2020 மார்ச்.
ஆயிரங்களில் உயிர் தின்றுகொண்டிருந்த நச்சுயிரித் தாக்கம் (Corona Virus) உலகையே உலுக்கிக் கொண்டிருந்தது.
நவீன தொழில் நுட்ப - விஞ்ஞான கர்வங்கள் யாவும் மண்கவ்விக்கிடந்தன.
கரீபியன் கடல்.
'வானமா..... கடலா?' பட்டிமன்றம் நிகழ்த்தியபடி பரந்து விரிந்து எல்லையற்றுக் கிடக்கிறது அந்த நீல நிற ஆச்சரியம். அம்மா அறியாத செல்லத் திருடலுக்காய்ச் சத்தமின்றி முதுகு வளைத்து மெல்ல நகரும் குழந்தைகளாய் அலைகள். மறைந்திருந்து ரசிக்கும் அம்மாவாய்க் கடல். சாந்தமாகிக் கிடக்கிறது.
கடல் முதுகில் அந்தக் கப்பல். 'பிரேமர் (Braemar) என்று கொட்டை எழுத்துகளில் பெயர் பொறிக்கப்பட்ட கடல் உலாக் கப்பல். (cruise) பிரித்தானியாவுக்குச் சொந்தமானது.
சற்று முன் கப்பல் தலைவன் பயணிகளுக்கு அறிவிக்கிறான்
"எல்லா நாடுகளிலும் வேகமாகப் பரவிவருகின்ற 'கொரோனா' வைரஸ் தொற்று இந்தக் கப்பலின் பயணிகள் சிலரைத் தாக்கியிருக்கிறது. ஒரு பயணியிடமிருந்த தொற்று இருபத்திரண்டு பேருக்குப் பரவி, இப்போது நாற்பத்தைந்து பேரிடம். அவர்களில் சிலர் ஏறக்குறைய உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார்கள்"
பயணிகள் பதட்டமானார்கள்.
'எங்களுக்கும் தொற்றி விடுமோ?'
".....நாங்கள் மொத்தமாய் 1252 பயணிகள்..... 150 ஊழியர்கள், இந்த வைரசுக்கான எந்த மருந்தும் நம்மிடம் இல்லை. நோய்த் தொற்று மேலும் பரவுமுன் உடனடியாக ஏதாவதொரு கரையைச் சென்றடைய வேண்டும்....."
இப்போது – 'கரை தேடி ஓடும் அவசரம்' அலைகளிடமிருந்து முழுவதுமாய் பயணிகளிடம் கடத்தப்பட - விழிகளின் வழி பயம்.
கடலின் கொந்தளிப்பு உள்ளே கருக்கொள்ள.
இதயத் துடிப்புகள் வேகம் கொண்டன. சுற்றுலாக்கனவுகள் சட் என்று சிதைந்து மாயமாகிப் போக -
பயம்..... பதட்டம்..... தவிப்பு..... அவசரம்..... கோபம்.....
ஜெட் வேகத்தில் கேள்வி அம்புகள் கேப்டனை நோக்கிப் படையெடுத்தன!
"நாங்கள் இப்பொழுது எந்த இடத்தில் நிற்கிறோம்.....?"
"புறப்பட்டு வந்த துறைமுகத்துக்கே கப்பலைத் திரும்பச் செலுத்துங்கள்!"
"எதுவுமே செய்யாமல் இங்கே வந்து நின்று ஏன் பிரசங்கம் வைக்கிறீர்கள் கேப்டன் அவர்களே.....?"
"நோயினால் அவதிப்படும் பயணிகளைப் பற்றி எடுத்துச் சொன்னால் ஏதாவதொரு நாடு உதவி செய்யாதா என்ன.....?"
"குறைந்த பட்சம் பிரித்தானியாவை நோக்கியாவது கப்பலைச் செலுத்துங்கள்..... இது பிரித்தானியக் கப்பல் தானே.....?"
"தயவு செய்து ஏதாவது செய்யுங்கள் கேப்டன்....."
குழப்பத்திலிருந்த கேப்டன் மீண்டும் பேசினான். எல்லாக் கேள்விகளுக்குமான பதில்.
"இந்தக் கப்பல் தற்சமயம் கரீபியன் கடலில் நிற்கிறது..... புறப்பட்டு வந்த - 'போர்ட்டோ ரிக்கோ' - துறைமுக அதிகாரிகளிடம் நிலைமை சொல்லி மீண்டும் அங்கே செல்லும் அனுமதி கேட்டேன். கொரோனா தொற்றுக்குப் பயப்படுகிறார்கள். கரீபியன் துறைமுக அதிகாரிகளின் எதிர்மறை நிலைப்பாடு, ஏதாவதொரு கரீபியன் தீவில் கரை சேரும் சாத்தியத்தையும் இல்லாமல் ஆக்கிவிட்டது..... அமெரிக்காவுக்கு அருகில் அதன் கடல் எல்லை மாகாணங்கள் ஒவ்வொன்றிடமும் கருணை மனுச் செய்தேன். மன்றாட்டம் - மறுக்கப்பட்டது. எல்லை மாகாணங்களே தொல்லை என நிராகரிக்க - அமெரிக்கா மட்டும் ஏற்றுக்கொள்ளுமா என்ன?"
"ஐயோ.....! இதென்ன கொடுமை? எங்களுக்கும் நோய்த் தொற்று ஏற்பட்டு இந்தக் கடலுக்குள்ளேயே வாழ்க்கை முடியப்போகிறதா? .....இங்கிருந்து மீள்வதற்கு வேறெந்த வழியும் இல்லையா.....? ஆண்டவரே.....! எம்மீது கருணை காட்டும்....."
".....இந்த நோய்த்தொற்றின் தீவிரம் கப்பலில் எல்லோரையும் பாதித்து விடக்கூடாது என்ற கவலையோடுதான் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக நம்பிக்கையோடு எல்லைகளைச் சுற்றி வந்தேன். பார்படோஸ்..... பனாமா..... டொமினிக்கான ரிபப்ளிக்..... எந்தத் துறைமுகமும் தன் சொந்தக் கதவு திறக்கவில்லை....."
"இது பிரித்தானியக் கப்பல் தானே? அங்கேயே கப்பலைச் செலுத்துங்கள். எங்களை அங்கேயே கொண்டு போய் இறக்கிவிடுங்கள்"
"புகலிடம் தேடி அலைந்ததில் எரிபொருள் வற்றிவிட்டது. பிரித்தானியாவுக்குப் பயணிக்கும் அளவுக்குக் கப்பலில் இப்போது எரிபொருள் இல்லை..... அது கூட ஒரு பிரச்சினையில்லை..... அருகிலுள்ள ஏதாவதொரு நாட்டில் நிரப்பிக்கொள்ள முடியும்..... ஆனால்.....?"
"என்ன? ஏன் தயங்குகிறீர்கள் கேப்டன்.....? வேறென்ன பிரச்சினை உங்களுக்கு?"
"......................."
"ஏன் பேசாமலிருக்கிறீர்கள்.....? என்னதான் உங்கள் பிரச்சினை?" குரல்கள் பொறுமையின்றி ஒலித்தன.
"......................."
"நடுச்கடலில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறோம்..... தயவு செய்து மௌனம் கலைத்துப் பேசுங்கள் கேப்டன்!"
"சொல்லுங்கள்.....! என்ன பிரச்சினை.....?"
"சொந்த நாட்டுக் கப்பலை அந்த நாட்டுக்கே திருப்பி அழைக்கும் எந்த முயற்சியும் இதுவரை பிரித்தானியாவால் எடுக்கப்படவில்லை. அதற்குரிய எந்த சமிக்ஞையும் எனக்குக் கிடைக்கவுமில்லை. இது துரதிருஷ்டவசமானது....." - விரக்தியோடு வெளி வந்தன கேப்டனுடைய வார்த்தைகள்.
"என்ன.....? என்ன சொல்கிறீர்கள்.....? இது உண்மைதானா?" சத்தமாய் ஒலித்தன பல குரல்கள்.
'ம்' என்பது போலத் தலையை மட்டும் ஆட்டினான். கப்பலின் தலைவன்.
அதிர்ந்து போனார்கள்.
"அதெப்படி நியாயமாகும்.....?"
"ஒரு நாடு..... அந்த நாட்டின் கப்பல் நடுக்கடலில் தந்தளிக்கிறது..... அதைக் கரை சேர்க்கும் தார்மீகக் கடமையைக் கூடவா அது புறக்கணிக்க முடியும்.....?”
சாவு நிச்சயமாகி விட்டது.
கொரோனா தொற்றினாலும் சாவு. தொற்றாவிடினும் சாவு.
சாண் என்ன? முழம் என்ன?
உணவு பிடிக்கவில்லை... உறக்கம் வரவில்லை... வார்த்தைகள் தொண்டைக்குள் சிக்குப்பட்டு...
கடல் உலாக் கப்பலில் இப்போது கனத்த மௌனம்.
துவண்டுபோய்க் கிடந்த வெள்ளைத் தம்பதிக்கு முன் அவள் தெரிந்தாள். கறுப்பினப் பெண். கைகளில் இரண்டு கோப்பை ஆவி பறக்கும் தேநீர்.
இவளா.....?
Hello..... have this tea please..... God is always there for us..... Let's hope for the good.....
my dear friends..... relax....."
("ஹலோ..... தயவு செய்து இந்தத் தேநீரைக் குடியுங்கள்..... கடவுள் என்றும் நமக்காக இருக்கிறார்..... நல்லது நடக்குமென்று நம்புவோம்..... என் அன்பானவர்களே.....! அமைதி பெறுங்கள்")
தேநீரை வைத்துவிட்டுப் போய்விட்டாள்.
கப்பலின் சக பயணியான அவளுக்காக ஒரு நாளின் ஒரு பொழுதிலேனும் ஒரு 'ஹலோவை' அல்லது குறைந்தபட்சம் ஒரு மெல்லிய புன்னகையை இவர்கள் பரிசளித்ததில்லை.
'அந்தப் பெண்ணா?'
சாவுக்கு அருகில் நின்றபோது சத்தியம் தெரிந்தது.
கறுப்பும் வெள்ளையும் - தோலின் நிறம் தாண்டி, எல்லோரும் மனிதர்கள்.
‘பிள்ளையாரே! முருகா! சிவ சிவா.....! சக்தீ..... பராசக்தீ! என்ன நடக்கப் போகுது.....? இதென்ன சோதனை?' மனசுக்குள் முனகியபடி படுக்கையில் கிடக்கிறா அம்மா.
"அம்மா.....!"
யார்? - இமைகள் திறந்து பார்க்கிறா. ஊரில் அம்மாவுக்கு அயல் வீட்டுப் பெண்.
"என்னம்மா..... பிள்ளையள் பேரப்பிள்ளையள் பற்றின யோசனையோ?"
"வா பிள்ளை..... வேறே என்னத்தை யோசிக்கிறது.....? நான் எல்லாம் வெளிக்கிட்டிருக்கக்கூடாது..... இந்த அறுபது வயசிலை தனியப் போய் எப்படியம்மா சமாளிப்பியள்?' எண்டு மகன் கேட்டவன்..... தெரிஞ்ச சனம் கூட வருகினம் எண்ட துணிவிலை வந்திட்டேன்..... இப்ப என்ரை பிள்ளைகளைப் பார்க்காமலேயே இந்தக் கடலுக்குக்கை சாகப்போறான்....."
அருவியானது அம்மாவின் கண்ணீர்.
"என்னம்மா இது? எங்களுக்கு ஆறுதல் சொல்ல வேண்டிய நீங்களே அழுதால் எப்படி.....? நல்லதே நடக்கும்..... எங்களுக்கு மேலே ஒருத்தன் இருக்கிறதை நம்புறியள் தானே?"
"ம்....."
"கும்பிடுங்கோ..... உயிர் உருகக் கும்பிடுங்கோ..... எங்கடை ஆயுள் சேலையை நீளம் செய்ய மீண்டும் ஒரு கண்ணன் வடிவில் கடவுள் வரலாம்..... அத்தனை பேருக்குமாய் சிலுவை சுமக்க மீண்டும் ஒரு கர்த்தர் வடிவில் கடவுள் வரலாம்..... 'யா அல்லாஹ்' அபயக் குரலுக்குப் பதில் கொடுக்க அந்த ஆண்டவன் வடிவில் கடவுள் வரலாம்.....
ஒவ்வொரு இரவுக்கும் ஒரு பகல் உண்டு அல்லவா....?
.....நம்பிக்கையோடை இருப்பம்....."
வாழ்தலின் பெருமையை உயர்த்திய அல்லது உணர்த்திய வைர வார்த்தைகள்.
அம்மா மனசுக்குள் ஆறுதல் படர்ந்தது.
'இவள் கூட எனக்கொரு பிள்ளைதான்..... நீ நல்லாயிருக்க வேணும் மகளே.....'
எதிர் காலம்..... அங்கே கனத்த இருள்.
தாலாட்டும் அலைகளால் அவ்வப்போது மெலிதாய் அசைந்து கொண்டும், அலைக்கழிக்கும் அலைகளால் நிலை தடுமாறியும் - கடலில் தவம் கிடக்கிறது உலா வந்த கப்பல், மெல்லிய கீற்றாகவேனும் எங்காவது ஒரு திசையிலிருந்து வரக்கூடிய நம்பிக்கை வெளிச்சத்தை யாசிக்கும் தவம்.
நோயுற்றுக் கிடந்தவர்கள் உயிர்வதையில் முனகிக்கொண்டிருந்தார்கள். எஞ்சியவர்கள் மரண பீதியில்
‘என்ன அநியாயம் இது?’
மொத்தப் பயணிகளில் அறுநூறு வரையிலானவர்கள் பிரித்தானிய வாசிகள்.
“தயவுசெய்து பொறுமையோடிருங்கள்..... நோயுற்றவர்கள் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். ஏனையோருக்கும் தொற்று ஏற்படும் அபாயம்..... மனித நேயமற்ற நாடுகளின் பாராமுகம்..... ஆதரவற்று நிற்கிறோம். கப்பலின் தலைவனாய் எனது முயற்சிகளை இடைவிடாமல் தொடர்வேன்..... எனினும் என் அன்பானவர்களே! எல்லோருமாய் ஆண்டவனை மன்றாடுவோம். தொற்று ஏற்படாமல் காக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கைவிடாதிருங்கள்....."
'கரை சேருவோமா? கடலோடு போவோமா?'
நம்பிக்கையின் கடைசி நூலிழையும் அறுந்து போனதா? சாவின் பயம் நெஞ்சங்களைக் கூறுபோட இடிந்து போனார்கள்.
"உலக நாடுகளே! மனசாட்சி இல்லையா உங்களிடம்"
"கடலில் நின்று தத்தளிக்கிறோம்..... யாராவது எங்களைக் காப்பாற்ற மாட்டார்களா?"
"ஓ.....! மனித ஜாதியே! எங்களின் சாவை வேடிக்கை பார்க்கத் தயாராகி விட்டாயா?"
"கடலே! சீற்றம் கொள்!
காற்றே! சுழன்று வீசி எம்மைக்கரை தள்ளு!
தரையில் சாகும் உரிமையாவது கிடைக்கட்டும்!"
காற்றில் கலந்து..... அலைகளோடு மிதந்து..... தேய்ந்து..... பின் ஒலியிழந்து போயின அந்த மனிதக் கதறல்கள்.
சாவு நிச்சயமாகிவிட்டது.
உள்ளே – நோயுற்றுக்கிடந்தவர்களின் உயிர்வதை முனகல்கள். எஞ்சியோர் மரண பீதியில்.
அடுத்து என்ன நடக்கப்போகிறது?
எதுவும் தெரியவில்லை.
இடைவிடாத கருணை மனுக்கள் மட்டும் கடல் தாண்டி. திசை தேடிப் பறந்தவண்ணம் இருந்தன.
சாவை நோக்கிய தூரம் வினாடிகளில் குறைந்துகொண்டே போனது.
திடீரென்று கேப்டன் மூளைக்குள் ஒரு பளிச் மின்னல்!
கியூபா.
கஸ்ரோவின் கனவு தேசம்!
1959 ஜனவரி புத்தாண்டு.
"பாட்டிஸ்டாவை (Batista) வென்று விட்டோம்!"
கெரில்லாப் போரின் வலிமை நிரூபித்த போர் அது. வழி நடத்திய படைத்தலைவனும் தளபதியும் மகிழ்ச்சிப் பூரிப்பில் கை குலுக்கி, ஒருவரையொருவர் கட்டியணைத்துக் கொண்டார்கள்.
பிடெல் காஸ்ட்ரோ - சே குவாரா.
கெரில்லா போர் நடத்திய தலைவன் கியூபாவின் தலைவன் ஆனார். அடுத்து வந்த தசாப்தத்தில் அங்கு உயிர்பெற்ற மருத்துவப் புரட்சி, காஸ்ட்ரோ - சே நண்பர்களின் கூட்டு முயற்சி.
இலவச மருத்துவக் கல்வி, இலவச மருத்துவ சேவை, காஸ்ட்ரோ கையில் எடுத்துக் கொண்ட பொது நல ஆயுதங்கள்.
எங்கெல்லாம் இந்த பூமி பேரிடர்களைச் சந்தித்ததோ அங்கெல்லாம் கியூப மருத்துவர்களின் பிரசன்னம்! மேலும் பல புதிய மருத்துவர்களைப் பிரசவிப்பதற்கென பயிற்சி கொடுக்கும் கியூப மருத்துவர்கள் வெவ்வேறு நாடுகளில் கருக்கொண்டார்கள்.
சுயநலத்துக்கு எதிரான போரில் காஸ்ட்ரோ என்ற மனிதன் குறிவைத்த ஒருமைப்பாட்டு அம்பு அது.
சிறிய நாடு..... வறிய நாடு. எப்படிச் சாதித்தது? எதிர்ப் பாணங்கள் சீறிப் பாய்ந்தன. நேரடியாகவும் மறைமுகமாகவும். உச்சக்கட்டமாய் –
காஸ்ட்ரோ மீது அமெரிக்கா மேற்கொண்ட 638 கொலை முயற்சிகள்!
அனைத்து வியூகங்களையும் நொறுக்கித் தூள் தூளாக்கி, வல்லரசின் சிம்ம சொப்பனமாய் நிமிர்ந்து எழுந்தது கியூபத் தலைமை!
பலம் - அந்த மனிதர் கண்ட கனவு.
கம்யூனிஸப் பேரன்பில் மனித நேயச் சாந்து குழைத்துக் கட்டியெழுப்பிய பொது நலக் கனவு.
மக்களின் குடிசைகளில் மருத்துவர்கள் வாழும் கனவு.
உலகில் எங்கெல்லாம் மருத்துவர்கள் இல்லையோ அங்கெல்லாம் மருத்துவ சேவை செய்யும் கியூபக் கனவு.
'கனவு சுமந்த தலைவன் வழி வந்த தேசம் ஒருபோதும் தட்டிக் கழிக்காது.....'
புது நம்பிக்கை உயிர் கொண்டது. கேப்டன் மனசில்.
2020 மார்ச் 18
அதிகாலை.
கியூபாவின் மாரியேல் (Mariel) துறைமுகம்.
அங்கே நங்கூரமிட்டு நிற்கிறது பிரேமர்..... (Braemar).
முதலுதவி சிகிச்சைப் பிரிவின் முன்னுரிமை, நோயாளிகளுக்கு வழங்கப்பட்டபின், பயணிகள் அனைவரையும் பாதுகாப்பாய் வெளியேற்றி அழைத்துச் செல்லும் பணி சுறுசுறுப்பாகிக் கொண்டிருந்தது.
கொரோனா பயம் கொஞ்சம் கொஞ்சமாய் விலக,
நகர்ந்து கொண்டிருந்த பயணிகள் முகங்களில் நம்பிக்கை சுடர்விட்டது. எதிரே தெரிந்த அத்தனை மனிதர்களும் மீட்பர்களாய்த் தெரிந்தார்கள்.
பார்வைகள் நன்றியைத் தூதனுப்பின.
கனவு தேசமே! உனக்கு நன்றி.
(2024 வெளிவந்த ‘கொரோனா- உலகை நிலைகுலைய வைத்த உயிர் கொல்லி’ புத்தகத்தில் வெளிவந்த சிறுகதை வடிவிலான ஒரு உண்மைச் சம்பவம்)

கருத்துகள்
இன்னும் கருத்து இல்லை.