் அள்ளிக்கொண்டு போனார்கள்...."

"நான் உன்னைக் கண்டனான் மச்சான்..... ஆனா..... தெரிஞ்சமாதிரியே காட்டிக்கொள்ளேல்லை....."

"அது சரிதான் அதைச் சாட்டாக வைச்சே ஆமிகாரன் எங்களைச் 'கொட்டியா' (புலி) எண்டு சொல்லி இன்னும் கரைச்சல் தருவான்....."

"இப்ப மட்டுமேன்ன..... அவங்களைப் பொறுத்த வரையிலை எல்லாத் தமிழ்ப் பெடி பெட்டையும் கொட்டியா தானே? ஏதோ..... இண்டைக்கு எங்கடை நல்ல காலம்..... நாள் முழுக்க வெய்யில்லை காஞ்சு நிக்க வைச்சு அதோடை விட்டுட்டாங்கள்..... ஆனா..... கொஞ்சப் பெடியளை விடேல்லை..... ஏத்திக் கொண்டு போட்டாங்கள்....."

"ஓம்டாப்பா..... அதாலைதான் என்னை எப்படியாவது வெளிநாட்டுக்கு அனுப்பிவிடவேணுமெண்டு அம்மாவும் அப்பாவும் பிடிவாதமாயிருக்கினம்....."

விரும்பியோ விரும்பாமலோ நான் லண்டன் வந்து சேர்ந்ததும், குமரன் தாய் நிலத்திலேயே - படித்த படிப்புக்கு ஏற்றதாய் இல்லா விட்டாலும் ஏதோ ஒரு வேலை தேடிக்கொண்டதும் பழைய கதை.

குமரனுடைய அடுத்த கடிதம் எப்போது வரும்?

நீண்ட காத்திருத்தலின் பிறகு அவனிடமிருந்து அந்தக் குறுஞ்செய்தி வந்தது.

'கடிதம் போட்டிருக்கிறேன்!'

அப்பாடா! அவனைத் தொலைபேசியில் தொடர்பு கொள்ளப் பல தடவை முயன்றும் தொடர்பு கிடைக்காமல் போய்விட்ட நிலையில் இந்தக் குறுஞ்செய்தி. குறைந்தது இன்னும் 2 வாரங்களாவது காத்திருக்க வேண்டும்.

அன்றைய தினம் வேலைக்கு ஓய்வு.

வீட்டிலிருந்தபோது கதவிடுக்கின் வழியாக விழுந்தது அவனுடைய கடிதம். எனது கேள்விகளுக்கெல்லாம் பதில் சுமந்து வந்திருந்த மடல்.

பிரித்தேன்..... படித்தேன்..... அது வெறும் கடிதமல்ல.....

ஒரு இனத்தின் துயர்படிந்த வரலாற்றின் ஒரு அணுத்துளி பரிமாணம்.

◆◆◆◆◆

'......எங்கே போனார்கள்......? என்ன ஆனார்கள்......? உயிருடன் இருக்கிறார்களா இல்லையா? மீண்டும் வருவார்களா மாட்டார்களா?'

என்பன போன்ற - காணாமல் போன தங்கள் உறவுகள் பற்றிய இன்னும் பல கேள்விகளுக்கு விடை தெரியாமல், ஏதாவது விடை கிடைக்குமா என்ற ஏக்கத்தோடு அங்கே குவிந்திருந்தது மக்கள் வெள்ளம்.

அது - சிங்கள அரசுக்கெதிரான மறியல் போராட்டம்.

கண்ணீருடன் கலந்த - நெஞ்சை உருக்கும் ஓலங்கள் வானைப்பிளந்தன. அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, மாமன், மாமி, கணவன், மனைவி, மகன், மகள்..... என்று நீண்டு கொண்டே போன 'காணாமல் போனவர்களின்' பட்டியலின் வயது - பல வருடங்கள்.

'எனது பிள்ளை எங்கே.....?'

'எனது கணவர் எங்கே.....?'

'எனக்கு என் அப்பா வேண்டும்......'

'வெறி பிடித்த சிங்கள அரசே! எங்கே எங்கள் உறவுகள்......?'

'என் ஒரே பிள்ளைக்கு என்ன நடந்தது? சிங்கள ராணுவமே..... கொண்டு வா என் மகனை......'

'என்ன செய்தாய் என் அண்ணனை?'

'கொலை வெறி ராணுவமே! எங்கே புதைத்தாய் என் கணவரை......?'

தூக்கிப் பிடித்த பதாகைகள்! ஏக்கம் படிந்த கூக்குரல்கள்! நியாயம் கேட்கும் ஆவேசம்! நீதி கேட்கும் தார்மீகக் கோபம்!

துயரம் படிந்த அன்றாடங்களின் பாரத்தைச் சுமக்க முடியாத ஒரு மக்கள் கூட்டத்தின் உணர்ச்சிக் கொந்தளிப்பில் அந்த இடம் அதிர்ந்துகொண்டிருந்தது.

"அப்பா..... என்ரை அப்பா.....! என்னை விட்டுட்டு எங்கை போனீங்களப்பா.....? திரும்பி வாங்கோ..... உடனை வாங்கோ..... எனக்கு நீங்கள் வேணுமப்பா..... என்ரை அப்பா எனக்கு வேணும்! என்ரை அப்பா எனக்கு வேணும்..... என்ரை....."

திரும்பத் திரும்ப இதே வார்த்தைகளையே உரத்துச் சொல்லியபடி கதறியழுதுகொண்டிருந்த ஒரு சிறுவன் மீது பலருடைய கவனமும் குவிந்தது.

நெஞ்சைப் பிழிவதாய் இருந்த அந்தச் சிறுவனுடைய கதறலில் மனம் கலங்கிப்போய் – நான் அருகில் போனேன்.

"தம்பீ..... அழாதை ராசா..... உன்ரை அப்பா எங்கை.....? ஆரோடை வந்திருக்கிறாய்.....?" – சிறுவன் பதில் சொல்வதற்கு முன்பே அருகிலிருந்த மூதாட்டி ஓ வென்று கதறியழுதபடி சொன்னா:

"ஐயோ.....! நான் என்னத்தைச் சொல்லுவன் தம்பீ.... அவன் என்ரை பேரன்..... என்ரை ஒரே மகன் பெத்த ஒரே குஞ்சு....."

"அம்மா..... அழாதேங்கோ..... உங்கடை பிள்ளைக்கு என்ன நடந்தது.....?"

"கடைக்குப் போட்டு வாறனெண்டு போன என்ரை பிள்ளை திரும்பி வரேல்லை..... என்ன நடந்ததெண்டும் தெரியேல்லை..... வருவான், வருவானெண்டு வயித்திலை நெருப்பைக் கட்டிக் கொண்டு ஒவ்வொரு நாளும் காத்துக்கிடந்ததுதான் மிச்சம்..... ரெண்டு வருசமாச்சு ஐயோ.....! நான் பெத்தவன் திரும்பி வரவேமில்லை..... இந்தக் குஞ்சை என்னட்டை விட்டுட்டுப் போட்டானே.....!" குலுங்கிக் குலுங்கி அழுதபடி இரண்டு கைகளையும் நீட்டித் துழாவிப் பேரனைத் தேடினா.

நான் அதிர்ந்து போனேன்.

அப்போதுதான் அதைக் கவனித்தேன். அவளுக்கு இரண்டு கண்களும் தெரியாது. 'கடவுளே!' பையனை அணைத்தபடி அவனருகிலமர்ந்து எல்லா விவரமும் அறிந்தபோது என் இதயப் பரப்பெங்கும் ரத்தம் கசிந்தது.

பையனுடைய தாய் விமானக் குண்டு வீச்சில் உடல்சிதறிப் பலியாகியது.... அதன் பிறகு இந்தப் பையனுடையதும், கண் தெரியாத தன் தாயினதும் உயிர்த்துடிப்பாக அவனது அப்பாவே இயங்கியதும், அப்பா காணாமல் போனது..... உறவினர்கள் என்று சொல்லிக்கொள்ள எவருமே இல்லாத நிலையில் இவர்களது ஜீவனோபாயமே கேள்விக்குறியானது, நோயுற்ற பாட்டிக்குப் பார்வையில்லாத காரணத்தால் இவன் பள்ளிப் படிப்பை நிறுத்தியது.... தந்தை பற்றிய ஏக்கத்தால் சிறுவனும்... மகன் பற்றிய பதைப்பில் மூதாட்டியும் வாழ்ந்து கொண்டிருக்கும் நிகழ்காலம் – என எல்லாவற்றையும் தெரிந்து கொண்டபோதுதான் நான் அந்த முடிவுக்கு வந்தேன்.

"உன்ரை பேரென்ன தம்பி?"

"ரமணன்"

"ஓ..... நல்ல பெயர்.... ரமணன்.... உன்ரை அப்பா திரும்பி வந்திட்டாரெண்டு வைச்சுக்கொள்"

சட்டென்று அவனுடைய கண்களில் பளிச்சிட்ட ஒளிமீது மறுபடியும் இருள் படிந்தது.

"அவர் வரமாட்டார்....." கவலையோடு சொன்னான்.

"வருவார் ரமணன்..... உன்ரை அப்பா வருவார், நம்பிக்கையோடை இருப்பம்...." (எனது வார்த்தைகளில் எனக்கே நம்பிக்கையில்லாதவனாக அந்தச் சிறுவனுடைய திருப்திக்காக இப்படிச் சொன்னேன்)

"உன்ரை அப்பா வாற வரைக்கும் நான் வந்து உங்களோடை இருக்கட்டா?"

"எங்கடை வீட்டிலை எங்களோடேயே இருப்பீங்களா மாமா"

"ம்...... உங்களோடேயே இருப்பன்.... சரியா?"

புதிதாய்ப் பூத்த பூவின் மலர்ச்சி அந்தக் கண்களில் தெரிந்தது.

"ஆனா..... நீ ஒண்டு செய்யவேணும்....."

'என்ன?' என்பது போல என்னை ஏறிட்டுப் பார்த்தான்.

"என்னை அப்பா எண்டு கூப்பிடவேணும்..... கூப்பிடுவியா?"

"கூப்பிடுவன்" – மகிழ்ச்சியோடு சொன்னான்.

"எங்கை பாப்பம்..... ஒருக்கா என்னை அப்பா எண்டு கூப்பிடு....."

"அ.....ப்.....பா....." தயங்கியபடி ஒரு தடவை அப்பா என்று அழைத்தவன், "அப்பா....." "அப்பா....." என்று சொல்லிக்கொண்டு என் கழுத்தைச் சுற்றித் தன் கைகளைப் போட்டு இறுகக் கட்டிக் கொண்டான். அந்தச் சிறுவனை அணைத்து அவன் கண்ணீரை என் கைகளால் துடைத்துவிட்ட அந்த நிமிடத்தில் – துயரத்தை மட்டும் சுவாசித்துக்கொண்டிருந்த ஒரு சிறுவனுடைய அப்பாவாய் – அவனுடைய புது மூச்சாய் – நான் பிறந்தேன்.

நடந்து முடிந்த இன அழிப்பின் சாட்சிகளாய் இன்று – இங்கே நடைப்பிணங்களாய் வாழ்ந்துகொண்டிருக்கும் எமது உறவுகளின் துயரங்களை மட்டுமே சுமந்து நிற்கும் இந்த மண்ணைப் பிரிந்து வேறெங்கு செல்வதையும் நான் விரும்பவில்லை. இந்த வாழ்க்கை எனக்குள் ஏற்படுத்துகின்ற ஆத்ம திருப்தி – வேறெங்கே போனாலும் எனக்குக் கிடைக்கப் போவதில்லை.

அன்புடன்,

குமரன்.

( தேசத்தின்குரல் மின்னிதழில் வெளியானது)