நிர்வாகத்திறமை, நேர்மை, எளிமை, இரக்ககுணம் போன்ற இன்னோரன்ன பண்புகளுக்காகப் பலராலும் புகழ்ந்து பேசப்பட்ட பெண்மணி, கேரள மாநிலத்தின் மலப்புர மாவட்ட ஆட்சியர், அன்று அந்தக் கல்லூரி மாணவர்களைச் சந்திக்க வருகிறார். அந்த மாவட்டத்தின் மிகப்பெரிய கல்லூரி அது.

விலை உயர்ந்த பட்டுச்சேலை. சேலைக்குப் பொருந்தும் வகையில் கையிலும் கழுத்திலும் அணிகலன்கள், தங்கச்செயின் போட்ட கைக்கடிகாரம், உதட்டுச்சாயம், குதி உயர்ந்த பாதணிகள், இவற்றுடன் கைப்பையை ஏந்தியபடி நாற்புறமும் நோட்டமிட்டுக்கொண்டு வரப்போகும் அந்தப் பெண்மணி எப்படி இருப்பார் என்ற இந்த அடிப்படைக் கற்பனையிலிருந்து கொஞ்சம் கொஞ்சம் வேறுபட்ட கற்பனைகளில், வரப்போகும் ஆட்சியரைப்பற்றிய ஊகங்களில் ஆளாளுக்கு ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள் அந்தக் கல்லூரி மாணவர்கள்.

"இதோ ஆட்சியர் வந்துவிட்டார். எல்லோரும் எழுந்து நின்று வரவேற்புக் கூறுங்கள்" என்ற அதிபரின் அறிவிப்பைத் தொடர்ந்து ஆட்சியர் ஸ்ரீமதி ராணி மண்டபத்துள் வருகிறார்.

'இவரா?'

'இவரா?'

'இவர்தான் எங்கள் ஆட்சியரா?'

எல்லா மனங்களிலும் கேள்விக்கு மேல் கேள்வி!

ஆச்சரியத்துக்கு மேல் ஆச்சரியம்!

சாதாரண சேலை. ஒரு கைக்கடிகாரம். அவர் வேறு எதுவும் அணிந்திருக்கவில்லை.

சரளமான ஆங்கிலத்தில் தெளிவாகப் பேசுகிறார்.

எந்த பந்தாவும் இல்லாத அந்தப் பேச்சில் வெளிப்பட்ட உறுதியும் எளிமையும் எல்லா மாணவர்களையும் கட்டிப்போட்டு விடுகிறது.

பல தரப்பட்ட விடயங்களைப் பேசிய பிறகு, மாணவர்களைப் பார்த்துக் கேட்கிறார்.

"என்னிடம் ஏதாவது கேள்வி இருந்தால் கேளுங்கள்"

"மேடம்.... உங்களுடைய பெயர்?"

"எனது பெயர் ராணி"

"சோய மேய் என்பது?"

"அது என்னுடைய குடும்பப் பெயர்"

தொடர்ந்து மாணவர்களின் வேறு வேறு கேள்விகளுக்கு சலிக்காமல் பதிலளித்த ஆட்சியரிடம் ஒரு மாணவி கேட்டே விட்டாள்.

"அம்மணி! நீங்கள் இத்தனை சாதாரண உடையில் இருக்கிறீர்கள்... அது கூடப் பரவாயில்லை.... ஏன் எதுவிதமான மேக்அப்பும் (makeup) போடவில்லை?"

ராணி இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அதுவரை அவரிடிருந்த உற்சாகம் கரைந்து முகமே மாறிவிட்டது.

மெளனத்தின் அரசாட்சியில் அந்த மண்டபம் முழுவதுமே நிசப்தம் குடி கொண்டது.

ஓரிரு நிமிடங்கள் தான்.

"இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல ஒன்றிரண்டு வார்த்தைகள் போதாது. ஏனெனில், எனது வாழ்க்கையை – நான் கடந்து வந்த அந்தப் பாதையை – முழுவதுமாய் சொல்லவேண்டும். உங்கள் இந்தக் கேள்விக்கான பதில் அங்கேதான் இருக்கிறது..."

அந்தக் கண்களிலும் குரலிலும் வெளிப்பட்ட வேதனையும் ஆற்றாமையும் அனைவரையும் ஒரு கணம் உலுக்கிவிட்டது.

'ஏன் இப்படிக் கேட்டாய்?' என்பதுபோல, ஆட்சியரிடம் அந்தக் கேள்வியைக் கேட்ட மாணவியை நோக்கி பார்வைகளின் கண்டனக் கணைகள் பறந்தன!

"உங்கள் பொன்னான நேரத்தில் ஒரு சில நிமிடங்கள் ஒதுக்கி, நான் சொல்லப்போகிற எனது கதையைக் கேட்பதற்கு நீங்கள் எல்லோரும் தயாராக இருக்கிறீர்களா?"

வார்த்தைகள் எதுவுமற்ற தலையாட்டல்கள் சம்மதம் தெரிவிக்க, ராணி சோய மேய் சொல்லத் தொடங்கினார்.

"ஜார்க்கண்ட் மாநிலம் பற்றி எல்லோரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். அங்கே மைக்கா சுரங்கங்கள் நிறைந்த கோடெர்மா மாவட்டத்தில் பழங்குடியினர் பகுதியில் நாங்கள் வாழ்ந்து வந்தோம்.

அது ஒரு கிராமம். பள்ளிக்கூடம், மருத்துவமனை, மின்சாரம், ஏன் கழிவறைகள் வசதிகூட இல்லாத ஒரு கிராமம் அது.

மழை பெய்தால் ஒழுகும் ஒரு சிறிய குடிசை வீட்டில் அப்பா, அம்மா, இரண்டு சகோதரர்கள், ஒரு சகோதரி இவர்களுடன் நான் வாழ்ந்து வந்தேன். அப்பாவும் அம்மாவும் சுரங்கத் தொழிலாளர்கள். உயிர்களைப் பணயம் வைத்துச் செய்யும் ஒரு கடினமான வேலை அது. சம்பளம் மிக மிகக் குறைவு. ஆனாலும் வேறு வழியில்லை. செய்தே ஆகவேண்டும். ஆறு ஜீவன்களின் உயிர்களைப் பிடித்துவைக்க அந்தக் கிராமத்தில் வேறு என்னதான் செய்ய முடியும்? இத்தனைக்கும் அன்றாடம் எமக்கு உணவாகக் கிடைப்பது ஒன்று அல்லது இரண்டு ரொட்டிகளும் தண்ணீரும்தான்.

எனக்கு நாலு வயசாக இருக்கும்போது அப்பா, அம்மா, இரண்டு சகோதரர்கள் நாலுபேருமே நோய்ப் படுக்கையில் வீழ்ந்தார்கள். சுரங்கங்களில் மைக்கா தூசியைச் சுவாசிப்பதனால் பழங்குடி மக்கள் மத்தியில் இதுபோன்ற நோய்கள் பிரசித்தம். அப்பாவும் அம்மாவும் ஓரளவு உடல்நிலை தேறியபோதும் எனது இரண்டு சகோதர்களும் நோயினாலும், பசி பட்டினியின் கொடுமையினாலும் இறந்துபோனார்கள்.

அப்போது எனக்கு ஐந்து வயசு.

... அதிக பசி ஏற்பட்டதால் எதுவும் செய்ய முடியாத ஒரு நிலையில் நான் தரையில் சுருண்டு படுத்திருந்த ஒருநாளில் அப்பா எனது கையைப் பிடித்து 'வா' என்று சொல்லி,

இரும்புத் தகடுகளால் மூடப்பட்ட ஒரு சுரங்கத்தினுள்ளே கூட்டிப்போனார். அது புகழ்பெற்ற ஒரு மைக்கா சுரங்கம் என்பதைப் பின்னர் அறிந்துகொண்டேன்...."

"...உங்களில் பலர் இந்த மைக்கா பற்றி அறிந்திருப்பீர்கள். மைக்கா (Mica) என்று சொல்லப்படுகின்ற புளோரசன்ட் சிலிக்கேட் (Florescent Silicate) கனிமத்தின் முதல் வகை,

சருமத்தை மென்மையாக்கி ஒளி பெற வைக்கும் ஒப்பனைப் பொருட்களை உருவாக்கப் பயன்படுத்தப்படுகின்றது. சுரங்கங்களின் கீழே பாறைகளின் நடுவே இந்த மைக்காவைச் சேகரிக்கும் பணியில் பல்லாயிரக்கணக்கான ஏழைகள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். நிறுவனங்களுக்கு இது பெருமளவில் லாபம் தருகின்ற ஒரு வியாபாரம். தொழிலாளர்களுக்கோ இந்த மைக்காவின் தூசி பலவிதமான நோய்களை ஏற்படுத்துகின்ற ஒரு எதிரி.

....அப்பா என்னைக் கூட்டிப்போனது இந்தச் சுரங்கத் தொழிலில் ஈடுபடுத்துவதற்காகத்தான். கீழேயுள்ள குகைகள் வழியே ஊர்ந்து சென்று மைக்கா துகள்களைச் சேகரிக்க வேண்டும்....

10 வயசுக்கு உட்பட்ட சிறுவர்கள் மட்டுமே நுழையக்கூடிய குறுகலான குகைகள் அவை. என்னையொத்த இன்னும் ஆயிரக்கணக்கான சிறுவர்கள் பட்டினிக் கொடுமையினால் இந்த வேலையைச் செய்தார்கள்.

....அன்று முதல் நான் மைக்கா தூசியைச் சுவாசிக்க ஆரம்பித்தேன். உண்மையைச் சொல்வதென்றால், ரொட்டி சாப்பிட்டு வயிறு நிரம்பிய எனது முதல்நாள் என்று அந்த நாளைக் குறிப்பிடலாம்.

எட்டு மணி நேரம் உழைத்தால் குறைந்தபட்சம் ஒரு ரொட்டியாவது கிடைக்கும் என்ற நம்பிக்கையில், அன்றாடம் நாங்கள் மைக்கா தூசியை உள்வாங்கிக் கொண்டிருந்தோம்.

ஒரு வருடம் கழிந்தபிறகு எனது தங்கையும் சுரங்கக் குகைகளில் ஊர்ந்து தவழ்ந்து மைக்கா துகள் சேகரிக்கும் வேலையில் ஈடுபட்டார். எங்கள் நாலு பேருடைய உழைப்பிலும் ஓரளவு பட்டினி இல்லாமல் வாழும் நிலை ஏற்பட்டது.

ரு நாள்..... அன்று கடும் மழை பெய்துகொண்டிருந்தது.

கடும் காய்ச்சல் காரணமாக அன்று நான் வேலைக்குப் போகவில்லை. அந்தக் காய்ச்சல் மட்டும் வந்திருக்கா விட்டால் இன்று இப்படி உங்கள் முன் ஒருத்தியாக இந்த ராணி சோய மேய் நின்றிருக்க மாட்டேன். பாறைகளுக்கு நடுவில் அவலமாய் சிதையுண்டுபோன நூறுகளில் அல்லது ஆயிரங்களில் ஒன்றாகி, பெயரில்லாமல் போயிருப்பேன்..."

இதைச் சொன்னபோது ஆட்சியரின் கண்கள் பனித்திருந்தன. மேற்கொண்டு பேசுவதற்கு சில நொடிகள் அவரால் முடியவில்லை. தண்ணீர் குடித்து தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டார்.

'அப்படி என்ன நடந்திருக்கும்?' என்பது போல மாணவர்கள் ஒருவருக்கொருவர் பார்வைகளால் கேள்வி கேட்டுக்கொண்டிருக்க அம்மணி தொடர்ந்தார்.

"ஆம்..... சுரங்கத்தின் அடிவாரத்தில், அங்கிருந்த தொழிலாளர்கள் பார்த்திருக்கும்போதே சுரங்கம் இடிந்து வீழ்ந்து நூற்றுக் கணக்கானவர்கள் நசியுண்டுபோனார்கள்.

அப்பா, அம்மா, என் தங்கை உட்பட.....

ஆறு வயசில் நான் யாருமற்ற அனாதையாக்கப்பட்டேன். அனாதைச் சிறுமி என்ற காரணத்தால் அரசு அகதி மந்திரில் சேர்க்கப்பட்டு அங்கேதான் படித்தேன். எங்கள் கிராமத்திலிருந்து எழுதப்படிக்கக் கற்றுக்கொண்ட முதல் ஆள் நான்தான் என்றால் பாருங்களேன்! காலம் ஒரு ஆட்சியராக என்னை இப்போது உங்கள் முன்கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது.

....இன்றும் கூட இருபதினாயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் பள்ளிக்குச் செல்லாமல் அந்தச் சுரங்கங்களின் இருளில் ஊர்ந்து, தவழ்ந்து மைக்கா துகள்களைச் சேகரிக்கிறார்கள். தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த அவலத்தை நினைக்கும்போதெல்லாம் அது என் உணர்வுகளை உலுக்கி எடுக்கிறது மாணவர்களே!

.... குழந்தைகளுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான வாழ்க்கையைப் பணயம் வைத்துத்தான் கோடிக்கணக்கில் மதிப்புள்ள மைக்கா – அந்தப் பிஞ்சுக் கரங்களால் சேகரிக்கப்படுகிறது. எட்டு மணி நேர உழைப்பு வழங்கக்கூடிய குறைந்தபட்ச ஒன்றிரண்டு ரொட்டிகளுக்காக அந்த சுரங்கத் தொழிலாளர்களும் குழந்தைகளும் தினமும் இலவசமாக உள்வாங்கிக் கொண்டிருக்கும் கொடிய மைக்கா தூசி!

சபிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான அந்த ஏழைக் குழந்தைகளில் ஒருத்தியாக நானும், என் சகோதரர்களும், என் அன்புத் தங்கையும் இன்றுகூட இருப்பதாகவே என் உள்ளுணர்வு என்னை அடிக்கடி வாட்டி வதைக்கிறது.

....வேதனையில் துடித்துப் போகிறேன்....

....அன்புக்குரிய மாணவி ஒருவர் என்னிடம் கேட்டார்.

"நீங்கள் ஏன் மேக்அப் பயன்படுத்துவதில்லை?" என்று,

காரணம் இப்போது தெரிகிறதா மாணவர்களே...?

....துன்பம் ஒன்றை மட்டுமே வரமாய் வாங்கிவந்த ஒரு இனத்தின் சபிக்கப்பட்ட கனவுகள், பாறை இடுக்குகளில் சிதைந்துபோன – இன்னமும் சிதைந்துகொண்டிருக்கின்ற – ஒரு மானுட வாழ்க்கை...."

நீண்டதொரு பெருமூச்சு ஆட்சியரிடமிருந்து வெளிப்படுகிறது. கண்களை மூடி ஒரு நிமிடம் எதுவுமே பேசாமல் இருக்கிறார். மறுபடியும் அவரது குரல் வேதனையோடு வெளிப்படுகிறது.

"....தட்டில் எனக்கு முன்பாக வைக்கப்படும் வகை வகையான உணவு, பட்டினியால் இறந்துபோன என்சகோதரர்களை நினைவூட்டும்போது நான் எப்படி வயிறார உண்ண முடியும்?

....விதம் விதமான பட்டுச் சேலைகளைப் பார்க்கும்போதெல்லாம், எப்பொழுதும் கிழிந்த ஆடைகளையே அணிந்திருக்கும் என் அம்மாவை நினைப்பேன். இன்று இந்தப் பட்டுச் சேலைகளை அணிந்து கொள்வேனாக இருந்தால், என்னுடைய அன்பான ஏழைத்தாயின் நினைவு நெஞ்சில் வந்து மோதி என் மனசாட்சியே என்னைக் கொன்று தின்றுவிடும் என்பது நிச்சயம்...!

.... பணம் படைத்த சீமான்கள் கோடிக்கு மேல் கோடியாக பணம் குவிப்பதற்கு இந்த ஒப்பனைப் பொருட்களின் உற்பத்தி மென்மேலும் தொடர வேண்டும் என்பது விதி! நிரந்தரமாகவே, இருபதினாயிரம் வரையிலான குழந்தைகளின் கல்வி, அவர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கை யாவுமே தொலைக்கப்பட்டு, பரிதாபத்துக்குரிய அந்தச் சிறார்கள் கொடிய மைக்கா தூசியை சுவாசித்துக்கொண்டு வாழ்வது, இந்த மானுட குலத்துக்கே ஒரு சாபக்கேடு என்றோ, அல்லது அதற்கும் மேலாக, ஒரு மிகப்பெரிய அவமானம் என்றோ தான் நான் கருதுகிறேன்.

.... அன்பான எனது மாணவர்களே! சமுதாயத்தின் எதிர்கால சிற்பிகளே! உங்கள் எல்லாக் கேள்விகளுக்குமான பதிலை எனது வாழ்க்கை தந்திருக்குமென்று நம்புகிறேன். உங்கள் அருமையான நேரத்தை என்னுடன் பகிர்ந்துகொண்டதற்கு என்றென்றும் என் நன்றி.

அனைவரையும் வாழ்த்தி விடைபெறுகிறேன்...."

கையசைத்தபடி மண்டபத்தை விட்டு வெளியேறிய ஆட்சியர் ராணி சோய மேய் கூறிய – இதுவரை அவர்கள் அறிந்திராத அதிர்ச்சி தரும் உண்மைகள் ஏற்படுத்திய திகைப்பிலிருந்து விடுபடமுடியாமல் அந்தப் பெண்மணி போன திக்கையே ஒருவித கலக்கத்துடன் பார்த்தபடி, இருக்கைகளிலிருந்து எழுந்திருப்பதைக்கூட மறந்த மாணவர்கள் பலவகை உணர்வுகளின் பிடிக்குள் சிக்கி, தவிப்பில் ஆழ்ந்து போனார்கள்.