மாவீரன் நெப்போலியனுடைய வீரம், திறமை, அயராத உழைப்பு இவை யாவும் இன்று உலகம் முழுவதுமே பேசப்படுகின்ற, போற்றப்படுகின்ற விடயங்கள். சாம்ராஜ்யத்தை ஆளுகின்ற சக்கரவர்த்தியாகியபோது, பெற்ற தாயின் பாசத்தை இழக்கின்ற சோகம் நெப்போலியனுக்கு ஏற்பட்டது. அது ஏன் என்பதைத் தெரிந்து கொள்கின்றபோது நெப்போலியனை விட, உண்மையான போற்றுதலுக்குரியவர் அவனைப் பெற்றெடுத்த தாய் தான் என்பது உணரப்படுகின்றது. அந்த உணர்வில் பிறந்ததுதான் இச் சிறுகதை.
"ஓ...! கோசிக்காவின் மலை மேடுகளே.....
ஏன் உறைந்து போய் நிற்கிறீர்கள்?
சல சலக்கின்ற நீரோடைகளே....
ஏன் நீங்கள் துள்ளிப் பாயவில்லை.?
பறந்து திரிகின்ற பட்சி ஜாலங்களே....
ஏன் மிரட்சியோடு சிறகடிக்கிறீர்கள்?
வேண்டாம்.... வேண்டவே வேண்டாம்.....
நீங்கள் நீங்களாகவே இருங்கள்.
இது எங்களுடைய மண்ணேதான்.
கோசிக்கா என்னும் எங்கள் தீவு தான்.
இதோ என் பின்னால் வருகிறானே.....
அவன் எங்கள் தீவை விடுவிப்பான்!"
இனிமையான தனது குரலில் இந்தப் பாடலைப் பாடியபடியே மலை மேட்டில், வளைந்து சென்ற பாதையில் இலத்தீசியா நடக்கிறாள். குளிருக்கு இதமான தடித்த சட்டை போட்டு, தலை முழுவதும் தொப்பியினுள் மறைந்துபோய் விட, முகம் மட்டும் வெளியே தெரிய ஆறு வயதுச் சிறுவன் ஒருவன் ஓடியும் நடந்தும் அவளைத் தொடர்ந்துகொண்டிருக்கிறான். சிறுவனுடைய கவனம் முழுவதும் அவனுடைய தாய் பாடிய பாடலிலேயே ஒருமித்துக்கிடந்தது.
பனி இன்னமும் நன்றாக விலகவில்லை. மலை முகடுகளிலிருந்து பனிப்புகார் மேலே கிளம்பிப் பஞ்சுப் பொதிகளெனக் காற்றோடு பயணம் செய்துகொண்டிருந்தது.
சிறுவனுடைய காலடியோசை அருகில் கேட்காது போகவே தாய் திரும்பிப் பார்க்கிறாள்.
"நெப்போலியன்..... விழுந்தாயா என்ன?"
"இல்லை அம்மா..... எழுந்துவிட்டேனே..... இதோ வருகிறேன்" பையன் விரைவாக ஓடி வந்து தாயுடன் சேர்ந்து கொள்கிறான்.
"அதுதானே பார்த்தேன்..... விழுந்தாலும் நீ எழுந்துவிடுவாய் என்பது எனக்குத் தெரியும். கெட்டிக்காரன். எங்கள் தீவை விடுவிக்க இருப்பவன் அல்லவா நீ? சரி..... சரி.... விரைவாக என்னோடு வா."
தாய் நடக்கிறாள்.
அவள் கைகளில் விறகுக்கட்டு. அன்றைய சமையலுக்கு அந்த விறகுகளே பயன்படப்போகின்றன.
சிறிது தூரம் தாண்டிய பிறகு தாயின் நடை தடைப்படுகிறது. நின்று, திரும்பி மகனைப் பார்க்கிறாள்.
"ஏனம்மா நின்று விட்டாய்? விறகு பாரமாக இருக்கிறதா?"
"இல்லை மகனே..... என் இதயம் தான் பாரமாய்க்கிடக்கிறது."
தாய் என்ன சொல்கிறாள்?
சிறுவனுக்குப் புரியவில்லை.
அண்ணாந்து அவளைப் பார்க்கிறான். பள பளக்கும் அந்தச் சிறிய கருவண்டுக் கண்களில் கேள்விக்குறி.
குனிந்து விறகுக்கட்டைக் கீழே வைத்துவிட்டு இலத்தீசியா மண்டியிட்டு அவன் முன் அமர்கிறாள். அந்தப் பிஞ்சு முகத்தைத் தன் கைகளில் ஏந்தியபடி,
"நெப்போலியன், உனது தாய் மண்ணை, இந்தக் கோசிக்காத் தீவை - நிச்சயம் நீ மீட்டெடுப்பாயல்லவா? ஆம் என்று சொல் மகனே"
தாய் கெஞ்சுகிறாள்.
சிறுவனுடைய இதயத்தில் புத்தம் புது ஊற்று ஒன்று சுரக்கிறது. மெல்ல மெல்ல உடலெங்கும் வருடிப் பிரவாகம் எடுக்கிறது. அதன் தொடுகையில் அவன் சிலிர்த்துப் போகிறான்.
ஒவ்வொரு நாளின் காலைப்பொழுதிலும் தாயுடன் சேர்ந்து நடக்கின்றபோது, அவளுடைய இனிமையான குரலில் வெளிப்பட்ட பாடல்களின் அர்த்தம் இப்போது புரிவது போலிருக்கிறது அவனுக்கு. தாய் அவனுக்குச் சொன்ன கவிதைகளின் உள்ளே. புதைந்து கிடந்த ஆவலும் ஆதங்கமும் கோசிக்காவின் மீட்புக்கானவையே என்பதை அந்தச் சின்னஞ் சிறிய இதயம் அர்த்தம் செய்து கொண்டது.
தாயின் கைகளைத் தனது கைகளால் இறுகப் பற்றியபடியே தலையசைப்பில் சம்மதம் தெரிவிக்கிறான்.
சிறுவனுடைய கண்களில் தெரிந்த புதிய ஒளி, 'நிச்சயம் செய்வேன்' என்று தாயிடம் சத்தியம் செய்தது. தாயின் விழிகளில் ஆனந்தக் கண்ணீர்.
மகனைக் கட்டியணைத்து ஆசையோடு முத்தமிட்டவள், எழுந்து நின்று தனது கையை உயர்த்தி ஆவேசத்துடன் உரக்கச் சொல்கிறாள்.
"கோசிக்கா மீட்கப்படும்!"
மலை முகடுகளும் அவள் குரலை எதிரொலி செய்கின்றன.
"கோசிக்கா மீட்கப்படும்!"
✦✦✦✦✦
சிறுவனுக்கு ஒன்பது வயதாகி விட்டது.
அவன் வயதையொத்த சிறுவர்களுடன் சேர்ந்து விளையாடுவதெல்லாம் மிகவும் குறைவு.
ஏதோ ஒரு சிந்தனையில் எந்த நேரமும் அமிழ்ந்து போய்க் காணப்படுவான். பள்ளிக்குப் போய் வருவான். இடையில் சில தினங்கள் போகாமலும் விட்டு விடுவான்.
ஒரு மாலைப்பொழுது
இவனுடைய பள்ளித்தோழர்கள் சிலர் மலையடிவாரத்தில் நின்று விளையாடிக்கொண்டிருந்தார்கள். இவன் மட்டும் ஒரு மலையின் இடுக்கில் அமர்ந்தபடி எதையோ தீவிரமாக யோசித்தபடி இருக்கிறான்.
ஒரு சிறுவன் அவ்விடத்துக்கு ஓடி வருகிறான். "நெப்போலியன், ஏன் இங்கே தனியாக உட்கார்ந்துகொண்டு ஏதோ எண்ணமிட்டுக்கொண்டிருக்கிறாய்? அப்படி என்னதான் சிந்தனை உனக்கு?"
"கோசிக்காவை எப்படி மீட்டெடுப்பது என்பதைப் பற்றித்தான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்."
✦✦✦✦✦
**கோசிக்காத் தீவு** பிரான்ஸ் நாட்டின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த காலம் அது.
அடிமைத்தனத்துக்கும் ஒடுக்கு முறைகளுக்கும் ஆளாகும் போதுதான் உண்மையான சுதந்திரத்தின் பெறுமதி மக்களால் உணரப்படுகிறது. சுதந்திரம் ஒன்றே மற்றதையும் விட - ஆம் உயிரையும் விட - உன்னதமானது என்பது தெளிவாகிறது. போராட்ட உணர்வு கருக்கொள்கிறது. புரட்சியாய்ப் பிறக்கிறது.
கோசிக்காவின் மக்கள் மனங்களிலும் விடுதலை உணர்வு தீவிரமாய் வளர்ந்தது.
இலத்தீசியா கோசிக்காவின் பிரஜை.
சாதாரண குடும்பம் அவளுடையது. அவளுடைய உணர்வுகள் உன்னதமானவையாய் இருந்தன. அடிமைத் தளையிலிருந்து தனது தாய் நிலம் விடுபட வேண்டும் என்ற எண்ணமே சதா சர்வகாலமும் அவளுடைய சிந்தனை, செயல் யாவற்றிலும் நீக்கமற நிறைந்திருந்தது.
தனது மகன் நெப்போலியன் தங்கள் தீவின் விடுதலையை வென்றெடுப்பான் என்று அவள் கனவு கண்டாள். கனவு நனவாகும் எனத் திடமாய் நம்பினாள். அப்படி நம்பவைத்தது எது என்பது அவளுக்கே தெரியாத ஒன்று.
சிறு வயதிலிருந்தே நெப்போலியனுடைய மனதில் வீர உணர்வுகளை ஊட்டினாள். மகனுக்காக அவள் பாடிய பாடல்கள், கூறிய கவிதைகள், விவரித்த கதைகள், இன்னும் இன்னும் எல்லாமே அந்தச் சிறுவனிடம் வீரத்தையும் வேகத்தையும் வளர்ப்பவையாக இருந்தன. அவன் சிறந்ததொரு போர்வீரனாக வேண்டும் என்ற தீவிரமான ஆவலில் பாரிஸ் நகரில் இராணுவக் கல்லூரி ஒன்றில் நெப்போலியனைக் கல்வி கற்பதற்காகச் சேர்த்தாள்.
தாயினிடத்தில் அளவற்ற பாசம் கொண்டிருந்த நெப்போலியன் அந்த அன்புத் தாயின் வழி காட்டலில், மனதில் வீர உணர்வுகளுடன் - நேர்மை, இரக்கம், தன்னம்பிக்கை, அயராது உழைக்கும் தன்மை இவற்றையெல்லாம் தனது பண்புகளாக வளர்த்துக் கொண்டான்.
அவனது ஆர்வமும் திறமையும் கல்லூரியிலேயே அவனை முதல் மாணவனாக்கின. மிகவும் திறமை வாய்ந்த, தேர்ச்சி பெற்ற இராணுவ வீரனாக நெப்போலியன் உருவானான்.
✦✦✦✦✦
பிரெஞ்சு மன்னனுடைய ஆட்சியை அவனுடைய நாட்டு மக்களே வெறுத்தார்கள். மன்னனுக்கெதிரான கலகங்கள் மக்களிடையே தோன்றின.
பாரிஸ் யுத்த களமாயிற்று.
பிரெஞ்சுப் படையோ சிதறிக் கிடந்தது.
கலகத்தை அடக்கும் வல்லமை நெப்போலியனிடமே உண்டு என்பதைப் புரிந்துகொண்ட நிர்வாகத்தினர் அவனை நாடினார்கள். நெப்போலியன் சேனைத்தலைவன் ஆனான்.
வெற்றிகள் தொடர்ந்தன.
நெப்போலியன் என்ற இருபத்தைந்து வயது இளைஞனின் படை நடத்தலில் பல நாடுகள் பிரான்ஸ் இடம் அடி பணிந்தன.
பாராட்டுதல்களும் பரிசுகளும் பிரிக்க முடியாதவையாய் அவனோடு இணைந்தன.
வீரம் வெற்றிகளைத் தேடிக் கொடுத்தது.....
வெற்றிகள் பதவிக்கு வழி வகுத்தன.....
'பதவியில் 'சுதந்திரம்' மறந்து போயிற்று.
✦✦✦✦✦
மாபெரும் பிரெஞ்சுப் புரட்சியைத் தொடர்ந்து, சில ஆண்டுகளில் பிரெஞ்சு மக்களின் மன்னனாக நெப்போலியன் முடிசூட்டிக்கொண்டான்.
ஆம்..... நெப்போலியன் இப்பொழுது பிரான்ஸ் நாட்டின் சக்கரவர்த்தி!
திறமை, வீரம், அயராத உழைப்பு, எல்லாவற்றிலும் மேலாகச் 'சந்தர்ப்பம்' ஒரு சாதாரண குடும்பத்து மனிதனைச் சக்கரவர்த்தியாக உயர்த்தியது.
போற்றப்பட வேண்டிய விஷயம் தான் இது.
அப்படியானால் கோசிக்காவின் விடுதலை?
அவனுடைய தாயின் கனவு?
தாய் மண்ணின் சுதந்திரம் பெறுவதற்காகவே வளர்க்கப்பட்ட அந்த இளைஞனுடைய வீரம் - அந்த மண்ணை அடிமைப்படுத்துகின்ற அதே ஆட்சி பீடத்தில் ஏற்றி வைத்த விந்தையை வரலாறு இந்த உலகம் உள்ளவரை புகழ்பாடும்....
ஆனால் இலத்தீசியா?
அந்தத் தாய் என்ன செய்தாள்?
சுதந்திரத்தை மறந்தவனைத் தனது மகன் என்று ஏற்க மறுத்தாள்.
தாயிடம் அளவற்ற பாசம் கொண்டிருந்த நெப்போலியன் அவளைப் பார்ப்பதற்கு ஆவலுடன் எடுத்த முயற்சிகள் யாவும் வீணாகிப் போயின.
தாயிடமிருந்து அவனுக்குக் கடிதங்கள் வருவது கூட நின்று போயிற்று.
வெற்றி மேல் வெற்றியீட்டிய அந்தச் சக்கரவர்த்திக்கு பெற்ற தாயின் பாசம் வெற்றி கொள்ள முடியாத விஷயமாகிய போது, தனது இதயத்தின் ஏக்கத்தையெல்லாம் எழுத்தில் வடித்து அம்மாவுக்கு ஒரு கடிதம் அனுப்பினான்.
பதில் கடிதம் வந்தது.
எப்படி வந்தது?
'அதிகாரமே எனது தாய் 'அதிகாரமே எனது மனைவி' (Power is my mistress) அதிகாரமே வாழ்வு என்று இறுமாந்திருந்தவனுக்கு - அந்த அதிகாரம் ஒரு உத்தமியிடம் தோற்றுப்போய்விட்ட செய்தியைச் சுமந்து கொண்டு வந்தது.
'பிரான்ஸ் நாட்டின் சக்கரவர்த்திக்கு - சுதந்திரம் பெறத் துடித்துக் கொண்டிருக்கும் கோசிக்கா என்ற எனது தாய் மண்ணிலிருந்து, இந்த மண்ணின் ஒரு பிரஜை நான் என்ற பெருமிதத்துடன் இலத்தீசியா எழுதுகிறேன்.
எங்கள் தாயகம் பிரான்ஸ் நாட்டின் பிடியிலிருந்து நிச்சயம் ஒரு நாள் விடுதலை அடைந்தே தீரும். இந்த மக்கள் சுவாசிக்கின்ற ஒவ்வொரு மூச்சுக்காற்றிலும் சுதந்திரம் என்ற இலட்சியமே உயிர் நாடியாய் இழையோடுகிறது. சுதந்திரம் என்றால் என்ன என்பதைக் கூட நீ மறந்துவிட்டாயோ என்னவோ...... உன்னைப் பொறுத்தவரை இப்போது அது விளங்கிக்கொள்ள முடியாத விஷயமாகக் கூடப் போயிருக்கலாம். நாங்கள் அடிமைத்தனத்துக்கு எதிராகப் போராடுபவர்கள்.
எங்கள் கோசிக்காத் தீவை அடிமைப்படுத்தி இருக்கின்ற நாட்டின் சக்கரவர்த்தி என்ற வகையில் இனி நீயே எனது முதல் எதிரி!
உன்னுடையது - சாம்ராஜ்ய விஸ்தரிப்புக்கான பேராசை.
எங்களுடையது - சுதந்திரம் என்ற புனித இலட்சியத்திற்கான போராட்டம். பிரான்ஸ் நாட்டைமட்டுமல்ல இந்த உலகம் முழுவதையுமே ஆளுவதாயினும் கூட, அந்த வாழ்வை விட உனது தாய் மண்ணின் சுதந்திரத்துக்கான போராட்டத்தில் அடைகின்ற வீரச்சாவு உன்னதமானது என்பதை எப்படி மறக்க முடிந்தது உன்னால்?
கோசிக்காவின் விடுதலையை வென்றெடுக்க இந்த மண்ணில் ஒரு வீரன் இல்லாமலா போய்விடுவான்? கட்டாயம் இருப்பான். இனி அவன் தான் எனது மகன், நிச்சயமாய் நீயல்ல.....
கோசிக்காவின் மலைகள் கூட உன்னை மன்னிக்கப்போவதில்லை!'
ஒரு சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தி, தாய் மண்ணின் சுதந்திரத்தையே உயிராக மதித்த தாயின் முன், அவளுடைய உன்னதமான உணர்வுகளின் முன் - தோற்றுத்தான் போய்விட்டான்.
ஆம்..... அந்தத் தாயைக் காணுகின்ற பாக்கியம் இறுதி வரைக்கும் நெப்போலியனுக்குக் கிடைக்கவேயில்லை.
*(1992ம் ஆண்டு, சுழநாதம் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற கதை)*
