வாஷிங்டனின் வீதியொன்றில் ஒரு மனிதர் செய்தித்தாள்கள் விற்றுக்கொண்டிருக்கிறார். அந்த வழியால் போய்க்கொண்டிருந்த பதின்ம வயதுச் சிறுவனுடைய மனதில் செய்தித்தாள் ஒன்றை வாங்கவும் வாசிக்கவும் ஆர்வம் ஏற்படுகிறது. வாசிப்பில் அவனுக்கு அளவற்ற ஈடுபாடு. ஆயினும் செய்தித்தாள் வாங்குமளவுக்கு அவனிடம் பணம் இல்லை. அவனுடைய குடும்பம் வறுமைச் சூழலில் இருப்பதனால், விரும்பிய எதையும் வாங்கும் வசதி அந்தப் பையனுக்கு இருக்கவில்லை.
அவன் பெயர் ஹென்றி.
"நீ ஏன் செய்தித்தாள் வாங்கவில்லை?" என்று அந்த மனிதர் ஹென்றியைப் பார்த்துக் கேட்டார்.
"மன்னிக்க வேண்டும்.. என்னிடம் அதற்குரிய பணம் இல்லை."
"அது பரவாயில்லை.. நீ காசு தர வேண்டாம்.. நான் உனக்கு இலவசமாக ஒரு பத்திரிகை தருகிறேன்."
"இல்லை.. வேண்டாம்.. இலவசமாக வாங்குவதற்கு எனக்கு விருப்பமில்லை"
"அது பரவாயில்லை பையா! இந்தா ஒரு பத்திரிகை, நீ வாசி" என்று ஹென்றியிடம் ஒரு பத்திரிகையை அந்த மனிதர் கொடுத்தார்.
ஒரு வருடம் கழிந்தது.
மீண்டும் அதே போல ஒரு சம்பவம்.. இப்பொழுதும் ஹென்றியிடம் பணம் இருக்கவில்லை. வேண்டாம் என்றான்.
"பரவாயில்லை என் அன்பான பையனே! இதை உனக்கு என்னுடைய லாபத்தில் தான் தருகிறேன்.. வாங்கிக் கொள்" என்று கூறிய மனிதரிடமிருந்து ஹென்றி பத்திரிகையைப் பெற்றுக் கொண்டான்.
**பதினைந்து வருடங்கள் கழிந்தன.**
இப்பொழுது, பில் கேட்ஸ் எனப்பட்ட வில்லியம் ஹென்றி, ஒரு பெரிய முதலாளியாக, கணினிப் புரட்சியின் திறமை வாய்ந்த நாயகனாக, உலகம் முழுவதிலும் அறியப்பட்ட ஒரு பிரபலம்!
உலகின் மிகப் பெரிய செல்வந்தர்களில் ஒருவராக விளங்கும் வில்லியம் ஹென்றி கேட்ஸ் (William Henry Gates) ஒரு பரோபகாரியும் கூட. இவற்றை விட, 1970, 80 களின் நுண்கணினி (Microcomputer) புரட்சியின் ஒரு முன்னோடி!
தனக்கு இலவசமாகப் பத்திரிகை தந்த அந்த மனிதரைப் பற்றி அடிக்கடி பில் கேட்ஸ் நினைத்துக் கொள்வார்.
இப்பொழுது முதுமை அடைந்திருக்கக் கூடிய அந்த மனிதருக்கு ஏதாவது வெகுமதி வழங்க வேண்டும் என்றெண்ணி, அவரைத் தேட ஆரம்பித்தார். ஒன்றரை மாதங்கள் தேடிய பிறகு அந்த மனிதரைக் கண்டார். ஹென்றி நினைத்தது போலவே அந்த மனிதர் முன்னரை விட மிகவும் முதுமை அடைந்திருந்தார்.
ஹென்றி அவரருகில் சென்று,
"எனக்கு நீங்கள் ஒரு தடவை இலவசமாகப் பத்திரிகை கொடுத்தது ஞாபகமிருக்கிறது.. நான் உங்களுக்கு ஏதாவது வெகுமதி தர வேண்டும்.. தயவு செய்து உங்கள் விருப்பம் எதுவோ அதைத் தெரியப்படுத்துங்கள்.." என்று கேட்டார்.
"நான் உங்களுக்கு ஒரு தடவையல்ல.. இரண்டு தடவைகள் பத்திரிகை தந்தேன்.. நீங்கள் யார் என்பதும், இப்பொழுது என்ன தகுதியில் இருக்கிறீர்கள் என்பதும் நானறிவேன்.. உலகின் மிகப் பெரிய செல்வந்தர்களில் நீங்களும் ஒருவர் என்பதும் தெரியும்" என்று அந்த மனிதரிடமிருந்து பதில் வந்தது.
"உங்களை நான் சந்தித்தது மிகப் பெரிய சந்தோஷம்.. என்னிடம் என்ன வேண்டுமானாலும் கேளுங்கள்.. அதை நான் உங்களுக்குத் தருகிறேன்" என்று பில் கேட்ஸ் கூறினார்.
"மன்னிக்க வேண்டும் ஐயா! நான் முன்னர் செய்த அந்த உதவிக்காக எனக்கு எதையும் செய்யத் தயாராக இருக்கும் ஒரு செல்வந்தராக இப்பொழுது நீங்கள் இருக்கலாம்...
ஆனால் ஐயா! உங்களுக்குத் தேவைப்பட்ட ஒரு நேரத்தில் நான் செய்த அந்த உதவிக்கு, இப்பொழுது நீங்கள் செய்ய வரும் எந்த உதவியும் ஈடாக முடியாது. உங்களிடமிருந்து எதையும் பெற்றுக்கொள்ள நான் விரும்பவில்லை.. மன்னியுங்கள் ஐயா!"
என்று கூறி அப்பால் நடந்த அந்த ஏழை மனிதனுடைய பதிலால் பில் கேட்ஸ் அதிர்ந்து போய் விட்டார்.
'உண்மையான செல்வந்தன் நானல்ல... அந்த ஏழை முதியவன் தான்' என்று பில் கேட்ஸ் இன் மனம் தனக்குத்தானே கூறிக்கொண்டது.
ஊற்றுக் கண்.
